Published:Updated:

`Hand of God' Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் - மாவீரன் கடவுளான கதை!

மரடோனா

'Hand of God' கோல் அடித்த போட்டியிலேயே மரடோனா இன்னொரு கோலையும் அடித்தார். அதுதான் 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல்.

`Hand of God' Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் - மாவீரன் கடவுளான கதை!

'Hand of God' கோல் அடித்த போட்டியிலேயே மரடோனா இன்னொரு கோலையும் அடித்தார். அதுதான் 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல்.

Published:Updated:
மரடோனா

கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் வருகின்ற 18-ம் தேதி  கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

என்னதான் க்ளப் அணிகளுக்காக ஆடினாலும் இளம் வீரர்களும் பல்வேறு ஜாம்பவான்களும் அவர்களின் தாய் நாட்டிற்காக களமிறங்கும் போது நிகழ்த்தும் சாதனைகள் கால்பந்து உலகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படியாக கால்பந்தின் ஆகச்சிறந்த வீரர் ஒருவர் உலகக்கோப்பைத் தொடரில் நிகழ்த்திய மாயவித்தையை பற்றிய குட்டி ரீவைண்ட் இங்கே!

கால்பந்தின் காட்ஃபாதர் டியாகோ மரடோனா 1986 உலகக்கோப்பையில் நிகழ்த்தி காட்டியவற்றிற்கு வரலாற்றில் என்றைக்குமே தனி இடம் உண்டு. அதுவரை அர்ஜென்டினா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்த மரடோனா அந்த உலகக்கோப்பைக்கு பின்தான் கடவுளாக அவதரித்தார். 1960 அக்டோபர் 30-ம் தேதி அர்ஜென்டினாவில் லானஸில் பிறந்தார் மரடோனா.

அர்ஜென்டினா அணிக்காக 93 போட்டிகள் விளையாடி 34 கோல்கள் அடித்திருக்கிறார். இந்த 34 கோல்களில் அந்த இரண்டு கோல்களுக்கு மட்டும் ஒரு தனிப்பட்ட வரலாறும் சிறப்பும் உண்டு.
மரடோனா
மரடோனா

1986 உலகக்கோப்பையை கால்பந்து ரசிகர்களால் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. குறிப்பாக கால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றிருந்தது. அர்ஜென்டினா அடித்த இரண்டு கோல்களும் மரடோனாவால் அடிக்கப்பட்டவைதான். அவர் அடித்த இரண்டு கோல்களில் முதல் கோலை மரடோனா கையை பயன்படுத்தி கோலாக்கியதாக சர்ச்சை எழுந்தது. உண்மையிலேயே அந்த கோலை மரடோனா கையால்தான் அடித்திருந்தார். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பாக்ஸூக்குள் பாஸாகி தன்னை நோக்கி வந்த பந்தை மரடோனா ஹெட்டர் செய்ய முயன்றிருந்தார். அப்போது தலைக்குப் பதிலாக அவரின் கை பந்தில் பட்டு கோலாகியிருந்தது. களநடுவர்களும் இதைக் கவனிக்கவில்லை. சரியாக அடிக்கப்பட்ட கோல்தான் என அறிவித்துவிட்டனர்.

போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கோல் குறித்து கேட்கப்பட்ட போது `அது கடவுளின் கை' என மரடோனா லாகவமாக பதில் சொல்லியிருந்தார். அதுவே அவருக்கு ‘The hand of God’ என்ற பெயர் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தது.

அந்த கோலை சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளாலும் மரடோனாவின் பதிலாலும் 'Hand of God' கோல் எப்போதுமே பேசுபொருளாக பிரபலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இதே போட்டியில் மரடோனா இன்னொரு கோலையும் அடித்திருந்தார். அந்த கோலை எந்தச் சர்ச்சைகளாலும் சூழ்ந்து கொள்ள முடியாது. யாரும் அந்த கோலில் இம்மியளவு குறையை கூட கண்டறிய முடியாது.

ஏனெனில், மரடோனா அடித்த அந்த கோல்தான் 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல்.

