1. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக கோன்காலோ ராமோஸ் களம் இறங்கி, ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். வெளியே உட்கார வைக்கப்பட்டதால் டென்ஷனுடன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த அவர், 73-வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் அனுப்பப்பட்டார். இதையடுத்து, போர்ச்சுக்கல் அணியில் இருந்து வெளியேறப்போவதாக கூறி அணி நிர்வாகத்தை ரொனால்டோ மிரட்டியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியை, போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு மறுத்துள்ளது.

2. நேற்று முன்தினம் பிரேசில் கால்பந்து அணியின் வீரர் வினிசியஸ் ஜூனியர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். பேட்டியின் போது திடீரென ஒரு பூனை அவரது மேஜை மேல் உட்கார்ந்து கொண்டது. இதை தொடர்ந்து பூனையைப் பார்த்து சிரித்தபடியே வினிசியஸ், செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். பின்னர், அருகில் இருந்த பிரேசில் அதிகாரி பூனையை கீழே இறக்கி விட்டார்.இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

3. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில், முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, மொரோக்கோ அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் 0-3 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதைத் தொடர்ந்து, ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து லூயிஸ் என்ரிக் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக 21 வயதுக்குட்பட்ட ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த லூயிஸ் டி லா பெண்டே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி இன்று தொடங்கவிருக்கிறது. இதில் பிரேசில் அணியும் குரோஷியா அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் அலெக்ஸ் சாண்ட்ரோ பங்கேற்க மாட்டார் என பிரேசில் அணியை பயிற்சியாளர் டைட் கூறியுள்ளார். குரூப் G பிரிவில் சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தின் போது அலெக்ஸ் சாண்ட்ரோவிற்கு இடது இடுப்பில் தசை பிரச்சனை காரணமாக மாற்றப்பட்டார்.
5. உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதில் எப்போதுமே ஐரோப்பியா மற்றும் தென் அமெரிக்காவை சேர்ந்த நாடுகளே ஆடியிருக்கின்றன. விதிவிலக்காக 1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் 2002 இல் தென் கொரியாவும் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. இந்த முறை இந்த வழக்கத்தில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.