தொடரிலிருந்து நடுவர் வெளியேற்றம்:
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடுவராகச் செயல்பட்ட மேத்யூ லாஹூஸ், இரு அணிகளுக்கும் மொத்தமாக 19 மஞ்சள் அட்டைகளை வழங்கினார். இது இரு அணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அர்ஜெண்டினா அணி வீரர் மெஸ்ஸி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக விசாரணைக் குழு ஒன்றையும் FIFA அமைத்துள்ளது. ஸ்பெயின் நடுவரான இவர், கத்தாரிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உலகக்கோப்பை காலிறுதி போட்டிகளுக்குப் பொறுப்பேற்ற நான்கு நடுவர்களில், மூன்று நடுவர்களை அரையிறுதி போட்டிக்கு FIFA தேர்வு செய்யவில்லை.

ரொனால்டோவின் நிறைவேறாத கனவு:
உலகக்கோப்பை தொடரில் காலிறுதி போட்டியில் வெளியேறியது போர்ச்சுக்கல் அணி. இத்தோல்வி, உலக கால்பந்து ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், ரொனால்டோ ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கியது. 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடிய ரொனால்டோ, நாக் அவுட் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் தனது உலகக்கோப்பை கனவிலிருந்து விடைபெற்றுள்ளார்.

குரோஷியாவும் அர்ஜெண்டினாவும்:
2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதி போட்டியில் குரோஷியா அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதுகின்றன. இதுவரை, சர்வதேச போட்டிகளில் குரோஷியா அணியும் அர்ஜெண்டினா அணியும் 5 முறை (உலகக் கோப்பை தொடரில் - 2) மோதியுள்ளன. இதில் தலா 2 ஆட்டங்களில் குரோஷியா அணியும் அர்ஜெண்டினா அணியும் வெற்றி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது. சமமான பலம் கொண்ட அர்ஜெண்டினா அணியும் குரோஷியா அணியும் மோதும் அரையிறுதி ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.
உலகக்கோப்பையில் இங்கிலாந்து:
2022 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதிப் போட்டிகளில் அதிகம் வெளியேறிய அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. உலகக் கோப்பை தொடர்களில் 7 முறை காலிறுதிப் போட்டிகளோடு வெளியேறியுள்ளது.

அர்ஜெண்டினா குறித்து குரோஷியா பயிற்சியாளர்:
நாளை, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியும் குரோஷியா அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் பலப்பரீட்சை செய்து வரும் நிலையில், குரோஷியா பயிற்சியாளர் ஸ்லட்கோ டாலிக், "நாங்கள் எதிரணியைக் கணித்து வைத்துள்ளோம். அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள், ஆட்டத்தில் எங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவர்களுக்காகத் தயாராகி வருகிறோம். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நாங்கள் அறிவோம். ஆனால் எங்கள் சொந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவோம். அது சரியான பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன்" என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.