Published:Updated:

Football Transfer Window: வீரர்களை வாங்கப் போராடும் செல்சீ; கௌசிக் போல் குறுக்கே போகும் பார்சிலோனா!

ராபர்ட் லெவண்டோஸ்கி - பார்சிலோனா ( Marta Lavandier )

தொடர்ந்து தங்கள் திட்டங்களில் குறுக்கே வந்ததால், என்ன ஆனாலும் ஆஸ்பிளிகியூடா, அலோன்சோ ஆகியோரை பார்சிலோனாவுக்கு விடக்கூடாது என்று செல்சீ நிர்வாகம் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால்...

Football Transfer Window: வீரர்களை வாங்கப் போராடும் செல்சீ; கௌசிக் போல் குறுக்கே போகும் பார்சிலோனா!

தொடர்ந்து தங்கள் திட்டங்களில் குறுக்கே வந்ததால், என்ன ஆனாலும் ஆஸ்பிளிகியூடா, அலோன்சோ ஆகியோரை பார்சிலோனாவுக்கு விடக்கூடாது என்று செல்சீ நிர்வாகம் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால்...

Published:Updated:
ராபர்ட் லெவண்டோஸ்கி - பார்சிலோனா ( Marta Lavandier )
ஜூலை - கால்பந்து ரசிகர்களுக்கு வருத்தமும் சந்தோஷமும் கலந்து இருக்கும் காலகட்டம். லீக் போட்டிகள் இல்லை என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், டிரான்ஸ்ஃபர் விண்டோ அனைவரையும் விருவிருப்பாகவே வைத்திருக்கும். இந்தப் புதிய சீசனுக்கான டிரான்ஸ்ஃபர் விண்டோ மிகவும் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. காசே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த பார்சிலோனா நிர்வாகம் வீரர்களாக வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம் செலவு செய்ய முடிந்தாலும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன மான்செஸ்டர் யுனைடட், செல்சீ போன்ற அணிகள்.

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அணி பார்சிலோனாதான். 'இங்கிலீஷ்காரன்' வடிவேலுவைப் போல் கடந்த ஆண்டு காலிப் பாக்கெட்டைக் காட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அந்த அணி நிர்வாகம். அதன் விளைவாக அந்த அணியின் மிகப்பெரிய வீரரான லயோனல் மெஸ்ஸியை வழியனுப்பி வைத்தது. தங்கள் வீரர்கள் பலரையும் ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லியது. ஆனால் இந்த வருடம் எல்லாம் தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது.

ராபர்ட் லெவண்டோஸ்கி, ஜூல் கூண்டே, ரஃபினியா என மிகப்பெரிய டிரான்ஸ்ஃபர்களை செய்துள்ளது அந்த அணி. இந்த மூன்று வீரர்களை வாங்குவதற்கே சுமார் 150 மில்லியன் யூரோ செலவழித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அணியை விட்டு வெளியேறும் நிலையிலிருந்த ஓஸ்மான் டெம்பளேவை மீண்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏசி மிலன், செல்சீ அணிகளில் ஒப்பந்தம் நிறைவடைந்த ஃபிராங்க் கெஸ்ஸி, ஆண்ட்ரஸ் கிறிஸ்டன்சன் ஆகியோரையும் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது பார்சிலோனா.

லயோனல் மெஸ்ஸி
லயோனல் மெஸ்ஸி
Joan Monfort

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்சிலோனாவின் ஷாப்பிங் இதோடு முடிந்து விடவில்லை. செல்சீ அணியின் கேப்டன் சீசஸ் ஆஸ்பிளிகியூடா, விங் பேக் மார்கோஸ் அலோன்சா ஆகியோரையும் வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. சொல்லப்போனால் பார்சிலோனா vs செல்சீ டிராமாதான் இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவின் மிகப்பெரிய ஹைலைட். எந்த வீரர்களையெல்லாம் வாங்கவேண்டும் என்று செல்சீ முயற்சி செய்கிறதோ அப்போதெல்லாம் 'குறுக்க இந்த கௌசிக் வந்தா' என்பதுபோல் போய் நின்றுவிடுகிறது பார்சா.

