Published:Updated:

கத்தாரைக் கலங்கடித்த `பெருஞ்சுவர்' குர்ப்ரீத்... இந்திய கால்பந்தின் மகத்தான போட்டி #BackTheBlue

Gurpreet Singh Sandhu
Gurpreet Singh Sandhu ( twitter.com/IndianFootball )

நடுகளத்தில் தாபாவையும் போர்ஜஸையும் ஏமாற்றினார்கள். ராகுல் பெகே, ஜிங்கன் போன்றவர்களையும் ஏமாற்றினார்கள். ஆனால்... அவர்களால் அந்தக் கடைசி மனிதனை ஏமாற்ற முடியவில்லை. குர்ப்ரீத்தை ஏமாற்ற முடியவில்லை..!

94 நிமிடங்கள் முடிந்து நடுவர் விசில் அடித்தபோது, ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் களத்தில் விழுந்து கொண்டாடுகின்றனர். பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் கைகள் விரித்து ஆர்ப்பரிக்கிறார். சில வீரர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மைதானத்தில் அவ்வளவு ஆர்ப்பரிப்பு. ஆட்டம் நடந்தது கத்தாரில்தான். ஆனால், இந்தியாவில் நடப்பதுபோன்ற ஆதரவு. வாழ்க்கையைத் தேடி வளைகுடா சென்ற இந்தியர்கள் பலரும் மூவர்ணக் கொடியேந்தி இந்திய அணிக்கு ஆதரவளித்துக்கொண்டிருந்தனர். அந்த விசில் அடிக்கப்பட்டபோதும் இவர்களின் கொண்டாட்டம், கத்தாரை ஆட்டிப்படைத்திருக்கும். இந்திய வீரர்களுக்கு `Standing Ovation’ கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் களத்தில் என்ன நடந்தது? இந்தியா, ஒரு போட்டியை டிரா செய்திருக்கிறது. ஆம், டிரா செய்திருக்கிறது..!

முதல் போட்டியில் ஓமனுடன் தோல்வி. அதுவும் வெற்றியின் விளிம்பில் இருந்துவிட்டு..! அடுத்த போட்டி ஆசியாவின் சாம்பியன் கத்தாருடன். அடுத்த உலகக் கோப்பையை நடத்தும் நாட்டில், அதன் தலைநகரில், அந்த அணியை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இந்தியாவைப் போல் இல்லை. கடந்த 15 ஆண்டுகள் சரியான திட்டமிடுதலால், ஒரு தரமான கால்பந்து அணியாக உருவெடுத்திருக்கின்றனர். அந்த நாட்டின் லீக் அணியால் ஜாவி போன்ற ஒரு மகத்தான ஜாம்பவானை ஒப்பந்தம் செய்ய முடிகிறது. இதுதான் கத்தார் கால்பந்தின் பலம். அந்த அணியை எதிர்கொள்ளவேண்டும்.

Indian Football Team
Indian Football Team
twitter.com

ஓமனுடன் தோற்ற ஐந்தே நாள்களில் அடுத்த ஆட்டம். 2019-ம் ஆண்டு எந்த ஆசிய அணியும் கத்தாரிடம் ஒரு புள்ளிகூட வெல்லவில்லை. அத்தனை ஆசிய அணிகளையும் வென்றிருந்தது கத்தார். ஆக, பலரும் இதை சம்பிரதாய போட்டியாகத்தான் பார்த்தார்கள். கடந்த சில நாள்களாகக் கேப்டன் சுனில் சேத்ரிக்குக் காயம். மற்றொரு ஸ்ட்ரைக்கர் ஆஷிக் குருணியனுக்கும் காயம். அணியின் இரண்டு டாப் ஸ்ட்ரைக்கர்களும் இல்லை. இதற்கும் மேல் என்ன எதிர்பார்ப்பது. இந்திய அணியால் என்ன செய்ய முடியும். ஆனால், அதற்குப் பதில் சொல்லியிருக்கிறது இந்திய அணி. பதில் சொல்லியிருக்கிறார் நேற்று கேப்டனின் ஆர்ம் பேண்ட் அணிந்திருந்த குர்பிரீத் சிங் சாந்து... இந்திய கால்பந்தின் சுவர்!

