Published:Updated:

GOAT கான்டே, தாமஸ் டுகெல், செல்சீ… ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது எப்படி?

Thomas Tuchel & N'golo Kante

என்கோலோ கான்டேவின் மேன் ஆப் தி மேட்ச் செயல்பாடு, தாமஸ் டுகெலின் திட்டமிடல், செல்சீ வீரர்களின் துடிப்பு... 13 முறை சாம்பியன் ரியல் மாட்ரிட்டை வெளியேற்றிருக்கிறது புளூஸ்!

GOAT கான்டே, தாமஸ் டுகெல், செல்சீ… ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது எப்படி?

என்கோலோ கான்டேவின் மேன் ஆப் தி மேட்ச் செயல்பாடு, தாமஸ் டுகெலின் திட்டமிடல், செல்சீ வீரர்களின் துடிப்பு... 13 முறை சாம்பியன் ரியல் மாட்ரிட்டை வெளியேற்றிருக்கிறது புளூஸ்!

Published:Updated:
Thomas Tuchel & N'golo Kante

இஸ்தான்புல் நகரில் அதிசயத்தை நிகழ்த்த இம்முறை இரண்டு இங்கிலாந்து கிளப்கள் தயாராகியிருக்கின்றன. 2020-21 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு மான்செஸ்டர் சிட்டி, செல்சீ அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன. நேற்று அதிகாலை நடந்த போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 2-0 என மான்செஸ்டர் சிட்டி வீழ்த்த, அதே ஸ்கோரில் ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றியிருக்கிறது செல்சீ. இந்த 3 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக இரு இங்கிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதப்போகின்றன!

மாட்ரிட்னா அடிப்போம்!

மாட்ரிட் டீம்னாலே அடிப்போம் மோடில்தான் இருக்கிறது செல்சீ. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோவை வெளியேற்றியவர்கள், அரையிறுதியில் 13 முறை சாம்பியன் ரியல் மாட்ரிட்டுக்கு தண்ணி காட்டினர். அரையிறுதியின் இரண்டு சுற்றுகளிலுமே ஆதிக்கம் செலுத்தி அசத்தலாக இறுதிப் போட்டிக்குள் கால் பதித்திருக்கிறது 2012 சாம்பியன்.

Chelsea
Chelsea
AP

மாட்ரிட்டில் கடந்த வாரம் நடந்த முதல் சுற்றில் மிகவும் துடிப்பாக ஆடிய செல்சீ, அந்தப் போட்டியை 1-1 என டிரா செய்தது. முதல் பாதியில் செல்சீ விங்கர் கிறிஸ்டியன் புலிசிக் அட்டகாசமாக ஒரு அவே கோல் அடிக்க, தன் கிளாஸை நிரூபிக்கும் வகையில், overhead கிக் மூலம் கோலடித்து போட்டியை சமனாக்கினார் கரிம் பென்சீமா. பென்சீமா போல ஒரு ஃபினிஷர் இருந்திருந்தால், செல்சீ உருவாக்கிய வாய்ப்புகளுக்கு அந்த அணி குறைந்தது 3 அல்லது 4 கோல்களாவது அடித்திருக்கும்.

ஃபினிஷிங் சரியில்லையேப்பா…

'எனக்கு பெனால்டி ஏரியானாதாங்க பயம். மத்தபடி நல்லா ஆடுவேங்க’ - இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே இதுதான் டிமோ வெர்னர் மனநிலை. தன் வேகத்தின் மூலம் நடுகள வீரர்களுக்கும் ஃபுல் பேக்குகளுக்கும் பிரச்னைகள் உண்டாக்கியவர், கோல்கீப்பர்களுக்கு சவால் அளிக்கத் தவறவிடுகிறார். மாட்ரிட்டில் நடந்தது லண்டனில் நேற்றும் நடந்தது. 18-வது நிமிடத்தில் சில்வெல் கொடுத்த கிராஸை கோலாக்கினார் வெர்னர். ஆனால், ரன் அப்பில் சொதப்பி ஆஃப் சைட் பொசிஷனில் இருந்துவிட்டார். கோல் மறுக்கப்பட்டுவிட்டது.

