மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை:
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை 2022 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஒரு பேட்டியில், "இந்த இறுதிப் போட்டியே உலகக்கோப்பையில் என்னுடைய கடைசி ஆட்டம் எனவும், இதன் மூலம் என்னுடைய உலகக் கோப்பை பயணத்தை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றும் கூறியுள்ளார்.

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட எம்பாப்பே:
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, மொராக்கோ அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே, பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இவர் அடித்த பந்து, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவரின் முகத்தில் பட்டது. இதை கவனித்த எம்பாப்பே, உடனே மைதானத்தில் உள்ள விளம்பரப் பலகைகளைத் தாண்டி குதித்து, வலியால் முகத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ரசிகரைப் பார்த்துக் மன்னிப்பு கேட்டார். மேலும் அந்த நபர் நன்றாக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த சிறிது நேரம் அங்கேயே இருந்தார், பின்னர் பயிற்சியை மேற்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

PSG க்ளப்பும் உலகக் கோப்பையும்:
2001 ஆம் ஆண்டு பிரேசில் வீரர் ரெனால்டோ PSG அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், அடுத்த 2002 ஆம் ஆண்டு பிரேசில் அணி உலகக்கோப்பையை வென்றது. 2017 ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே, PSG அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், அடுத்த 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக்கோப்பையில் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி PSG அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது 2022 உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மெஸ்ஸி உலகக்கோப்பையை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மொராக்கோவிற்கு எதிராக அடித்த முதல் கோல்:
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியும் பிரான்ஸ் அணியும், அல் பேட் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹெர்ணான்டஸ், கோல் ஒன்றை அடித்தார். இதுவே இந்த உலகக் கோப்பை தொடரில் மொராக்கோ அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட முதல் கோலாகும். கனடா அணி மொராக்கோவிற்கு எதிராக ஒரு கோலை பதிவு செய்திருந்தது. ஆனால், அது ஒரு சுய கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
44 விநாடிகளில் கோல் அடித்த வீரர்:
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் மாற்று வீரராக களமிறங்கிய கோலோ முவானி, 79 வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்டத்தில் களமிறங்கிய 44 வது விநாடிகளில் கோல் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில், மாற்று வீரர் ஒருவர் அடித்த மூன்றாவது வேகமான கோல் இதுவாகும்.