கட்டுரைகள்
Published:Updated:

உலகக்கோப்பையைவிட, மெஸ்ஸி பெரிதாக நினைக்கும் அந்த ஒரு வெற்றி!

மெஸ்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
மெஸ்ஸி

நெஞ்சம் மறப்பதில்லை-14

பரபரப்பாகச் சுற்றித் திரியும் அத்தனை மனிதர்களுக்குமே இங்கே ஓர் இலக்கு இருக்கிறது. ஆனால், அத்தனை பேரும் விரும்புவது அந்த வெற்றி என்கிற ஒற்றை விஷயத்தைத்தான். எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியாக நின்று போராட வேண்டும். தோல்விகள் சூழும். அயர்ச்சியால் ஆட்கொள்ளப்படுவோம். ஆனால், அத்தனையையும் கடந்து போராட வேண்டும். அப்போதுதான் எண்ணியதை நம்மால் எட்ட முடியும்.

இப்படியெல்லாம் வியாக்கியானம் பேசினால், `பூமர்கள்' என இன்ஸ்டா ரீல்ஸை ஸ்க்ரோல் செய்வதைப்போல தள்ளிவிடுவார்கள், நவீன 2கே கிட்ஸ். ஆக, இதற்கு ரீல்-ரியல் பாணியில் ஓர் உண்மை சம்பவத்தை ரீவைண்டு செய்து பார்ப்போம்.

விளையாட்டுலகில் கடந்த சில மாதங்களில் நடந்த உச்சபட்ச சம்பவம் எதுவெனப் புரட்டிப் பார்த்தோமெனில், கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையே நம் நினைவுக்கு வரும். இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடந்திருந்த உலகக்கோப்பைத் தொடரை அர்ஜென்டினா அணி அபாரமாக வென்றது. மரடோனாவிற்குப் பிறகு அர்ஜென்டினா தேசத்தின் கால்பந்துக் கடவுளாகக் கொண்டாடப்பட்ட மெஸ்ஸி அரியணை ஏறிய அந்தத் தருணம், உலகம் முழுவதுமே ஆர்ப்பரிப்புகளால் நிரம்பியிருந்தது. மெஸ்ஸி இந்த ஒட்டுமொத்த விளையாட்டுலகின் நாயகனாகக் கொண்டாடித் தீர்க்கப்பட்டார். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவதற்காக மெஸ்ஸி 15 ஆண்டுகளுக்கு மேல் தோற்றுத் தோற்று மீண்டு வந்த கதை பலருக்கும் தெரியாதது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

2006-க்கு முன்பாக 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் ஒன்று நெதர்லாந்தில் நடந்தது. அந்த உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது. அந்த உலகக்கோப்பையை அர்ஜெண்டினா வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் குட்டி மெஸ்ஸிதான். அந்தத் தொடரில் மட்டும் 6 கோல்களை மெஸ்ஸி அடித்தார். அந்தத் தொடரின் முடிவில் வழங்கப்பட்ட கோல்டன் பூட், கோல்டன் பால் இரண்டையுமே மெஸ்ஸிதான் வென்றார்.

இவ்வளவு பெரிய வெற்றியுடனும் ஆர்ப்பரிப்புடனும்தான் மெஸ்ஸி அர்ஜென்டினாவின் சீனியர் அணிக்குள் வந்தார். அர்ஜென்டினா அணிக்குள் மெஸ்ஸியும் ஒரு வீரராக இருந்த வரை அவர்மீது எந்த விமர்சனமும் இல்லை. அவரின் வேகத்திற்காக அவரின் துடிப்பிற்காகக் கால்பந்து ரசிகர் கூட்டம் மொத்தமும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. ஆனால், ஒரு கட்டத்தில் மெஸ்ஸியின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. மெஸ்ஸிதான் அர்ஜென்டினா. அர்ஜென்டினாதான் மெஸ்ஸி எனும் நிலைக்கு உயர்ந்த பிறகு, விமர்சனங்களாலும் சூழப்பட்டார் அவர். கிளப் அணிகளுக்காக மட்டும்தான் சிறப்பாக ஆடுவார். அவர்களுக்கு மட்டும்தான் கோப்பைகளை வென்று கொடுப்பார். அர்ஜென்டினாவுக்காக அத்தனை சிரத்தை எடுத்து ஆடவேமாட்டார் எனப் பெரிய பெரிய விமர்சனமெல்லாம் அவரைச் சூழ்ந்தது.

