Published:Updated:

காற்றில் கலந்தது சென்னையின் கால்பந்து குரல்... கொரோனாவால் இறந்தார் மைக் மனோ!

4 ஆண்டுகளாக உருவம் இல்லாமல் இருக்கும் சென்னை கால்பந்து இப்போது தன் குரலையும் இழந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த ஒவ்வொரு உள்ளூர் கால்பந்து தொடருக்கும் தன் குரலால் உயிர்கொடுத்த மைக் மனோ கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

கிரிக்கெட்டோ, கால்பந்தோ இல்லை வேறு விளையாட்டுகளோ நாம் பார்த்து மட்டுமே வளர்வதில்லை. கண்கள் மட்டுமே அதைக் கொண்டாடுவதில்லை. விளையாட்டுகளை கேட்டும் ரசித்திருக்கிறோம். கபில் தேவின் கேட்ச், மரடோனாவின் கோல், ஹோல்டிங்கின் பௌன்சர், பீலேவின் பைசிக்கிள் கிக்... இவையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லக்கேட்டே சிலாகித்திருப்போம். விளையாட்டைப் பொறுத்தவரை, கண்களை விட செவிகள் சீக்கிரம் ஈர்க்கப்பட்டுவிடும். அதனால்தான், வீரர்களை விமர்சிக்கும் வர்ணனையாளர்களைக்கூட நாம் விமர்சிக்கிறோம்.

''தோனி ஃபினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்'' என்ற ரவி சாஸ்திரியின் குரலுக்கு இங்கு எத்தனை ரசிகர்களோ இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ''களம் ஒண்ணுல சண்டை ஒன்றரை நிமிஷத்துல முடிஞ்சே போச்சுங்க. கருப்போட சேவல் பெங்களூர் ராமச்சந்திரா சேவலா கொண்டே போடுச்சு'' என்ற அல்வா வாசுவின் குரலுக்கும் ரசிகர்கள் உண்டு. ''அவர் பந்தைப் பிடிக்கவில்லை. பந்துதான் அவரைப் பிடித்தது'' என்ற படவா கோபியின் கமென்டரியை எல்லோரும் ஒருமுறையாவது விளையாடும்போது சொல்லியிருப்போம்! நம் ஊரில் நடக்கும் போட்டிகளில் மைக் பிடிப்பவர்களின் குரல்கள் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும். அந்தப் போட்டி மீதான ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்துவிடும். அப்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த கால்பந்து போட்டிகளின் குரலாக இருந்தவர்தான் மைக் மனோ என்கிற மனோகர்.

சென்னை லீக் போட்டிகளின்போது இவர் கொடுக்கும் அறிவுப்புகளுக்கே பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் போட்டிகள், செவன்ஸ் போட்டிகள் எனப் பல்வேறு தொடர்களைத் தன் குரலால் அலங்கரித்தவர். மற்ற மாவட்டங்களிலிருந்தும் கூட இவரை போட்டி அறிவுப்புக்காக அழைப்பார்கள். தன் குரலால் அந்த அளவுக்குக் கால்பந்து வட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருந்த அவர், கடந்த மே 26 இறந்துவிட்டார்.

Mic Mano
Mic Mano

"அந்த கரகர குரல்ல 'இன்று சீனியர் டிவிஷனில் ICF அணி, கஸ்டம்ஸ் அணியை எதிர்கொள்ளும்' அப்டினு அவர் சொல்றதே ஒரு பயங்கரமான ஈர்ப்பா இருக்கும்" என்கிறார் பத்திரிகையாளர் டி.என்.ரகு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ரொம்ப கலர்ஃபுல்லான மனுஷன். ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு கேரக்டர் இருக்கும். ஏதோவொரு விஷயத்தை அவங்க அழகாக்குவாங்க. அப்படி ஒரு ஆளு மனோ. செவன்ஸ் டோர்னமென்ட்லலாம் அவரு இருந்தாவே களைகட்டும். ரொம்ப நல்ல மனுஷன். ஓப்பனா பேசக்கூடியவர். ஃபுட்பாலுக்காக உழைச்சிட்டே இருந்தாரு. இதுல என்ன வருமாணம் வந்துடும். ஆனா, கால்பந்து பிடிக்கும்னு கஷ்டம் பார்க்காம ஓடினாரு. திருவள்ளூர்ல நடக்கிற மேட்ச்களைப் பத்தி நியூஸ் கொடுத்துட்டே இருப்பார். அதுல போட்டோஸ் விஷயத்துல சின்ன சின்ன சண்டைகூடப் போடுவோம். ஆனா, ரொம்ப ஜாலியான மனுஷன். உள்ளூர் கால்பந்து அரங்குல நிறைய பார்த்திருக்காரு. நிறைய பேரு கூட பழகிருக்காரு. உள்ள என்ன நடக்குதுனு தெரிஞ்சவரு. இப்போ மேட்ச்லாம் ஏதும் இல்லைனு தேர்தல் பிரசாரத்துக்கு போனேன்னு சொன்னாரு. ரொம்ப அருமையான மனுஷன். அவரோட இழப்பு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு" என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் ரகு.

