Published:Updated:

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்தும் அதில் வெளிப்பட்ட அரசியலும் - ஒரு பார்வை

Germany ( twitter )

இது ஒரு சிறந்த உலகக் கோப்பைப் போட்டி என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மோசமான உணர்வோடு இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் எனத் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்கிறார்கள் இஸ்ரேலிய ஊடகவியளார்கள்.

Published:Updated:

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்தும் அதில் வெளிப்பட்ட அரசியலும் - ஒரு பார்வை

இது ஒரு சிறந்த உலகக் கோப்பைப் போட்டி என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மோசமான உணர்வோடு இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் எனத் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்கிறார்கள் இஸ்ரேலிய ஊடகவியளார்கள்.

Germany ( twitter )
உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் அரசியல் வெளிப்படுத்தக் கூடிய களமாக மாறுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் 2022 ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நிகழ்ந்த சில அரசியல் சம்பவங்களை தொகுத்து கட்டுரையாக்கியிருக்கிறோம்.

இதுதான் அரபு - இஸ்லாமிய நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பைப் போட்டி என்பதே முதல் அரசியல் வெளிப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது. உலகளவில் பல நாட்டு செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து பல எதிர்மறை செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். மிகச் சிறிய குறைகள் கூட ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டது. அப்படியானவற்றை தகர்க்கக் கத்தார் இந்த உலக கோப்பைப் போட்டியின் துவக்க விழாவை கவித்துவமாக பயன்படுத்தியது .

“மனிதர்கள் தேசங்களாகவும் இனங்களாகவும் சிதறிக் கிடப்பது ஏன் தெரியுமா? நாம் வேற்றுமைகளின் அழகையும் மாறுபாட்டையும் புரிந்து கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளத்தான். இந்த நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்,” என்கிற உணர்வைச் சொல்லி, “வாங்க பழகலாம்” என அழைத்தது அழகிய அரசியலாகவும் மேன்மையான உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் நடக்கும் அனைத்து போட்டியின் துவக்கத்திலும் போட்டியிடும் இரு நாட்டினர் தேசிய கீதம் இசைக்கப்படும். மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வீரர்களும் பார்வையாளர்களும் பாடுவார்கள். பார்க்கவே பரவசமாக இருக்கும். இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை தங்கள் அரசியலுக்காக பயன்படுத்தினார்கள் ஈரானிய கால்பந்து வீரர்கள். வேறொன்றும் செய்யவில்லை, தேசிய கீதம் இசைக்கும்பொழுது அதைப் பாடாமல் அமைதியாக இருந்தார்கள் அவ்வளவுதான்!

FIFA 2022
FIFA 2022

மஹ்சா அமினி எனும் பெண் தன் தலை மூடாங்கை, (ஹிஜாப்) சரியாக அணியவில்லை என ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. இனி பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் என்கிற நடைமுறைக்கு மாற்று வர வேண்டுமென போராடினார்கள். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு, அரசு பயன்படுத்திய வன்முறையின் காரணமாக இன்னும் பலர் மரணம் அடைந்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் ஈரானிய வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்து தங்கள் அரசியலை உலகக்கோப்பை போட்டியின் பொழுது வெளிக்காட்டினார்கள்.

Kan11 எனும் ஊடக நிறுவனம், இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தது. அதன் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மோவ்வர்டி, உலகக் கால்பந்துப் போட்டிகளை குறித்து செய்திகள் சேகரிப்பதற்காகக் கத்தார் வந்தவர் இவர். கத்தார் நாட்டால் முறையாக அனுமதிப் பெற்று வந்தவர். அவரை இனங்கண்ட சில அரபு ரசிகர்கள் அவர் மீது வெறுப்புச் சொற்கள் கொண்டு பேசிய காணொளி உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு அரபு ரசிகர், இஸ்ரேலிய ஊடகவியலாளரை நோக்கி, "பாலஸ்தீனம் தான் இருக்கிறது, இஸ்ரேல் என்பது கிடையாது. உங்களை யாரும் இங்கு வரவேற்கவில்லை, தயவுசெய்து நாட்டை விட்டு வெளியே செல்லுங்கள். இது கத்தார், இது எங்கள் நாடு,” என பேசியது வைரலானது. இது மட்டுமல்ல இன்னும் சில இஸ்ரேல் ஊடகவியலாளர்களும் இப்படியான வெறுப்புணர்வின் வெளிகாட்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு சிறந்த உலகக் கோப்பைப் போட்டி என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மோசமான உணர்வோடு இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் எனத் தங்கள் வருத்தத்தை பதிவு செய்கிறார்கள் இஸ்ரேலிய ஊடகவியளார்கள்.

மனித உரிமைப் பாகுபாடுகளை ஒழித்தல் என்பது இன்றைய உலகின் முக்கிய அரசியல். மாற்றுத்திறனாளிகள், பாலினப் பேதங்களுக்கு ஆட்படுகிறவர்கள், முதியவர்கள் போன்றவர்களை எந்தத் தருணத்திலும் தனிமைப்படுத்திவிடக் கூடாது.