விமர்சனங்களுக்கு ஏற்ற வகையில் அர்ஜென்டினாவும் தொடர் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டே இருந்தது. 2010 உலகக்கோப்பையில் மரடோனாவைப் பயிற்சியாளராக வைத்துக்கொண்டுமே மெஸ்ஸியால் சாதிக்க முடியவில்லை. அந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினா காலிறுதியோடு வெளியேறியது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

2014 உலகக்கோப்பையில் இறுதிக்கட்டத்தை எட்டி நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டது. இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றுப்போனாலும், அந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதற்கான தங்கப்பந்தை மெஸ்ஸிதான் வென்றார். ஆனாலும் அணியின் தோல்வியால் மெஸ்ஸி உடைந்துபோனார். திடீரென ஓய்வையெல்லாம் அறிவித்தார். சிலகாலம் கழித்து ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்று மீண்டும் அர்ஜென்டினா ஜெர்சியோடு களத்திற்கு வந்தார். இப்போதுமே தோல்விகள் அவரை விட்டு விலகவில்லை. 2018 உலகக்கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு அர்ஜென்டினா அணி வெளியேறியது. இதற்கு முன்பு இரண்டு கோபா அமெரிக்க தொடர்களிலும் இறுதிப்

போட்டி வரை சென்று இரண்டிலுமே சிலியிடமே தோற்றுப்போனது அர்ஜென்டினா. மெஸ்ஸிமீதான விமர்சனங்களின் வீரியம் இன்னும் கூடியது. மெஸ்ஸிக்குமே வயது ஏறத்தொடங்கியது. கால்பந்தில் தனது இறுதிக்கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கினார். ஆனாலும் `தேசத்திற்காக அவர் ஒன்றுமே செய்யவில்லை’ என்கிற அந்தக் கறை மட்டும் துடைக்கப்படாமலே இருந்தது.

மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதற்குப் பின்னால் உள்ள கதை இது. இந்தக் கதையின் க்ளைமாக்ஸ்தான் அந்த உலகக்கோப்பையை வென்ற தருணம் என நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக 2021 இல் நடந்த கோபா அமெரிக்கத் தொடர்தான் இந்தக் கதையின் க்ளைமாக்ஸ். ஏனெனில், தொடர் தோல்விகளிலிருந்தும் அடுக்கடுக்கான விமர்சனங்களிலிருந்தும் அவரை மீட்டுக் கொண்டு வந்தது அந்த கோபா அமெரிக்கத் தொடர்தான். பிரேசிலுக்கு எதிராக அந்தத் தொடரின் இறுதிப்போட்டியை வென்றுவிட்டு ஓர் அரை ஆளுயர அந்த வெற்றிக்கோப்பையை மெஸ்ஸி ஏந்தியபோது அது அவருக்குப் பெரும் விடுதலையைக் கொடுத்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

`ஊடகங்கள் எங்களைத் தோற்றுப்போனவர்களென முத்திரை குத்தின. இந்த அர்ஜென்டினா ஜெர்சியை நாங்கள் உணர்வுபூர்வமாக அணியவில்லை என்றார்கள். இந்த தேசத்தை நாங்கள் காதலிக்கவில்லை என்றார்கள். அர்ஜென்டினாவுக்கு நான் வென்ற அத்தனையுமே எனக்கு முக்கியம்தான். ஆனால், இந்த கோபா அமெரிக்கா வெற்றி எல்லாவற்றைவிடவும் மேலானது. ஏனெனில், நான் அடிமேல் அடிவாங்கி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறேன். இப்போதுதான் ஒரு அமைதியான மனநிலையை எட்டியிருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் என் கையில் சேர மறுத்த ஒரு கனவு என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது.' என மெஸ்ஸி அந்தக் கோப்பையை வென்றபிறகு பேசினார். அவரது கரியரில் மெஸ்ஸி இவ்வளவு உணர்வுபூர்வமாகப் பேசி அதற்கு முன் பார்த்ததே இல்லை. தோற்றுத் தோற்று அடிவாங்கி அடிவாங்கி அந்த ரணங்கள் கொடுத்த வலிதான் மெஸ்ஸியை இவ்வளவு உணர்வுப்பூர்வமாகப் பேச வைத்தது. சமீபத்தில் வென்ற அந்த உலகக்கோப்பையைவிடவும் 2021இல் வென்ற அந்தக் கோபா அமெரிக்கக் கோப்பைதான் மெஸ்ஸியின் மனத்திற்கு நெருக்கமானதாக இருக்கக்கூடும். ஏனெனில், அதுதான் அத்தனை வலிகளுக்கும் கிடைத்த முதல் ஆறுதல்!