யூரோ கோப்பை கால்பந்து போட்டி 12-ம் தேதி அதிகாலை இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கியது. 60-வது ஆண்டு சிறப்பு தொடர் என்பதால், இப்போட்டி ஐரோப்பாவின் 11 இடங்களில் நடத்தப்படுகிறது. பி பிரிவில் டென்மார்க், ஃபின்லாந்து அணிகள் மோதிய போட்டி, கோபன்ஹேகனில் உள்ள பெர்டா மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஃபின்லாந்து அணிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. ஏனெனில், உலக அரங்கில் ஒரு முக்கிய தொடரில் அவர்கள் பங்கேற்பது இதுதான் முதல் முறை. அதனால், ஃபின்லாந்து ரசிகர்களின் உணர்வு ஊற்றுக்கு நடுவேதான் இந்த ஆட்டம் தொடங்கியது.
பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த போட்டியின் 42-வது நிமிடத்தில், திடீரென கீழே விழுந்தார் டென்மார்க் அணியின் ஸ்டார் ப்ளே மேக்கர் கிறிஸ்டியன் எரிக்சன். விழுந்தவர் எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்ததால், நடுவர் ஆன்டனி டெய்லர் உடனடியாக மருத்துவர்களை அழைத்தார். எங்கே விழுந்தவரின் சுவாசக்குழாய் நாக்கால் அடைபட்டிருக்குமோ என்று டென்மார்க் வீரர்கள் உடனடியாக பரிசோதித்தார்கள். மருத்துவர்கள் வந்து சில நேரம் சிகிச்சையளித்தும் அவர் எழாமல் போக, இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்யும் CPR சிகிச்சை அளிக்கப்பட்டது.

சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். கீழே விழுந்துகிடந்த எரிக்சனை டென்மார்க் வீரர்கள் வட்டமாகச் சுற்றி நின்று மறைத்திருந்தனர். டென்மார்க் ரசிகர்கள் மட்டுமல்லாது ஃபின்லாந்து ரசிகர்களும் அவர் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தனர். நீண்ட நேரம் சிகிச்சையளிக்கப்பட்டு, களத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டார் எரிக்சன். அதுவரை அவர் நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாததால், பற்றம் குறையாமலேயே இருந்தது. ஆட்டம் நிறுத்தப்பட்டதாக போட்டி நிர்வாகிகளும் அறிவித்தனர்.
சில நிமிடங்கள் கழித்து, எரிக்சன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கண் விழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதும்தான் அனைவருக்கும் மூச்சே வந்தது. அதன்பிறகு, இரு அணி வீரர்களும் கேட்டுக்கொண்டதால், போட்டி மீண்டும் தொடர்ந்தது. டென்மார்க் வீரர்கள் களத்துக்குள் நுழைந்தபோது ஃபின்லாந்து வீரர்கள் உள்பட அனைவரும் அவர்களை கரகோஷங்களால் வரவேற்றனர். ஃபின்லாந்து ரசிகர்கள் எல்லோரும் 'கிறிஸ்டியன்' என்ற கோஷம் எழப்ப, டென்மார்க் ரசிகர்கள் 'எரிக்சன்' என்று சொல்ல, அந்தத் தருணம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

டென்மார்க் வீரர்கள் உத்வேகமாக போட்டியைத் தொடர்ந்தாலும், ஃபின்லாந்து டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஃபினிஷிங் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. விங்கில் இருந்து வாய்ப்புகளை உருவாக்கினார்கள். களத்தின் நடுவே எரிக்சன் இல்லாததை நன்றாக உணர முடிந்தது.
இன்னொரு பக்கம் ஃபின்லாந்து ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கே தடுமாறியது. டிஃபன்ஸில் மட்டுமே கவனம் செலுத்தியவர்களால், டென்மார்க் நடுகளத்தையே தாண்ட முடியவில்லை. ஆனால், 59-வது நிமிடத்தில் கிடைத்த ஒரேயொரு வாய்ப்பை அட்டகாசமாகப் பயன்படுத்தியது அந்த அணி. இடது விங்கில் இருந்து வந்த கிராஸை அட்டகாசமாக ஹெட்டர் மூலம் கோலாக்கினார் பொயன்பயோ. உலக அரங்கில் தங்கள் அணியின் முதல் கோலை ஃபின்லாந்து ரசிகர்கள் கொண்டாட, டென்மார்க் ரசிகர்கள் உடைந்துபோயினர்.

74-வது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஹோயிபியே அதை மிகமோசமாக எடுத்துத் தவறவிட்டார். பந்தை சரியாகக் கணித்துத் தடுத்தார் ஃபின்லாந்து கோல்கீப்பர் லூகாஸ் ஹடின்ஸ்கி. கடைசிவரை டென்மார்க் வீரர்கள் போராடியும் ஃபின்லாந்து அணியின் தீர்க்கமான டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. 1-0 என வென்று, யூரோ வரலாற்றில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஃபின்லாந்து.