“இருக்கையின் நுனிக்கு வர வைத்த, நகம் கடிக்க வைத்த, நெஞ்சடைக்க வைத்த” போன்ற சொற்கள் தேய்வழக்காக இருப்பினும், சில வரலாற்று நிகழ்வுகள் இவற்றையெல்லாம் நமக்கு நிகழ்வாழ்விலேயே நிகழ்த்திக்காட்டும்.
முக்கியமாக ஏதாவது ஒரு விளையாட்டின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது தங்களது ரசனைக்குரிய ஒரு விளையாட்டு கொடுக்கும் அந்தப் பரவசத்தை அடைந்திருப்பார்கள். ஒருவர் இருவரல்ல, கோடிக்கணக்கான உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு அப்படியான ஒரு அதீதப் பரவசத்தை அளித்த நிகழ்வாக நேற்றைய உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

இந்தியர்களின் வீடுகளில் தொலைக்காட்சிகள் நுழைய ஆரம்பித்த காலகட்டத்தில், 1990 ஆம் ஆண்டு, லோதர் மாத்யூஸ் தலைமையிலான ஜெர்மன் அணி, அப்போதைய நடப்பு சாம்பியனான மரடோனா தலைமையிலான அர்ஜெண்டைனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய உலகக்கோப்பை கால்பந்து தொடர்தான் நான் பார்த்த முதல் தொடர், இப்போது நடப்பது நான் தொடர்ந்து பார்க்கும் ஒன்பதாவது தொடர். அந்த வகையில் நானும், என் அனுபவத்தில், நான் பார்த்த மிகச்சிறந்த கால்பந்து ஆட்டங்களில் ஒன்றென அர்ஜெண்டைனாவுக்கும், ஃபிரான்ஸுக்குமான நேற்றைய இறுதி ஆட்டத்தைச் சொல்வேன்.
ஆட்டம் ஆரம்பித்த முதல் நொடியிலிருந்து மைதானத்தின் மொத்தக் கூட்டமும் அர்ஜெண்டைனாவுக்கும், மெஸ்ஸிக்கும் ஆதரவான அலையில் மிதப்பதைக் காண, கேட்க முடிந்தது. கடந்த மூன்று ஆட்டங்களாக பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டிருந்த ஏஞ்சல் டி மரியாவை இறுதி ஆட்டத்தின் துவக்கத்திலேயே களமிறக்கியிருந்தார் அர்ஜெண்டினாவின் கோச் லயனல் ஸ்கலோனி.

அந்த முடிவு நல்ல பலனையும் அளித்தது. நீண்ட நாள் கூட்டாளிகளான மெஸ்ஸிக்கும் டி மரியாவுக்கும் இடையிலான களப்புரிதல் என்பது அவர்களுக்கிடையே முன்களத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட துல்லியமான பாஸ்களில் தெரிந்தது. டி மரியா தொடர்ந்து ஃபிரான்ஸின் பெனால்டி ஏரியாவை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார். இது வரை நடந்த போட்டிகளில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திக்கொண்டிருந்த மெஸ்ஸி இந்தப் போட்டியில் ஒரு இளைஞனின் துடிப்போடு களத்தை வலம் வந்தார்.
ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் ஃபிரான்ஸின் ஒலிவியே ஜிரு சூப்பர்மேன் போலப் பறந்து தலையால் முட்டி கோலடிக்கச் செய்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் அந்த ஒரு வாய்ப்பை மட்டுமே ஃபிரான்ஸ் முதல் பாதி ஆட்டத்தில் ஏற்படுத்தியிருந்தது. ஃபிரான்ஸுக்காகத் தொடர்ந்து 74 வது போட்டியில் களமிறங்கிய சாதனைக்குச் சொந்தக்காரரான க்ரீஸ்மேனுக்கும், அதிரடி நாயகனான எம்பாப்பேக்கும் விளையாட வாய்ப்பே இல்லாத அளவுக்கு அர்ஜெண்டைனா தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் ஃபிரான்ஸின் பெனால்டி ஏரியாவுக்குள் ஊடுறுவிய ஏஞ்சல் டி மரியாவின் பின்னாலிருந்து ஃபிரான்ஸின் டெம்பேலே லேசாகத் தள்ளிவிட்டது போலத் தோன்றினாலும், அதற்கு அதிகப்பட்ச தண்டனையாக பெனால்டி ஸ்ட்ரோக் வழங்கினார் போலந்து நாட்டைச் சேர்ந்த நடுவர் ஸைமோன் மார்ஸினைக்.

பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை வழக்கம்போல ஏற்றுக்கொண்ட, உலகக்கோப்பை போட்டிகளில் முன்னாள் ஜெர்மனி கேப்டன் லோதர் மாத்யூஸின் சாதனையை முறியடித்து 26 வது முறையாகக் களமிறங்கிய மெஸ்ஸி, கோல்கீப்பர்களில் ஜெர்மனி கோல்கீப்பர் மேனுவல் நியூரரின் சாதனையை முறியடித்து 20 வது முறையாகக் களமிறங்கிச் சாதனை படைத்திருக்கும் ஹியூகோ லோரிஸின் நகர்வை மிக எளிதாக யூகித்து, இறகால் வருடுவதைப் போல பந்தை மென்மையாக உதைத்து இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டைனாவுக்கான மற்றும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தனது முதல் கோல், தனது நாட்டுக்கான 97 வது கோல், உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த 12 வது கோல், அதன் மூலம் பீலேயின் சாதனையைச் சமன் செய்தது, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் கோலடித்த முதல் வீரர், இந்தத் தொடரில் ஆறாவது கோலடித்து அதிக கோல்கள் அடித்தவர் எனப் பல சாதனைகளை அந்த ஒற்றை கோல் மூலம் சாதித்தார்.
தான் பங்கு பெற்ற கடைசி இரு உலக்கோப்பை இறுதி ஆட்டங்களில் கோலடிக்க முடியாத அர்ஜெண்டைனா அணி தனது கோல் கணக்கைத் துவங்க, தான் இதுவரை விளையாடிய நான்கு உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் முதல் முறையாக கோல் கணக்கில் பின் தங்கியது ஃபிரான்ஸ். கடைசியாக நடந்த பத்து உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் முதலில் கோலடித்த அணியே வெற்றி பெற்ற வரலாறு ஃபிரான்ஸின் கழுத்துக்கு நேரே கத்தியாகத் தொங்க ஆரம்பித்தது.

ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஃபிரான்ஸுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தது அர்ஜெண்டைனா. களத்தின் மத்தியப் பகுதியிலிருந்து மெஸ்ஸி கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்றுக்கொண்ட மெக் ஆலிஸ்டர் தனி ஒரு ஆளாக ஃபிரான்ஸின் பெனால்டி ஏரியவுக்குள் கடத்திச் சென்று கடைசி நேரத்தில் தடுப்பதற்கு ஆட்களில்லாமல் இன்னொரு முனையிலிருந்து புயல் போல வந்து சேர்ந்த ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். ஏஞ்சல் டி மரியா அதை மிக அட்டகாசமான முறையில் கோலாக மாற்றினார். அர்ஜெண்டைனா அணி ஒரு குழுவாக இணைந்த அடித்த அந்த இரண்டாவது கோல் கண்களுக்கு விருந்தாக இருந்தது. இறுதி ஆட்டத்தில் கோலடித்த ஏஞ்சல் டி மரியா கண்ணீரோடு அதைக் கொண்டாடினார்.
பாதி ஆட்டத்தின் போது அர்ஜெண்டைனா 2 – 0 என்கிற வலுவான நிலையிலிருக்க ஃபிரான்ஸ் முக்கிய வீரரான ஒலிவியே ஜிரூவுக்கும், தனது ஃபவுல் மூலம் முதல் கோலை வாங்கக் காரணமாக இருந்த டெம்பேலேவுக்கும் சப்ஸ்டிடியூஷன் கொடுத்து இளைஞரும், மொராக்கோவுக்கு எதிரான அரையிறுதியில் தனது முதல் கோலைக் குறைந்த நேரத்தில் அடித்த சாதனை படைத்த கொலோ முவானியையும், துராமையும் களமிறக்கியது. அது ஒரு நம்பிக்கையற்ற முடிவாகத் தெரிந்தாலும் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அது பாரிய விளைவுகளை உண்டாக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் அதாவது 76 நிமிடம் வரை, ஆட்ட இறுதிக்கு வெறும் பதினைந்தே நிமிடங்கள் இருக்கும் வரைகூட ஆட்டம் அர்ஜெண்டைனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஃபிரான்ஸ் கோலடிக்கும் முயற்சிகளைக் கூடப் பெரிதாகச் செய்யவில்லை. இது வரையிலான ஆட்டங்களில் ஃபிரான்ஸின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றிய அண்டனி க்ரீஸ்மேன், கிங்ஸ்லி கோமேனால் சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். ஃபிரான்ஸ் தன் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது போன்ற தோற்ற மயக்கம் ஏற்பட்டு, கோப்பை அர்ஜெண்டைனாவுக்குத்தான் என்று உலகம் நம்பத் தொடங்கிய நேரத்தில்தான், அது வரை களத்துக்குள்ளேயே அமைதியாக இருந்த ஒரு சூறாவளி திடீரெனக் கிளம்பி கத்தாரின் லுஸாலி மைதானத்தையும், அர்ஜெண்டைனா அணியையும், உலக கால்பந்து ரசிகர்களையும் அதிர வைத்தது.
அந்தப் புயலுக்குப் பெயர் கிளியான் எம்பாப்பே. 23 வயதுக்குள் தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடிய அந்தப் புயல், தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தது. 77 வது நிமிடத்தில் ஃபிரான்ஸின் கோலா முவானியை அர்ஜெண்டைனாவின் ஓட்டமெண்டி பெனால்டி ஏரியாவுக்குள் வீழ்த்தியதற்காக ஃபிரான்ஸுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். இந்த ஃபவுலும் டி மரியாவுக்கு வழங்கப்பட்ட முதல் ஃபவுலைப் போல, பெரிய குற்றமாகத் தெரியவில்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஃபிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார் எம்பாப்பே. எம்பாப்பே பந்தை உதைக்கும் திசையை அர்ஜெண்டைனா கோல் கீப்பர் எமி மார்டினஸ் சரியாகவே கணித்தாலும், எம்பாப்பே பந்தை உதைத்த வேகத்தில் அது எமி மார்டினஸின் கையுறைகளை உரசியபடி கோல் வலைக்குள் புகுந்தது. எம்பாப்பே இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது ஆறாவது கோலை அடித்து மெஸ்ஸியின் சாதனையைச் சமன் செய்தார்.