ரஃபினியா, கூண்டே ஆகியோரின் அணியோடு செல்சீ பிசினஸ் செய்து முடித்த பிறகும் கூட உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்து, செல்சீ கொடுக்க இருந்த தொகையை விட 'குறைவாக' கொடுத்து அந்த வீரர்களை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா. அதனால், பார்சிலோனாவின் மீது செல்சீ ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ரஹீம் ஸ்டெர்லிங், கலீடூ கூலிபாலி எனப் பெரிய பெயர்கள் அணியில் இணைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ அந்த அணிக்கு மைனஸாகவே அமைந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தொடர்ந்து தங்கள் திட்டங்களில் குறுக்கே வந்ததால், என்ன ஆனாலும் ஆஸ்பிளிகியூடா, அலோன்சோ ஆகியோரை பார்சிலோனாவுக்கு விடக்கூடாது என்று செல்சீ நிர்வாகம் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது பார்சிலோனா நடுகள வீரர் ஃபிராங்கி டி யாங்கை வாங்கத் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. சில தினங்களுக்கு இரு அணியின் தலைவர்களும் சந்தித்துப் பேசியதால், சுமுகமான பிசினஸ் நடக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதே டி யாங் கடந்த சில வாரங்களாக பார்சிலோனாவை விட்டுப் போக முடியாது என அடம் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரை வாங்க மான்செஸ்டர் யுனைடட் அணி தயாராக இருக்கிறது. தங்கள் செலவுகளைக் குறைக்கவேண்டும் என்பதால், அவரை மான்செஸ்டருக்கு அனுப்ப பார்சிலோனாவும் தயார். ஆனால், மான்செஸ்டருக்குப் போக முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார் டி யாங்.

மான்செஸ்டர் யுனைடட் அணியின் புதிய மேனேஜராகப் பதவி ஏற்றிருக்கும் முன்னாள் அயாக்ஸ் மேனேஜர் எரிக் டென் ஹாக், தன் பழைய வீரர்கள் பலரையும் மீண்டும் இணைக்க முயற்சி செய்தார். லிசாண்ட்ரோ மார்டினஸ் விஷயத்தில் அவர் வெற்றி அடைந்திருந்தாலும், டி யாங், ஆண்டனி பிளான்கள் எதிர்பார்த்தது போல் செல்லவில்லை. பல வீரர்களை இந்த விண்டோவில் இழந்து விட்டதால், ஆண்டனியை அனுப்பக் கூடாது என்பதில் அயாக்ஸ் தீர்க்கமாக இருக்கிறது. இந்த பிரச்னையெல்லாம் ஒரு பக்கம் என்றால், 'நான் அணியை விட்டுப் போகிறேன்' என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ வேறு ஷாக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

