அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடர். எனவே அவர் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலிருக்கிறார். ஏற்கெனவே தனது கடைசி கோபா அமெரிக்க தொடரில் கோப்பையை வென்று, ஒரு சாதனையைக் கைவசப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிர்ச்சிகரமாக சவூதி அரேபியாவிடம் தோற்றிருந்தாலும், அதன் பிறகான ஆட்டங்களில் சுதாரித்துக்கொண்ட அர்ஜெண்டினா அணி, தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை கோப்பையை வென்றிடாவிட்டாலும், களத்தில் வெல்வதற்கு மிகக் கடுமையான அணியான நெதர்லாந்து இன்னொரு பக்கம் களமிறங்கியது. நெதர்லாந்து தடுப்பாட்டத்துக்குப் பெயர் போனது என்றாலும் அர்ஜெண்டினா ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் மெஸ்ஸியின் அபாரமான, துல்லியமான பாஸ் மூலம் நெதர்லாந்தின் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தைப் பெற்ற அர்ஜெண்டினாவின் இளம் வீரர் நுவெல் மொலினா அதை கோலாக மாற்றினார்.

அவர் வருங்காலத்தில், “நான் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸியிடமிருந்து பந்தைப் பெற்று, அர்ஜெண்டினாவுக்காகக் கோலடித்திருக்கிறேன்” என்று தன் பேரப் பிள்ளைகளிடம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் என்றார் கமெண்டேட்டர். கால்பந்து விளையாட்டு என்பது தென்னமெரிக்க நாடுகளில் ஒரு தீவிரமான மதம் போல கருதப்படுகிறது என்பதற்கு அவரது வார்த்தைகள் ஒரு உதாரணம். அர்ஜெண்டினாவைப் பொறுத்தவரை அவர்களது கால்பந்து மதத்தில் மரடோனாவுக்குப் பிறகான தெய்வமல்லவா லயனல் மெஸ்ஸி? நெதர்லாந்து வீரர்கள் அர்ஜெண்டினாவின் பெனால்டி ஏரியாவுக்குள் அதிரடியாக நுழைந்து சில வாய்ப்புகளை ஏற்படுத்தினார்கள் என்றாலும் அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் சிறப்பாகச் செயல்பட்டு அவற்றை முறியடித்தார்.
மற்ற வாய்ப்புகளை நெதர்லாந்து வீரர்களே பார்வையாளர் கேலரிக்கு பந்தை அனுப்பி வீணடித்தார்கள். அர்ஜெண்டினா தரப்பிலும் லயனல் மெஸ்ஸி கள ஆட்டத்தில் கோலடிக்க கிடைத்த நிறைய வாய்ப்புகள் வீணாகின. பாதி நேரம் கடந்த போது அர்ஜெண்டினா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் நடுவரிடம் மஞ்சள் அட்டையை வாங்கியவண்ணம் இருந்தார்கள்.
சப்ஸ்டிடியூட் ஆக பெஞ்சில் அமர்ந்திருந்த நெதர்லாந்து வீரருக்கெல்லாம் நடுவர் மஞ்சளட்டை காட்டும் அளவுக்கும், நெதர்லாந்து வீரர்கள் களத்துக்குள் புகுந்து அர்ஜெண்டினா வீரர்களைத் தாக்கி, இரு அணி வீரர்களுக்கிடையே அடிக்கடி கைகலப்பு, முரட்டுத்தனமான, உடல் ரீதியான தாக்குதல் என்னும் அளவுக்கு ஆட்டம் போனது.
யாராவது, யாரையாவது முட்டி, மோதிக்கொண்டே இருந்தார்கள். இதற்கிடையே லயனல் மெஸ்ஸி அடித்த அருமையான ஃபிரீ கிக் ஒன்று கோல் போஸ்ட்டுக்கு சற்றே உயரத்தில் கடந்து போனது. ஆட்டத்தின் 73 வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் அகுனாவை பெனால்ட்டி ஏரியாவுக்குள் வீழ்த்தியதற்காக வழங்கப்பட்ட ‘பெனால்டி கிக்’ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட மெஸ்ஸி அதை மிக எளிதாகத் தோன்றும் வண்ணம் கோலாக மாற்றினார். அர்ஜெண்டினா 2 – 0 என்ற கணக்கில் ஆட்ட நேரம் முடிய 15 நிமிடங்களே இருக்கும்போது முன்னணியில் இருந்தது. விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை போல, ஆட்டத்தின் 83 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக சப்ஸ்டிடியூட் ஆகக் களமிறங்கிய வூட் வெகாஸ்ட் தலையால் முட்டி கோலடித்தார்.