Timo Werner
Timo Werner
AP

சொல்லப்போனால், வெர்னருக்கு மட்டுமே இந்தப் பிரச்னை இருக்கவில்லை. செல்சீ வீரர்கள் அனைவருமே ஃபினிஷிங்கில் சொதப்பினார்கள். நேற்று ஹாவர்ட்ஸ் இரண்டு முறை கிராஸ் பாரை அடித்தார். கான்டே, வெர்னர் இருவரும் மாட்ரிட் கோல்கீப்பர் கோர்ட்வாவுடன் 1 on 1 சென்று, அதை அவருக்கே அடித்தனர். மிகச் சிறந்த வாய்ப்பொன்றை கோல் போஸ்டுக்கு மேலே அனுப்பிவைத்தார் மேசன் மௌன்ட். இப்படி அட்டாக்கர்கள் ஒருபக்கம் கோட்டைவிட, தியாகோ சில்வாவின் இரண்டு ஹெட்டர்களும் ‘ஆன் டார்கெட்’ ஆக அமையவில்லை. இந்த வாய்ப்புகளில் பாதியை கோலாக்கியிருந்தாலும், செல்சீ மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்!

மெர்சல் மெண்டி

ஒரு அணி தொடர்ந்து வாய்ப்புகளைத் தவறவிடும்போது எதிர்பாராத ஒரு நிகழ்வு, விரக்தியின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களை அதன் உச்சத்துக்கே அழைத்துச்செல்லும். எதிர்பாராத நேரத்தில் திடீரென அடிவிழும். ஒரு கோல் விழும். அதுவும் எதிரணியில் பென்சீமா போன்ற ஒரு வீரர் இருக்கும்போது அது சாத்தியமே. அதனால், ஆரம்ப கட்டத்தில் இருந்தே செல்சீ ஒரு மெல்லிய கோட்டின் மீதே நடக்கவேண்டியிருந்தது. ஏனெனில், மாட்ரிட்டுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரேயொரு கோல்தான்.

Edourd Mendy
Edourd Mendy

பென்சீமா அந்த கோலுக்கு மிக அருகில் தன் அணியை அழைத்துச் சென்றார். 26-வது நிமிடத்தில் அவர் பாக்சுக்கு வெளியே இருந்து அடித்த அட்டகாசமான ஷாட்டை, அமர்க்களமாகத் தடுத்தார் செல்சீ கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டி. கடந்த சில வாரங்களாக, தன் அணியின் அட்டாக்கர்கள் ஹீரோக்களாகிக்கொண்டிருக்க, இவரும் தன்னால் முடிந்த ஹீரோயிஸங்களை செய்துகொண்டிருந்தார். இன்னொருமுறை இடது விங்கில் இருந்து வந்த கிராஸை, பென்சீமா சூப்பராக இலக்கை நோக்கி ஹெட் செய்தார். அந்த இடத்தில் மெண்டி இல்லாமல் இருந்திருந்தால், மாட்ரிட்டுக்கு முதல் கோல் விழுந்திருக்கும்.

GOAT (எ) GOD (எ) கான்டே

மெண்டி முதல் ஷாட்டைத் தடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்ப்புறத்தில் கோல் கணக்கைத் தொடங்கியது செல்சீ. தங்கள் பாதியில் இருந்து கிறிஸ்டென்சன் கொடுத்த பாஸை, தன் சாதுர்யமான டச்சின் மூலம் வெர்னருக்கு அனுப்பினார். அவரது சூப்பரான டச், நாசோவை தன் பொசிஷனிலிருந்து தவறவைத்தது. வெர்னருடன் கான்டே 1-2 ஆட, ராமோஸ், நாசோ என ஒவ்வொரு மாட்ரிட் டிஃபண்டரும் தங்கள் பொசிஷனிலிருந்து தவறினார்கள். ஃப்ரீயாக இருந்த ஹாவர்ட்ஸ் வசம் வெர்னரின் பாஸ் வர, அதை அவர் கோர்ட்வாவுக்கு மேல் அடித்துவிட்டார். ஆனால், அது கிராஸ் பாரில் பட்டு எகிறியது. இப்போது வெர்னரும் யாராலும் மார்க் செய்யப்படவில்லை. கோல் போஸ்டில் கீப்பரும் இல்லை. கீப்பர் இருந்ததால்தானே அவருக்குப் பிரச்னை. கூலாக ஹெட் செய்து செல்சீக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் வெர்னர்.

