Published:Updated:

சான்சோ டு யுனைடெட்... கொடினியோ டு செல்சீ... கால்பந்தின் முக்கிய டிரான்ஸ்ஃபர் வதந்திகள்..!

Jadon Sancho

சான்சோவைத் தொடர்ந்து கொடினியோவும் மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்சோவைத் தவறவிட்ட செல்சீ, கொடினியோவை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜுக்கு அழைத்துவந்துவிடும் என்று தெரிகிறது.

Published:Updated:

சான்சோ டு யுனைடெட்... கொடினியோ டு செல்சீ... கால்பந்தின் முக்கிய டிரான்ஸ்ஃபர் வதந்திகள்..!

சான்சோவைத் தொடர்ந்து கொடினியோவும் மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்சோவைத் தவறவிட்ட செல்சீ, கொடினியோவை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜுக்கு அழைத்துவந்துவிடும் என்று தெரிகிறது.

Jadon Sancho

கால்பந்து உலகம் ஸ்தம்பித்துக்கிடந்தாலும் வதந்திகள் ஓய்வில்லாமல் உலாவிக்கொண்டேதான் இருக்கின்றன. நெய்மர், ஜேடன் சான்சோ, லடாரோ மார்டினஸ், ஃபிலிப் கொடினியோ எனப் பல முன்னணி வீரர்களைப் பற்றி பல வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. யார் எந்த அணிக்குப் போக வாய்ப்பு அதிகம், முன்னணி அணிகள் அடுத்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் என்ன செய்யப்போகின்றன… அலசுவோம்.

கடந்த சில மாதங்களாக, அதிக பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் டிரான்ஸ்ஃபர் செய்தி, ஜேடன் சான்சோ பற்றியதுதான். ஜெர்மனியின் பொருஷியா டார்ட்மண்ட் அணிக்கு ஆடிவரும் இந்த 20 வயது இளம் இங்கிலாந்து வீரர், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்த புண்டஸ்லிகா சீசனில் ஆடிய 23 போட்டிகளில் 14 கோல்கள், 15 அசிஸ்ட்கள் என மிரட்டிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த ஃபார்ம் பிரீமியர் லீக் அணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. குறிப்பாக செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரண்டு அணிகளும் அவர்மீது அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. லாம்பார்ட் தலைமையில் புதிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் செல்சீ அணியின் அடுத்த இளம் ஸ்டாராக சான்சோ இருப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டுவந்தது. ஆனால், சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டார்ட்மண்ட் எதிர்பார்த்ததால், கொஞ்சம் செல்சீ பின்வாங்கியது.

Rashford & Sancho
Rashford & Sancho

ஜனவரியில் தங்களின் டிரான்ஸ்ஃபர் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில், சான்சோவை வாங்க செல்சீ தீவிரமாகக் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணி அவரை வாங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில், சான்சோவுடன் தனிப்பட்ட முறையில் அந்த அணி நிர்வாகம் பேசியதாகவும், அவருக்கான ஊதியம், ரிலீஸ் கிளாஸ் போன்ற பல முக்கிய விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. டார்ட்மண்ட் - யுனைடெட் அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், சான்சோ இங்கிலாந்து செல்வது உறுதி என்கிறது கால்பந்து வட்டாரம். இந்த டிரான்ஸ்ஃபர் நிகழ்ந்தால் பிரீமியர் லீகின் காஸ்ட்லி வீரர் ஆவார் சான்சோ!

சான்சோவைத் தொடர்ந்து கொடினியோவும் மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்சோவைத் தவறவிட்ட செல்சீ, கொடினியோவை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜுக்கு அழைத்துவந்துவிடும் என்று தெரிகிறது. 2018 ஜனவரியில், 140 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து அவரை வாங்கியது பார்சிலோனா. அவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொடினியோவால் சோபிக்க முடியவில்லை. இப்போது இவருமே ஜெர்மனியில்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பேயர்ன் மூனிச் அணிக்காக, லோனில். இவர் புண்டஸ்லிகாவில் சிறப்பாக ஆடியிருந்தாலும் (22 போட்டிகளில் 8 கோல்கள், 6 அசிஸ்ட்கள்), லோன் டீலை நிரந்தரமாக மாற்றும் எண்ணத்தில் பேயர்ன் நிர்வாகம் இல்லை. கை ஹாவர்ட்ஸ், லெரோய் சனே என்று இளம் ஜெர்மன் வீரர்களைக் குறிவைத்திருப்பதால், 105 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து கொடினியோவை வாங்கும் திட்டம் அவர்களுக்கு இல்லை. பார்சிலோனாவும் அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும் திட்டத்தில் இல்லை. சுமார் 80 மில்லியன் பவுண்டுகளுக்கு அவரை விற்கத் தயாராக இருக்கிறார்கள். கிரியேட்டிவிட்டி, பிரீமியர் லீக் அனுபவம் என செல்சீக்குத் தேவையான விஷயங்கள் இருப்பதால், அந்த அணிக்கு அவர் நல்ல சாய்ஸாக இருப்பார்.