10 நிமிடக் குழப்பத்தில் வெற்றியைத் தாரைவார்த்த இந்தியா! எங்கெல்லாம் சொதப்பியது புளூ டைகர்ஸ்?!
ஷாட்ஸ் ஆன் டார்கெட் : இந்தியா - 0 ; கத்தார் - 13!

இந்த ஒரு விஷயம் சொல்லிவிடும், போட்டி எப்படி இருந்தது என்பதை. இந்தியா கோல் நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. சேத்ரி, குருணியன் போன்றவர்கள் இருந்திருந்தாலும் அது இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் போயிருக்கப்போவதில்லை. அப்போதும் இந்தியா கோல் அடிப்பதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும். நேற்று கோல் அடிக்காததும் பிரச்னை இல்லை. ஆனால், கத்தாரின் 13 ஷாட்கள்..?! ஒன்றுகூட கோல் ஆகவில்லை! முந்தைய போட்டியில் 6-0 என ஆப்கானிஸ்தானைப் புரட்டியவர்களால், கோபா அமெரிக்காவில் பராகுவேவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்த அணியால், இந்தியாவுக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள், ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடியது இந்த ஒரு விஷயத்துக்காகத்தான். யாரும் எதிர்பாராத ஓர் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது இந்திய அணி.

Sandesh Jhinghan
Sandesh Jhinghan
twitter.com/IndianFootball

ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் செயல்பாட்டில், நேற்று ஓரளவு முன்னேற்றம் இருந்தது. ஓமனுக்கு எதிராகச் செய்ததைப் போல் அதிக தவறுகள் செய்யவில்லை. டிஃபன்ஸிவ் லைனை சரியாகக் கடைப்பிடித்தனர். கத்தாரின் வலது விங்கர்கள் அட்டாக் செய்தபோது, இந்தியாவின் இடது ஃபுல்பேக் மந்தர் ராவ் தேசாய், சென்டர் பேக்குகளுக்கு நெருக்கமாக வந்தார். நிகில், ஃபுல் பேக் ரோலில் விளையாடினார். கடந்த போட்டியில் அடிக்கடி பிளேஸ்மன்ட்டைத் தவறவிட்ட ரௌலின் போர்ஜஸ், டிஃபண்டர்களுக்கு அருகில் விளையாடினார். கூடுதல் டிஃபண்டராக சஹால் களமிறக்கப்பட்டது, அணியின் நடுகளத்தைக் கொஞ்சம் பலப்படுத்தியது.

இருந்தாலும் கத்தாரின் அதிரடி ஆட்டத்தைத் தடுப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. நடுகளத்தில் கிடைக்கும் சிறிய இடைவெளியையும் பயன்படுத்தி த்ரூ பால் கொடுத்தார்கள். அதில் கான், சந்தேஷ் ஜிங்கன் ஜோடி அந்த அட்டாக்குகளை ஓரளவு சமாளித்தது. ஆனால், இந்தியாவின் வலது விங்கிலிருந்து பல அட்டாகிங் மூவ்களைத் தொடுத்துக்கொண்டிருந்தது கத்தார். கத்தாரின் பலமே அவர்களின் கவுன்ட்டர் அட்டாக்தான். உதான்டா கொஞ்சம் மேலே இருந்தாலும், அந்த விங்கில் இருந்து ஒரு அட்டாக் தொடங்கும். சரமாரியாக அங்கு குவியும் வீரர்களையும், அவர்களின் வேகத்தையும் சமாளிக்க ராகுல் பெகே தடுமாறினார். அதிலும் குறிப்பாக கத்தார் கேப்டன் ஹசன் அல் ஹதோஸ் பெரும் சவாலாக விளங்கினார். தொடர்ச்சியாக கோல் நோக்கிப் படையெடுத்தது கத்தார்.