N'golo Kante
N'golo Kante

கான்டே அந்த டச்சை எடுத்த விதம்தான் மாட்ரிட் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஏனெனில், அட்டாக்கைத் தொடங்குவதற்கான பொசிஷனில் அவர் இருக்கவில்லை. கோல் போஸ்டுக்கு எதிர்ப்புறம் திரும்பியிருந்தார் கான்டே. அதனால், நிச்சயம் ஒரு வேகமான மூவ்மென்ட்டை ஒருவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். வேகமும், நளினமும் கலந்து அவர் செய்த அந்த ஒரு மூவ்மென்ட் அனுபவம் வாய்ந்த ரியல் மாட்ரிட் நடுகளத்தையும் டிஃபன்ஸையும் ஆட்டிப் பார்த்தது.

டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டராக மட்டுமே அறியப்பட்டவர், இந்த சீசன் தன் டிஃபன்ஸிவ் வேலைகளோடு சேர்ந்து அட்டாக்கிலும் ஆட்டம் காட்டுகிறார். அரையிறுதியின் முதல் சுற்றிலுமே, மாட்ரிட் நடுகளத்தில் இருந்த இடைவெளிகளை சிறப்பாகப் பயன்படுத்தி கவுன்ட்டர் அட்டாக்குகளை ஆரம்பித்துவைத்தார். நேற்றும் அந்த வேலையை செவ்வன செய்தார் இந்த லிட்டில் சாம்பியன்.

N'golo Kante
N'golo Kante

இரண்டாவது கோலைத் தொடங்கிவைத்ததும் இவர்தான். செல்சீ கேப்டன் ஆஸ்பிளிகியூட்டா அடித்த பந்து அட்டாகிங் தேர்டில் பறந்துகொண்டிருந்தது. அதைக் கிளியர் செய்ய மாட்ரிட் கேப்டன் ரமோஸும், அவரை சேலஞ்ச் செய்ய புலிசிக்கும் ஓடினார்கள். மற்றவர்கள் எல்லோரும் மிகவும் சாவகாசமாக இருந்தார்கள். மாட்ரிட் நடுகள வீரர்கள் மிகவும்… மிகவும் சாவகாசமாக இருந்தார்கள். அந்த இடத்தில் அட்டாக் தொடங்கப்படும் என்றும் அவர்கள் நினைக்கவில்லை. ஏனெனில், ரமோஸ் மீது நம்பிக்கை.

அனுபவம் வாய்ந்த ரமோஸ், எதிர்பார்த்ததுபோல் அந்த ஏரியல் பாலை வென்று, அருகில் இருந்த நாசோவுக்கு ஹெட் செய்தார். களத்தில் இருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் சாவகாசமாக நடக்க, ஒரு உருவம் மட்டும் புயல் வேகத்தில் ஓடியது - என்கோலோ கான்டே..! நாசோ பந்தைத் தொடுவதற்குள் வேகமாகச் சென்று மீட்டெடுத்தார். மாட்ரிட் வீரர்கள் சுதாரிப்பதற்குள் புயலென முன்னேறுகிறார்.

Mason Mount's goal
Mason Mount's goal
AP

குரூஸ், மோட்ரிச் இருவரும் பின்தங்கிவிட்டார்கள். மூன்று சென்டர்பேக்குகள் ஒருவர் (நாசோ) பந்தை எடுக்கச் சென்று விழுந்துவிட்டார். மீதமிருப்பது மிலிடாவோ & ரமோஸ். மேசன் மௌன்டை மார்க் செய்யும் வேலையை மிலிடாவோ செய்யவேண்டும். வேறு வழியே இல்லை. கான்டேவுக்கும் போஸ்டுக்குமான இடைவெளியைக் குறைக்க, நடுவே நகர்கிறார் ரமோஸ். முன்பு, ரமோஸுக்கு சவால் கொடுத்த புலிசிக் இப்போது தனியாக விடப்படுகிறார். அவ்வளவே. கான்டே அவருக்கு பாஸ் செய்கிறார். ஷாட் அடிக்க முடியாததால், சரியான தருணத்துக்குக் காத்திருக்கிறார் புலிசிக். மிலிடாவை ஏமாற்றி ஒரு அடி முன்னே வருகிறார் மௌன்ட். இப்போது அவருக்குப் பாஸ் செய்கிறார் புலிசிக். ஷாட். கோல். கேம் ஓவர்!