அவரது உயரத்துக்கு களத்திலிருந்த மற்றவர்கள் எல்லாருமே அவரது தோள் உயரத்துக்கே இருக்கும் லில்லிபுட்கள் போல இருந்தது அவருக்கு வசதியாக இருந்திருக்கும் போல. அவ்வளவு எளிதாக இருந்தது அந்த கோல். அதோடு நிறுத்தாமல் ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்து, இஞ்சுரி டைம் என்று கொடுக்கப்பட்ட 10 நிமிடமும் முடிந்து, 11வது நிமிடத்தில் கடைசி வாய்ப்பாக நெதர்லாந்துக்குக் கிடைத்த ஃபிரீகிக்கை மிக வித்தியாசமான முறையில், அர்ஜெண்டினா வீரர்களின் கால்களுக்கு நடுவே மெதுவாக உதைக்கப்பட்டு உள்ளே வந்த பந்தை லாகவமாக மீண்டும் கோலாக்கினார் வூட் வெகாஸ்ட். இம்முறை மெஸ்ஸியின் கனவு இத்தோடு கலைவது போன்ற தோற்றம் எழுந்தது.
எக்ஸ்ட்ரா டைமாகக் கொடுக்கப்பட்ட அரைமணி நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்காததால் இரண்டாவது காலிறுதி ஆட்டமான இதுவும் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குப் போனது. இரண்டு கோல்கள் பின்னாலிருந்து ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சமநிலைக்கு வந்த நெதர்லாந்து, அதை வீணடிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட்டில் கோட்டை விட்டார்கள். முதல் வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் விர்ஜில் வான் டிக்கும், இரண்டாவது வாய்ப்பை ஸ்டீவன் பெர்கியூஸும் கோட்டை விட்டார்கள் என்று சொல்வதை விட அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்டினஸ் அபாரமாகத் தடுத்தார் என்று சொல்வதே சரி. அதே நேரம் அர்ஜெண்டினாவுக்கான முதல் வாய்ப்பை மெஸ்ஸியும், இரண்டாவது வாய்ப்பை லியனார்டோ பரடேஸும் கோலாக்கினார்கள். மூன்றாவது வாய்ப்பை இருஅணியினரும் கோலாக்க, நான்காவது வாய்ப்பில் நெதர்லாந்தின் நேற்றைய நாயகன் வூட் வெகாஸ்ட் கோல் போட, அர்ஜெண்டினா வீரர் என்ஸோ ஃபெர்னாண்டஸ் சொதப்பியதால் சில நொடிகள் பதற்றம் நிலவியது
ஐந்தாவது வாய்ப்பில் நெதர்லாந்தின் லூக் டி ஜோங்கும், அர்ஜெண்டினாவின் லட்டோரா மார்ட்டினஸும் கோலடிக்க இறுதியில் 4 – 3 என்ற கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.

நேற்றைய போட்டியில் நெதர்லாந்து சப்ஸ்டிடியூட் வீரர்கள் களத்தில் இறங்கி அடிதடியில் ஈடுபட்டது ஒரு விவாதமாக உருவாகியிருக்கிறது. அதற்காக அவர்களில் யாருக்கும் மஞ்சளட்டை எச்சரிக்கைக் காட்டப்படவில்லை. கால்பந்து விளையாட்டிலும், அதை நடத்தும் ஃபிபாவிலும் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தை இந்நிகழ்வு சுட்டுவதாக பலர் விமர்சித்திருக்கிறார்கள். ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள, ஐரோப்பாவைத் தவிர பிற கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான விகிதாச்சாரம் குறைவு என்கிற விவாதம் பலகாலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார் எழுவது ஃபிபா அமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பிரேசிலை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய குரோஷியாவை அரையிறுதியில் சந்திக்கிறது அர்ஜெண்டினா.