ஃபிரான்ஸுக்குகான முதல் கோலை அடித்த மகிழ்ச்சி ஆரவாரம் குறைவதற்கும், அர்ஜெண்டைனா தனது முதல் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும் முன்பே, வெறும் 97 விநாடி நேர வித்தியாசத்துக்குள் ஆட்டத்தின் மத்தியக் களத்தில், பந்தை மெஸ்ஸியின் மந்திரக் கால்களிலிருந்து தட்டிப்பறித்த ஃபிரான்ஸின் இளம் வீரர் கிங்ஸ்லி கோமேனின் துல்லியமான பாஸ் மூலம் தான் பெற்றுக்கொண்ட பந்தைக் கடத்திக்கொண்டு போய் பெனால்டி ஏரியாவுக்குள் புயல் போல நுழைந்து, எமி மார்டினஸ் எதிர்பார்க்காத ஒரு நொடியில் அதிவேகத்தில் கோலடித்தார் எம்பாப்பே. இந்த உலகக் கோப்பைத் தொடரின் மிகச்சிறந்த கோல்களில் அதுவும் ஒன்று. இந்தத் தொடரில் தனது ஏழாவது கோலை அடித்து தங்கக் காலணிக்கான விருதில் மெஸ்ஸியை முந்தினார் எம்பாப்பே.
உலகெங்கும் போட்டியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் உறைந்து போனார்கள். லயனல் மெஸ்ஸியோ தனது காலுறைகளைச் சரி செய்தபடி, நடக்கும் ஆச்சரியங்களை எண்ணித் தலையை ஆட்டியபடி சிரித்துக்கொண்டிருந்தார். ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்து இஞ்சுரி டைமாகக் கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆட்டத்தின் 96 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மிக வலிமையாக உதைத்த பந்தை ஃபிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் கிட்டத்தட்ட பறந்து தடுத்தார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 – 2 என்ற கணக்கில் இருக்க கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் கோலெதுவும் விழவில்லை என்றாலும் இரு அணிகளின் ஆட்டத்திலும் தீப்பொறி பறந்தது. அடுத்தடுத்து இரு அணிகளும் எதிர் அணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்தார்கள். எந்த நேரம் என்ன நடக்குமெனத் தெரியாத நிலை.
கூடுதல் நேரத்தின் 106, 107 வது நிமிடங்களில் அர்ஜெண்டைனாவின் கோலடிக்கும் முயற்சிகள் நூலளவில் தோல்வியுற 108 வது நிமிடத்தில் அர்ஜெண்டைனா வீரர் உதைத்த பந்து ஃபிரெஞ்சு கோல் கீப்பர் லோரிஸின் உடலில் பட்டு எதிரே வர, அதை மீண்டும் வலைக்குள் தள்ளினார் மெஸ்ஸி. எல்லைக் கோட்டிலிந்த நடுவர் ஆஃப் சைட் என்று அறிவித்தாலும், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அது நொடிப்பொழுதில் சரிபார்க்கப்பட்டு அர்ஜெண்டைனா அடித்த கோல் செல்லும் என்று நடுவர் அறிவித்தார். அர்ஜெண்டைனாவின் வெற்றி உறுதியானது போல இருந்தது. இந்தத் தொடரில் தனது ஏழாவது கோலைப் போட்டு எம்பாப்பேவோடு மீண்டும் மல்லுக்கு நின்றார் மெஸ்ஸி.
ஆனால் அதையும் “செல்லாது, செல்லாது, தீர்ப்ப மாத்து” என்று 117 வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் தான் உதைத்த பந்து அர்ஜெண்டைனாவின் கோன்ஸோலோ மோண்டியலின் கையில் பட அல்லது கையில் பட வைத்து, அதன் மூலம் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கில் கோலடித்து “எப்பே… யாருப்பே நீ, இந்தப் போடு போடற?” என்று அர்ஜெண்டைனாவைக் கதற வைத்து, கிலியைக் கிளப்பினார் கிளியன் எம்பாப்பே. அதன் மூலம் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்த 2-வது வீரருமானார். மேலும் இந்தத் தொடரில் தனக்குச் சமமாகக் ஏழு கோல்களை அடித்திருந்த மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளி தனது எட்டாவது கோலாக அதை அடித்தார் எம்பாப்பே.

அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் ஆட்டம் உச்சகட்டப் பரபரப்பில் செல்ல, இறுதியில் இரு அணிகளும் 3 – 3 என்ற சமநிலையிலிருக்க, வரலாற்றில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பெனால்டி ஷூட் அவுட் மூலம் முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸுக்கான முதல் கோலைத் துல்லியமாக அடித்தார் எம்பாப்பே. ஒரே ஆட்டத்தில் மூன்றாவது முறையாகவும் எம்பாப்பே பந்தை உதைக்கும் திசையைச் சரியாகக் கணித்த அர்ஜெண்டைனா கோல்கீப்பர் எமி மார்டினஸ் பந்து சென்ற திசையிலேயே பாய்ந்தாலும் எம்பாப்பே பந்தை உதைத்த வேகம்தான் மூன்று முறையும் அவரைக் காப்பாற்றியது. அர்ஜெண்டைனாவுக்கான முதல் கோலை வழக்கம்போல மெஸ்ஸி லோரிஸை எதிர் திசையில் விழ வைத்த பிறகு மெதுவாக வலைக்குள் தள்ளினார்.
மெஸ்ஸியிடமிருந்து பந்தைத் தட்டிப்பறித்து ஃபிரான்ஸின் இரண்டாவது கோலுக்குக் காரணமாக இருந்த கிங்ஸ்லி கோமேன் அடித்த இரண்டாவது பெனால்டி ஸ்ட்ரோக்கை எமி மார்ட்டினஸ் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பெனால்டி ஷூட் அவுட்டை மனதில் வைத்தே களமிறக்கப்பட்ட அர்ஜெண்டைனாவின் பாவ்லோ டைபாலா குறிதவறாமல் கோலடித்து 2 – 1 என்ற கணக்கில் அர்ஜெண்டைனாவை முன்னிலை பெற வைத்தார்.