Coutinho against Reece James
Coutinho against Reece James

இவர்களுக்கு அடுத்து மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் டிரான்ஸ்ஃபர் லடாரோ மார்டினஸ் டு பார்சிலோனா. இப்போதைய நிலையில் கால்பந்து உலகின் மோஸ்ட் வான்டட் ஸ்டிரைக்கர். சுவாரஸ் இடத்தை நிரப்ப பார்சிலோனாவும், அகுவேரோவின் இடத்தை நிரப்ப மான்செஸ்டர் சிட்டியும் இவரைத்தான் டார்கெட்டாக வைத்திருக்கிறார்கள். சாம்பியன்ஸ் லீக் தடை சிக்கலில் இருப்பதால், சமீப காலமாக சிட்டி வட்டாரத்தில் எந்த அசைவும் இல்லை. அதேசமயம், மெஸ்ஸியோடு இந்த அர்ஜென்டீன இளம் வீரரை இணைத்துவிட வேண்டும் என்பதில் பார்சிலோனா மிகவும் உறுதியாக இருக்கிறது. இன்டர் மிலன் அணியின் மிகமுக்கிய வீரராக மாறியிருக்கும் மார்டினஸ், பார்சிலோனாவின் தரத்தை நிச்சயம் உயர்த்துவார். ஆனால், அவரை அவ்வளவு எளிதில் இன்டர் விட்டுவிடாது என்பதுதான் பிரச்னை. 110 மில்லியன் யூரோ என்ற அவரது ரிலீஸ் கிளாஸ் பார்சிலோனாவுக்குக் கொஞ்சம் சிக்கலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடினியோ, ஓஸ்மான் டெம்பளே, கிரீஸ்மேன் என மிக மிகப் பெரிய முதலீடுகள் செய்துவிட்டார்கள். அதனால், செலவைக் குறைக்க தங்கள் வீரர்களை மிலனுக்குக் கொடுக்கும் பேச்சுவார்த்தை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது பார்கா.

நெல்சன் செமடோ, ஜூனியர் ஃபிர்போ போன்ற வீரர்களைத் தர அவர்கள் தயாராக இருக்கும்போது, இன்டர் ஆர்துர், கிரீஸ்மேன் போன்றவர்களைக் கேட்கிறது. இந்த இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தாலும், தங்கள் அட்டாக்கைப் பலப்படுத்த வேண்டுமென்பதால் பார்சிலோனா மார்டினசை எப்படியும் வாங்கிவிடும் என்று தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சுற்றித்திரியும் நெய்மர் டு பார்சிலோனா வதந்திகள் இன்னும் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. நெய்மருக்கு ஊதிய உயர்வு கொடுத்து, அவரை பாரிஸிலேயே தங்கவைக்க பி.எஸ்.ஜி முயற்சி செய்துகொண்டிருக்கிறது. கால்பந்தில் முடிவே இல்லாத வதந்தியாக இது சுற்றிக்கொண்டேதான் இருக்கப்போகிறது.

Lautaro Martinez with Aguero
Lautaro Martinez with Aguero

இன்னொரு முன்னணி பிரீமியர் லீக் அணியான லிவர்பூல், நீண்ட நாள் டார்கெட் டிமோ வெர்னரை நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு டாப் ஸ்ட்ரைக்கர் பிரீமியர் லீகுக்கு வர, ஒரு ஸ்ட்ரைக்கர் வெளியேறக்கூடும் என்று தெரிகிறது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் டாட்டன்ஹாமுக்கு குட்பை சொல்லத் தயாராகிவிட்டார் போல. இத்தனை ஆண்டுகளாக எந்தக் கோப்பையையும் வாங்க முடியாமல் இருப்பதால், ஒரு பெரிய அணிக்குப் போவதென அவர் முடிவெடுத்திருக்கிறாராம். மான்செஸ்டர் யுனைடெட் அவரை வாங்கக்கூடும் என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது சான்சோ அங்கு செல்லவிருக்கும் நிலையில், இவரையும் யுனைடெட்டால் வாங்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதனால், அவர் பிரீமியர் லீகுக்கு வெளியே செல்ல வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. ரியல் மாட்ரிட், யுவன்டஸ் அணிகள் இவரை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த முக்கியமான டிரான்ஸ்ஃபர்கள் தவிர்த்து பென் சில்வெல், ஃபேபியன், உபமகானோ எனப் பல வீரர்களின் எதிர்காலம் பற்றியும் பல வதந்திகள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. வதந்திகள் பல பரவிக்கொண்டிருந்தாலும், டிரான்ஸ்ஃபர் விண்டோ எப்போது தொடங்கும் என்று இப்போது புதிதாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்னை தீர்ந்து, மீண்டும் கால்பந்து தொடங்கி, சீசன் முடிந்தால்தான் எல்லாம் சரியாகும்.