டி யாங் | De Jong
டி யாங் | De Jong

செல்சீ, மான்செஸ்டர் யுனைடட் அணிகளின் நிலை இப்படியென்றால், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், ஆர்செனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போன்ற முன்னணி அணிகள் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது உலகின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் எர்லிங் ஹாலண்டை ஒப்பந்தம் செய்திருக்கிறது சிட்டி. லிவர்பூல் தங்கள் பங்குக்கு ஸ்டிரைக்கர் டார்வின் நூனஸை வாங்கியிருக்கிறது. ஆர்செனல் அணியோ கேப்ரியல் ஜீசுஸ், ஒலெக்சாண்டர் ஜின்சென்கோ, ஃபேபியோ வியரா போன்றவர்களை வாங்கி தங்கள் அணியைப் பலப்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்பர்ஸும் நிறைய வீரர்களை வாங்கியிருக்கிறது. ரிசார்லிசன், இவான் பெரிசிச், யிவ்ஸ் பிசூமா எனப் பெரிய வியாபாரம் நடந்திருப்பதால் ஆன்டோனியோ கான்டே நிச்சயம் அந்த அணியை டைட்டில் ரேஸில் வைத்திருப்பார் என்று விமர்சகர்கள் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த அணிகள் தவிர்த்து பேயர்ன் மூனிச் அணி நிறைய டிரான்ஸ்ஃபர்கள் செய்திருக்கிறது. செனகல் சூப்பர் ஸ்டார் சாடியோ மனேவை வாங்கி அட்டாக்கை பலப்படுத்தியிருப்பவர்கள், 67 மில்லியன் யூரோ கொட்டி யுவன்டஸ் அணியிடமிருந்து டிஃபண்டர் மத்தியஸ் டி லிட்டை வாங்கியிருக்கிறார்கள். மாதிஸ் டெல், ரயான் கிராவ்பெர்ச் போன்றவர்களை வாங்கியதோடு நிற்காமல் கொன்ராட் லெய்மருக்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது பேயர்ன்.

மதியஸ் டி லிட், கேப்டன் ஜார்ஜியோ கீலினி ஆகியோர் விலகியிருப்பதால் யுவன்டஸ் அணியின் டிஃபன்ஸ் சற்று பலவீனம் ஆகியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒப்பந்தம் முடிந்த டிபாலாவும் ரோமா பக்கம் சென்றுவிட்டார். இருந்தாலும் பால் போக்பா, ஏஞ்சல் டி மரியா போன்ற நட்சத்திரங்களை ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் ஒப்பந்தம் செய்து அனுபவத்தைக் கூட்டியிருக்கிறது 'ஓல்டு லேடி'. இரண்டாவது ஸ்டிரைக்கர் ஆப்ஷனுக்கு தங்கள் அணியில் லோனில் இருந்த அத்லெடிகோ மாட்ரிட் வீரர் அல்வாரோ மொராடாவை மீண்டும் ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறது அந்த அணி. டிமோ வெர்னரை யுவன்டஸ் பக்கம் தள்ளிவிட செல்சீயும் முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மார்க்கீ டிரான்ஸ்ஃபர்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும், அதையெல்லாம் விட முக்கியமாக கிலியன் எம்பாப்பேவை மீண்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைவர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் எப்படியோ அவரை சம்மதிக்க வைத்துவிட்டது பிஎஸ்ஜி. நூனோ மெண்டஸின் லோன் ஒப்பந்தத்தை நிரந்தரமாக்கியிருக்கும் அந்த அணி, நார்டி முகீலி, விடினியா போன்ற இளம் வீரர்களையும் வாங்கியிருக்கிறது.

கிலியன் எம்பாப்பே
கிலியன் எம்பாப்பே
Miguel Medina

எம்பாப்பே விஷயத்தில் ஏமாற்றம் அடைந்த ஐரோப்பாவின் சாம்பியன் ரியல் மாட்ரிட் இளம் மிட்ஃபீல்டர் ஆரலின் டூசமானியை பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறது. இந்த 22 வீரருக்கு சுமார் 80 மில்லியன் யூரோ செலவழித்திருக்கிறது மாட்ரிட். செல்சீ அணியில் ஒப்பந்தம் முடிந்துபோன ஆன்டோனியோ ருடிகரை ஒப்பந்தம் செய்து டிஃபன்ஸையும் பலப்படுத்தியிருக்கிறது அந்த அணி.

இன்னும் ஒரு மாதம் இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ இருப்பதால், செல்சீ, மான்செஸ்டர் யுனைடட், யுவன்டஸ், பேயர் மூனிச் போன்ற அணிகள் இன்னும் முக்கியமான டிரான்ஸ்ஃபர்கள் செய்ய முயற்சி செய்துகொண்டிருப்பதால் நிச்சயம் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படலாம்.