86-ல் மெக்சிகோவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் சமபலத்துடன் களமிறங்கியிருந்தன. இங்கிலாந்து அணி 1966 உலக கோப்பையை வென்றிருந்தது. அதேபோல் 1978 உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றிருந்தது. மேலும், அர்ஜென்டினாவுக்கு பிரிட்டிஷாருக்கும் இடையே நடந்த ஃபாக்லாந்து போரின் சுவடுகளும் இந்தப் போட்டியை பெரும் எதிர்பார்ப்புமிக்கதாக மாற்றியிருந்தது. மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணியில் ஜார்ஜ் வந்தோனோ, ரிச்சோ ஜுவாட்டி எனச் சிறந்த வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்து அணியில் சிறந்த கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன், லைனர் என எதிர்தரப்பும் வலுவாகவே இருந்தது.

Maradona Goal
Maradona Goal
FIFA

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. 51-வது நிமிடத்தில் மரடோனாதான் முதல் கோலை அடித்தார். அதுதான் Hand of God கோல். அடுத்து 55-வது நிமிடத்தில் மீண்டும் மரடோனா ஒரு கோலைப் போட்டார்.  இங்கிலாந்து வீரர்கள் பீட்டர் பியர்ட்ஸ்லி, பீட்டர் ரீட், டெர்ரி புட்சர், டெர்ரி ஃபென்விக், கோல் கீப்பர் பீட்டர் ஷில்டன் ஆகியோரை கடந்தே மரடோனா அந்த கோலை அடித்திருந்தார். அர்ஜென்டினாவின் பாதி பகுதியிலிருந்தே மரடோனா பந்தை டேக் ஓவர் செய்துவிட்டார்.

அங்கிருந்து அடுத்த 68 மீட்டர்களுக்கு பந்துக்கும் அவருக்கும் மட்டும்தான் உரையாடல். இடையில் யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மரடோவின் அந்தத் துரிதமான கால்களுக்கும் அதன் ட்ரிப்பிள்களுக்கும் இங்கிலாந்து வீரர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

கோல் கீப்பர் ஷில்டன் மரடோனாவின் லாங் ட்ரிப்பிளை கவனித்து சரியான பாதையில் பாயத் தயாராக இருந்தார். அவரையும் சிறிய ட்ரிப்பிள் மூவ்மெண்ட்டிலேயே குழப்பி அட்டகாசமாக கோலாக்கியிருந்தார். போட்டி நடந்த அந்த எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ரசிகர்கள் யாருமே இல்லை. எதிரணியும் யாரும் இல்லை. ஏன் சக வீரர்கள் கூட இல்லை. அங்கே அந்த கோல் நிகழ்ந்த தருணத்தில் அந்த உலகத்தில் ஆள் அரவமற்ற ஒரு மைதானமும் ஒரு கால்பந்தும் கூடவே மரடோனாவும் மட்டுமே இருந்தனர். மரடோனா இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்துகொண்டுதான் அந்த கோலை அத்தனை சுலபமாக அடித்திருப்பாரோ எனப் பல சமயங்களில் தோன்றும்.

இப்படி ஒரு கோல் இருபதாவது நூற்றாண்டின் ஆகச் சிறந்த கோல் என்ற பெருமையை பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
மரடோனா
மரடோனா
இந்தப் போட்டியில் மரடோனா அணிந்திருந்த ஜெர்ஸி சமீபத்தில் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

மரடோவின் ஜெர்ஸிக்கு விலையை நிர்ணயம் செய்துவிட முடியும். ஆனால், அவரால் நிகழ்ந்த அந்த வரலாற்றுத் தருணம் விலைமதிப்பே அற்றது.

தொடரின் இறுதிவரை சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று சாம்பியனானது. இந்தத் தொடரில் மரடோனா 5 கோல்களையும் 5 அசிஸ்ட்களையும் செய்திருந்தார். எல்லாமே வரலாறுதான். ஆயினும், அந்த Hand of God-ம் Goal of the Century-ம் மட்டும் எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஸ்பெசல்தான்!