நடுகளத்தில் தாபாவையும் போர்ஜஸையும் ஏமாற்றினார்கள். ராகுல் பெகே, ஜிங்கன் போன்றவர்களையும் ஏமாற்றினார்கள். ஆனால்... அவர்களால் அந்தக் கடைசி மனிதனை ஏமாற்ற முடியவில்லை. பாக்ஸுக்குள் இருந்து near post நோக்கிப் பறந்துவரும் ஒரு புயல் வேக ஷாட்... வலது கையை நீட்டிக்கொண்டு வலது பக்கம் பாய்ந்து தடுத்தார். பாக்ஸுக்கு வெளியே இருந்து வந்த ஒரு lofted curve... கடைசி நொடியில் அட்டகாசமாக வெளியே தள்ளினார். தனக்கு நேரே புயல்வேகத்தில் வந்து, கடைசி நொடியில் curle ஆகும் பந்து... உடனடியாக சுதாரித்து கைகளை நீட்டித் தடுத்தார். போஸ்டின் கார்னரைக் குறிவைத்து உருண்டுவந்த பந்து... தரையில் ஓர் அட்டகாச டைவ். சேவ்..! far post நோக்கி வளைந்துகொண்டே பாயும் ஃப்ரீ கிக். எந்த வீரரும் தொடும் முன்பு பாய்ந்து சென்று தடுக்கிறார்.... இப்படி எத்தனை எத்தனை சேவ்கள்! தனி ஆளாக ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்தார் குர்ப்ரீத்.

குர்ப்ரீத்தின் இந்தச் செயல்பாடு, இந்திய கால்பந்தின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறவேண்டியது. தொடர்ந்து தடுப்பாட்ட சொதப்பல்களால் தோற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு கோல்கீப்பரின் மனநிலை என்பது வெகுவாக பாதிக்கப்படும். அது எப்பேர்ப்பட்ட கோல்கீப்பராக இருந்தாலும் சரி. முந்தைய சீசன்களில் தனி ஆளாக மான்செஸ்டர் யுனைடடின் கௌரவம் காத்துக்கொண்டிருந்த டீகேவின் கடந்த சீசன் செயல்பாடுகள் அதற்கான உதாரணம்.

குர்ப்ரீத் - ஒவ்வொரு முறையும், ஒவ்வோர் அணிக்கு எதிராகவும் தன் 100 சதவிகிதத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு நிகரான அணியாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய அணியாக இருந்தாலும் சரி, இவரது பங்களிப்பு என்றுமே குறைந்ததில்லை.

India vs Qatar
India vs Qatar
twitter.com/IndianFootball

ஓமனுக்கு எதிரான போட்டியிலுமே அப்படித்தான். இவர் இல்லாமல் இருந்திருந்தால், முதல் பாதியிலேயே 2-1 என இந்திய அணி பின்னடைவைச் சந்தித்திருக்கும். 4 முதல் 5 கோல்கள் வரைகூட வாங்கியிருக்கும். 81 நிமிடங்கள் அந்தப் போட்டியிலும் இந்தியாவை வெற்றிக்கு அருகிலேயே வைத்திருந்தார் குர்ப்ரீத். நேற்று - 94 நிமிடங்கள்..! சுவராய், பெருஞ்சுவராய் நின்று இந்தியாவுக்கு வெற்றியைப் பரிசளித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் கொண்டாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதையெல்லாம்விட, ஒவ்வோர் இந்திய வீரருக்குள்ளும் நம்பிக்கையை, உத்வேகத்தை விதைத்திருக்கிறார். ஒரு கேப்டன்... இல்லை, ஒரு லீடர் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்!

அடுத்த கட்டுரைக்கு