எல்லாக் காரியங்களிலும் Inclusiveness எனும் ஒன்றிணைக்கும் தன்மை இருக்க வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கி இருக்கும் காலம் இது.
Germany
Germany
twitter

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை நடக்கப் போகிறது என்கிற செய்தி வெளிவந்த முதல், அந்த நாட்டின் மீது வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு, கத்தார் LGBTQ எனும் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை மறுக்கும் நாடு. புலம் பெயர்ந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முழுமையான உரிமைகளை வழங்காத நாடு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மனித உரிமை மீறல் செய்யும் நாட்டிலா உலகக் கோப்பை, என்பதுதான் பரவலாக பரப்பப்பட்ட அரசியலாக இருந்தது. இதைக் குறித்துக் கத்தாரும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாக அறிவிக்காமலே இருந்தது. அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், எங்களின் கலாச்சாரங்களுக்கு மதிப்பளியுங்கள் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. போட்டி ஆரம்பித்ததும் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை குறித்த அரசியல் வெளிப்படத் துவங்கியது. அதை வெளிக்காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம், “One Love” எனும் வாசகம் பொறித்தக் கைப்பட்டை (Arm Band).

இந்த ஒன் லவ் என்பது எல்லாவித பாகுபாடுகளுக்கும் எதிரான வாசகத்தைத் தாங்கியக் கைப்பட்டை என்றாலும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமை கத்தாரில் மறுக்கப்படுகிறது, அதனால் இந்த ஒன் லவ் எனும் கைப்பட்டையை அணிந்துதான் எல்லா விளையாட்டுப் போட்டியிலும் விளையாடுவோம் என 7 ஐரோப்பிய அணிகளும் அறிவித்தன.
One Love
One Love
Twitter

"One Love" என்ற வாசகமும் அதிலிருக்கும் வானவில் கொடியும் LGBTQ உரிமைகளை வெளிக்காட்டும் சின்னம்.

ஒவ்வொரு அணிகளும் போட்டித் துவங்கும் முன், விளையாடும் பதினோரு பேர்கள் மட்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்து ஜெர்மானிய வீரர்களும் தங்கள் கைகளால் வாயை மூடியவாரு எடுத்துக் கொண்டார்கள். அதாவது கத்தாரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாக உள்ளது, தொழிலாளர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவே அதை எதிர்க்கிறோம் என்கிற தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட இங்குத் தடை இருக்கிறது என்பதால் இப்படிச் செய்தார்கள்.

உலகக் கோப்பைப் போட்டி என்பது விளையாட்டு வீரர்களின் உணர்வுகளையும் அரசியலையும் வெளிக்காட்டும் இடம் மட்டுமல்ல, ரசிகர்களும் பார்வையாளர்களும் கூட இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டார்கள். பல பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளை அரங்கில் தூக்கிப் பிடித்து தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டார்கள்.

ஒரு அரங்கு, கிட்டதட்ட 86 ஆயிரம் பேர். இவர்களில் 99 விழுக்காடு பிரேஸில் அணி ஆதரவாளர்கள். கிட்டத்தட்ட அனைவரும் மஞ்சள் பச்சை நிற உடைகள், பிரேஸில் கொடிகள், முகப்பூச்சுக்கள், மேள தாளங்கள், தொப்பிகள் என அமர்களம். இதெல்லாம் பிரேஸில் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல, பெரும்பாலும் இந்தியர்கள், அரபியர்கள் இன்னும் பல நாட்டினர்தான் இப்படி பிரேஸில் நாட்டின் கொடி ஏந்தி உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொருமுறை கோல் போஸ்டை நோக்கி உதைக்கப்படும் பந்திற்காகத் தன்னை மறந்து கத்துகிறார்கள். பிரேஸில் அணி வீரன் தள்ளிவிடப்பட்டால் கோவப்பட்டுத் திட்டிக் கொள்கிறார்கள்.

தேச எல்லைகளைக் கடந்த ஆதரவுக்கு என்ன காரணம்? - இவற்றிற்கு ஒரே பதிலாக இருப்பது - “புட்பால்” மட்டும்தான் !

இது போல அர்ஜெண்டினாவிற்கு, கத்தாரில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பும், கட்டில் அடங்காத ஆதரவும் கால்பந்து விளையாட்டை மனித குலத்தின் மாபெரும் வேட்கையாகவேப் பார்க்க வைத்துவிட்டது.

ஸ்பெயின் நாட்டில் பிறந்து வளர்ந்த மொரோக்கா அணி வீரர்கள், ஜெர்மனி, சுவிஸ், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து நாட்டு அணியில் இடம் பெற்ற ஆப்பிரிக்க வீரர்கள், எனத் தேச எல்லைகளை எல்லாம் கடந்து, கால்பந்துக்கென புதிய வகையான அணி சேர்தலை சாத்தியப் படுத்தியிருக்கிறது. இதுவே எதிர்கால மனித சமூகத்திற்கான அரசியல் வெளிப்பாடு எனக் கொண்டாட அழைக்கிறது. இன, நிறப் பாகுபாடுகளை கடக்கும் பயணம், மிகச் சரியாகச் சென்றுக் கொண்டிருக்கிறது என ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

FIFA WorldCup 2022 Final; மெஸ்ஸி
FIFA WorldCup 2022 Final; மெஸ்ஸி
இப்படி மனிதப் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவ உணர்வை நோக்கிய நீண்டப் பயணத்தில் கால்பந்து போட்டியும் ஒரு அங்கமாக ஆகியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கத்தார் அதை சாத்தியப்படுத்தியதில் மகிழ்ச்சி!

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ஏரலைச் சேர்ந்த நிர்மல் கத்தார் நாட்டிலிருக்கும் தோஹா நகரில் சுமார் இருபது வருடங்களாக வசித்து வருகிறார். அங்கு ஒரு பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் `காணாமல் போன தேசங்கள்”, `நிலமும் பொழுதும்’, `குன்றா வளம்’, `சகாக்கள்” ஆகிய நூல்களின் ஆசிரியர்)

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)