மெஸ்ஸியை புகழ்ந்த குரோஷிய வீரர்:
மொராக்கோ vs குரோஷியா இடையே மூன்றாவது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸி குறித்து பேசிய குரோஷியாவின் டிஃபண்டர் ஜாஸ்கோ வார்டியோல், “நாங்கள் தோற்றாலும் அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன், இது ஒரு சிறந்த அனுபவம். நான், வரலாற்றில் சிறந்த வீரருக்கு எதிராக விளையாடியதை ஒரு நாள் என் குழந்தைகளுக்குச் சொல்வேன்.' என்று கூறியுள்ளார்.

வெண்கலம் வென்ற குரோஷியா:
உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் குரோஷியா அணி, மொராக்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் குரோஷியா அணி, 1998 ஆம் ஆண்டில் 3 வது இடத்தையும், 2018 ஆம் ஆண்டில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. குரோஷியா, வெறும் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாடாகும். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய குரோஷியா அணியின் 20 வயதான ஜோஸ்கோ க்வார்டியோல், இந்த 2022 உலகக் கோப்பையின் சிறந்த டிஃபன்ஸ் வீரர்களில் ஒருவராக புகழ் பெற்றுள்ளார். மேலும், இந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் கோல் அடித்த இவர், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

அர்ஜென்டினா vs பிரான்ஸ்:
இதுவரை அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் 12 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 6 ஆட்டங்களில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்களில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன. கடந்த 2018 உலக கோப்பையில் அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் நாக் அவுட் (16 சுற்று) போட்டியில் மோதின. இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
பரிசுத்தொகை:
இன்று, அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர். இதில் வென்று சாம்பியனாகும் அணிக்கு 42 மில்லியன் டாலர் (ரூ. 344 கோடி) பரிசாக வழங்கப்படும். ரன்னர் அப் அணிக்கு 30 மில்லியன் டாலர் (ரூ.245 கோடி) பரிசு கிடைக்கும். மூன்றாவது இடத்தைப் பிடித்த குரோஷியா அணிக்கு 27 மில்லியன் டாலர் (ரூ. 220 கோடி) வழங்கப்படும். நான்காவது இடத்தை பெற்ற மொராக்கோ அணிக்கு 25 மில்லியன் டாலர்கள் (ரூ.204 கோடி) வழங்கப்படும்.
உலகக்கோப்பையின் மதிப்பு:
இந்த FIFA உலக கோப்பை 36.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. மேலும், இந்த உலக கோப்பை 75% தங்கத்தால் ஆனதாகும். 2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் மதிப்பு, தோராயமாக 1,61,000 அமெரிக்க டாலர் ஆகும். இந்த 2022 உலக கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை இன்றிரவு காண்போம்.