கோல்டன் பூட் யாருக்கு?
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. காலிறுதி போட்டிகள் முடிவடைந்து, நாளை மறுநாள் அரையிறுதி போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. கோல்டன் பூட் (Golden boot) வெல்லக்கூடிய வீரர்களின் பட்டியலில் எம்பாப்பே முதல் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் அணியை சேர்ந்த 23 வயதான கிலியன் எம்பாப்பே 5 கோல்களுடனும், 3 அசிஸ்ட்களுடனும் முதலிடத்தில் உள்ளார். அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸ் அணியின் ஒலிவியே ஜீரூ ஆகியோர் தலா 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியும் குரோஷியா அணியும் மோதவுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் மொரோக்கோ அணியும் மோதுகின்றன.

மொரோக்கோவின் எழுச்சி!
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஃபிஃபா வெளியிட்ட சிறந்த அணிகளின் தரவரிசை பட்டியலில் 22வது இடத்தில் உள்ள மொராக்கோ அணி, 4வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியுடன் மோதுகின்றது. 2022 உலகக்கோப்பையில் இதுவரை, இந்த தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் 7 வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 9வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணிகளை வீழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மொரோக்கோ அணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இறுதிப்போட்டியில் பயன்படுத்தவுள்ள பந்து!

அடிடாஸ் (Adidas) நிறுவனம், 2022 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ள அல்- ஹில்ம் (Al-Hilm) என்ற பந்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பந்தின் விலை சுமார் 170 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பில், இந்த பந்தின் விலை 14,046 ரூபாய் ஆகும்.
மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை!

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அதிக மஞ்சள் அட்டை (yellow card) வழங்கப்பட்டதால் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான நடத்தைகளில் ஈடுபட்டதற்காகவும் அர்ஜென்டினா அணி மீது விசாரணை மேற்கொள்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது, FIFA. இக்குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறிய விராட்!
போர்ச்சுக்கல் அணி, உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத ரெனால்டோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமும் கனவும் ஆகும். அதிர்ஷ்டவசமாக, பல சர்வதேசப் பட்டங்களை வென்றேன், ஆனால் நமது நாட்டின் பெயரை உலகின் மிக உயர்ந்த இடத்தில் வைப்பதே எனது மிகப்பெரிய கனவாக இருந்தது." என வருத்தத்துடன் நன்றி கூறி பதிவிட்டிருந்தார். விராட் கோலியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நீங்கள் தான் எனக்கு எப்பொழுதும் GOAT, (Greatest of all time)' என ரொனால்டோ குறித்து நெகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.