20 ஆண்டுகளாக போட்டி அறிவிப்பாளராகப் பணியாற்றிவரும் மனோகருக்கு வயது 67. முதல் டிவிஷன் போட்டிகளில் சுமார் 10 ஆண்டுகள் டான் பாஸ்கோ அணியின் கோல்கீப்பராக விளையாடியிருக்கிறார். MTC ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்துவந்தார்.

திருவள்ளூர் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைச் செயலாளரும், காஸ்மோ கால்பந்து கிளப்பின் பயிற்சியாளருமான கோவிந்தராஜன் மனோகருக்கு மிகவும் நெருக்கமானவர். "கால்பந்துக்காக சேவை பண்ணினவர்னுதான் அவரைப் பத்தி சொல்லணும். அவரு செஞ்சது கொஞ்சனஞ்ச வேலைலாம் இல்ல. கால்பந்துக்காக என்ன வேலைனாலும் செய்வார். அதுல அவருக்கு ரொம்ப பிடிச்சது மைக்ல பேசுறது. இவருக்கு முன்னாடி நேரு ஸ்டேடியம்ல ஒரு பெரியவர்தான் அறிவிப்பாளரா இருந்தாரு. அவர் குரல் அட்டகாசமா இருக்கும். அது பிடிச்சுப்போய் அவர மாதிரியே பேசணும்னு முயற்சி பண்ணாரு மனோ. அதே மாதிரி பேசவும் செஞ்சாரு" என்கிறார் கோவிந்தராஜன்.

Mic Mano
Mic Mano

"பேசறதுனு மட்டுமில்ல, எல்லா வேலையுமே செய்வாரு. கால்பந்துக்காக எல்லாமே செய்வாரு. திருவள்ளூர் மாவட்டத்துல நடக்குற ஒவ்வொரு மேட்ச் பத்தியும் செய்தில வரணும்னு ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் செய்தி அனுப்புவாரு. PR-ஆவும் இருந்தாரு. அசோசியேஷன் வேலை எதுனாலும் இழுத்துப்போட்டுட்டு செய்வாரு. வயசு வித்யாசம் பாக்காம பழகுவாரு. வயசுல சின்னவங்க சில சமயம் கோவத்துல எதாவது பேசுனாக்கூட அதை பெருசா எடுத்துக்காம தொடர்ந்து வேலை பண்ணுவாரு. அதுக்குலாம் சகிப்புத்தன்மை அவசியம். அவரு எல்லாத்தையுமே சகிச்சிக்கிட்டாரு. ஏன்னா கால்பந்து மேல அவ்வளவு பிரியம் அவருக்கு" என்று மனோ பற்றி நெகிழ்வாகப் பேசினார் கோவிந்தராஜன்.

அவரது அந்த தீர்க்கமான குரலின் காரணமாக தேர்தல் பிரசாரங்களுக்கு எப்போதும் இவரை அழைப்பார்கள். மைக் பிடிக்க பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக கிளம்பிவிடுவார். ஆனால், அதுவும் கூட கால்பந்து இல்லாமல் இருந்தால்தான். ஏனெனில், மைக் பிடிக்கும் முன்பே அவருக்குக் கால்பந்து பிடித்துப்போய்விட்டது. கோவிந்தராஜன் சொல்வதுபோல், அந்தக் கால்பந்துக்காக உழைப்பதுவே தன் தலையாய கடமை என்று வாழ்ந்தவர் மனோ. இனி திருவள்ளூர் மாவட்ட போட்டிகளில், செவன்ஸ் போட்டிகளில் சென்னை லீகில் (ஒருவேளை நடந்தால்) நிச்சயம் அங்கொரு வெற்றிடம் ஏற்படும். நிச்சயம் எல்லோரும் மனோவின் குரலை ஒருமுறை மனதில் ஒலித்துப்பார்ப்பார்கள். அதுவே அவருக்கான அஞ்சலியாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு