1. பின்வாங்கும் மெஸ்ஸி?
2022 உலகக் கோப்பைத் தொடர்தான் தன்னுடைய கடைசி உலகக்கோப்பை என மெஸ்ஸி ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பேட்டியளித்த மெஸ்ஸி, நான் கால்பந்தை மிகவும் நேசிக்கிறேன் என்றும், உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன், எனவும் கூறியுள்ளார்.
2. தனி ஒருவன் எம்பாப்பே:
பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் 23- வயதான இளம் வீரர் எம்பாப்பே, இந்த 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹாட் ட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர், ஆவார். மேலும் இந்த தொடரில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை பெற்றார். இதுவரை 14 உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய இவர், 12 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2018 உலக கோப்பை இறுதி போட்டியிலும் ஒரு கோலை அடித்தார். இதன் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

3. பிரான்ஸ் கோலுக்கு பின் ட்விட்டரில் பறந்த டுவீட்ஸ்:
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்தது, அர்ஜென்டினா அணி. அதுவரை அர்ஜென்டினா கை ஓங்கி இருந்த நிலையில், 80 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்த எம்பாப்பே, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இந்த கோலுக்கு பின்னர், ட்விட்டரில் ஒரு வினாடிக்கு 24,400 ட்வீட்டுகள் செய்யப்பட்டதாக, ட்விட்டரின் CEO எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
4. பாரிஸில் கலவரம்:
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, 3-3 (4-2 பெனால்டி) என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 1000க்கும் மேற்பட்ட பிரான்ஸ் ரசிகர்கள், பாரிஸ் நகரின் பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடிக்க செய்து கார்களை தாக்கினர், ரசிகர்கள். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5. வீரர்கள் பற்றி பேசிய பிரான்ஸ் பயிற்சியாளர்:
அர்ஜென்டினா அணியுடன் தோல்வி அடைந்த பின்னர் பேட்டியளித்த பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ், 'எங்களுடைய முந்தைய ஆட்டங்களில் இருந்த ஆற்றல் எங்களிடம் இல்லை. பல முக்கியமான வீரர்கள் குறைந்த ஆற்றலைக் கொண்டிருந்தனர், ஆதலால் குறைந்த அனுபவமுள்ள, புத்துணர்ச்சி கொண்ட இளைய வீரர்களைக் களமிறக்கினோம். ஆனாலும் எங்களின் கனவு நிறைவேறவில்லை.' என்று கூறியுள்ளார்.