மூன்றாவது பெனால்டி ஸ்ட்ரோக்கிலும் ஃபிரான்ஸ் வீரர் ச்சோமேனி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே பறந்தது. லீண்ட்ரோ பரதேஸ் அடித்த கோல் மூலம் அர்ஜெண்டைனா 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நான்காவது பெனால்டி ஸ்ட்ரோக்கில் ஃபிரான்ஸின் கோலோ முவானி கோலடித்து 3 – 2 என்று ஃபிரான்ஸின் கணக்கை ஏற்றினாலும், கோன்ஸோலோ மோண்டியல் குறிதவறாமல் கோலடித்து, கிளியான் எம்பாப்பேயின் வலையில் வீழ்ந்து பந்தைக் கையில் வாங்கி, பெனால்டி வாங்கிய தன் குற்றத்தை நேராக்கினார். 4 – 2 என்ற கணக்கில் 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜெண்டைனா உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜெண்டைனாவின் 21 வயது என்ஸோ ஃபெர்னாண்டஸும், சிறந்த கோல்கீப்பருக்கான “கோல்டன் க்ளோவ்” விருதை அர்ஜெண்டைனாவின் எமி மார்ட்டினஸும், அதிக கோல்கள் அடித்ததற்கான “கோல்டன் ஷூ” விருதையும், ஃபிரெஞ்சு அதிபர் எமானுவேல் மேக்ரானின் தனிப்பட்ட அன்பையும், ஆறுதலையும் ஃபிரான்ஸின் கிளியான் எம்பாப்பேயும், இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரருக்கான விருதை லயனல் மெஸ்ஸியும் பெற்றுக்கொண்டார்கள்.
உலகக் கோப்பையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு “பிஷ்ட்” எனப்படும் ஒட்டக முடியாலும், ஆட்டு ரோமத்தாலும் செய்யப்பட்ட, கத்தார் ராஜ குடும்பத்தினரும், மிகப்பெரிய மத குருக்களும் அணியும் கறுப்பு நிற, மெல்லிய அங்கி லயனல் மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

இருபது வருட கள அனுபவம், ஆயிரத்துக்கும் மேலான போட்டிகள், ஆறு ஈரோப்பியன் கோல்டன் ஷூ விருதுகள், ஏழு பாலன் டி ஓர் விருதுகள், 35 கிளப் கோப்பைகள், 10 லா லிகா, 7 கோபா டெல் ரே, 4 யுஇஎஃப்ஏ டைட்டில்கள், 474 லா லிகா கோல்கள், 98 சர்வதேச கோல்கள், ஒரே கிளப்புக்காக 672 கோல்கள், 192 அஸிஸ்ட்கள், ஒரு கோபா அமெரிக்கா கோப்பை என்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தமான “லயனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி” ஒரு அரபு சுல்தானைப் போன்ற உடையலங்காரத்துடன், இத்தனை வருடங்களாகத் தான் தொடக் காத்திருந்த உலகக் கோப்பையைத் தன் கைகளால் ஏந்தி, தன் ஒப்பற்ற மகுடத்தில் சூடிக்கொண்டார்.

உலகெங்கும் இருக்கும் லயனல் மெஸ்ஸியின் கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே இந்தக் கண்கொள்ளா காட்சியை கால்பந்து விளையாட்டில் எனது முதல் ஆதர்சமான டியகோ அர்மேண்டோ மரடோனா ஃபிராங்கோவும் உயிருடன் இருந்து பார்த்திருந்தால், அவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்ந்திருப்பார் என்ற சிந்தனை எனக்குள் தவிர்க்க முடியாமல் எழுந்தது.