தி தாமஸ் டுகல் எஃபெக்ட்

13 முறை ஐரோப்பாவின் சாம்பியன் ஆன அணியை அநாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறது செல்சீ. 3 மாதங்கள் முன்பு பயிற்சியாளர் லாம்பார்ட் வெளியேற்றப்பட்டு தாமஸ் டுகல் பதவியேற்றபோது, இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், மிகப்பெரிய மாற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் டுகல். லாம்பார்ட் இருந்த சமயத்தில் அணிக்குள் வருவதற்கே தடுமாறிய ஆன்டோனியோ ருடிகர், ஆண்ட்ரஸ் கிறிஸ்டென்சன் இன்று செல்சீயின் தவிர்க்கமுடியாத வீரர்களாகியிருக்கிறார்கள். தன் பழைய வேகத்தைக் காட்டமுடியாமல் இருந்த கான்டே, இன்று ஏலியன் லெவல் அடைந்துவிட்டார். பெரும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருந்த வெர்னர், ஹாவர்ட்ஸ் இப்போதெல்லாம் கோல் போஸ்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Thomas Tuchel
Thomas Tuchel
AP

தனி நபர் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், ஒரு அணியாகவும் செல்சீ மாபெரும் மாற்றம் கண்டிருக்கிறது. அவரது டெக்னிக்கள் திட்டங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது. Off the ball, மிகவும் கவனமாக செயல்படுகிறது செல்சீ. முன்பு செய்துகொண்டிருந்த கவனக்குறைவான தவறுகளைத் தவிர்த்துக்கொண்டிருப்பதே, அவர்களின் டிஃபன்ஸை பெரிதாக மாற்றியிருக்கிறது. நேற்றைய போட்டியில் நடந்த ஒருசில நிகழ்வுகளே, செல்சீ கண்டிருக்கும் மாற்றத்தைச் சொல்லிவிடும்.

அரையிறுதியின் முதல் சுற்றின்போது, செல்சீயின் pressing மாட்ரிட் நடுகளத்தை ஆட்டம் காண வைத்தது. அதை ரியல் மாட்ரிட் வீரர்களே ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதுவொன்றும் கண்மூடித்தனமான pressing இல்லை. ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு செய்யப்பட்டவை. ஆட்டத்தின் கடைசி தருணங்களில் அத்தனை மாட்ரிட் வீரர்களும் செல்சீ பாக்ஸை முற்றுகையிடுகிறார்கள். தங்கள் டிஃபன்ஸிவ் லைனை சரியாக தக்கவைத்துக்கொண்டது செல்சீ. இடது விங்கில் பாக்சுக்கு மிகவும் அருகில் நிற்கிறார் நாசோ. விங்பேக் ஆஸ்பிளிக்கியூட்டா அமைதியாக இருக்கிறார். Press செய்யவில்லை.

Chelsea into their third UCL final!
Chelsea into their third UCL final!
AP

தனக்குப் பின்னால் இருந்த ஹசார்டுக்குப் பந்தை பாஸ் செய்கிறார் நாசோ. இப்போது மின்னலெனப் பாய்ந்து press செய்தார் ஆஸ்பி. தாங்கள் ‘மேன் மார்க்’ செய்யும் வீரர்களை மட்டுமே press செய்யவேண்டும் என்பதில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தார்கள் செல்சீ வீரர்கள். இத்தனைக்கும் ஹசார்டைவிட நாசோவே advanced பொசிஷனில் இருந்தார். நாசோவை press செய்யப்போயிருந்தால் ஹசார்ட் பாக்ஸ் நோக்கி நகர்வதற்கு இடைவெளி கிடைத்திருக்கும். அதைக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இப்படி அடிப்படையான விஷயங்களில் மிகவும் தெளிவோடு செயல்பட்டது செல்சீ. நுணுக்கமான விஷயங்களுக்குக் கூட டுகெல் தொடர்ந்து அறிவுரைகள் கொடுப்பார் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது, 30 நொடிகள் ஆட வந்த ஜிரூடிடம் 30 நொடிகள் டச் லைனில் அவர் கொடுத்துக்கொண்டிருந்த அறிவுரைகளில் தெரிந்தது. இந்த திட்டமிடலும், அதை சரியாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் செல்சீ வீரர்களும், ஐரோப்பாவில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.