1. நேற்று அர்ஜென்டினா அணிக்கும் மெக்சிகோ அணிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. 64வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்சி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக எட்டாவது கோலை அடித்தார். மறைந்த கால்பந்தாட்டத்தின் ஜாம்பவான் டியாகோ மரடோனா, உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக எட்டு கோல்களை அடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கோலடித்த மெஸ்சி மரடோனாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2. FIFA உலகக் கோப்பை 2022 தொடரில் முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது, பிரான்ஸ். நேற்றைய ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில், டென்மார்க்கை தோற்கடித்து பிரான்ஸ் அணி வென்றது. இதன் மூலம் ஐரோப்பிய அணிகளின் கடந்த கால வரலாற்றை மாற்றியுள்ளது. 1998 இல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், அடுத்து நடந்த உலக கால்பந்து கோப்பை தொடரில் குழு நிலையிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. 2006 உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010 உலகக் கோப்பையில் இருந்து குழு நிலைகளிலேயே வெளியேற்றப்பட்டது. 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், 2014-ம் ஆண்டு இதே கதியை சந்தித்தது. 2014 உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, 2018 உலக கோப்பையில் குழு நிலையிலேயே வெளியேறியது. ஆனால், இம்முறை 2018 ஆம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி, இத்தொடரில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

3. நாஜி நௌஸி எனும் 33 வயதான கேரளாவை சேர்ந்த பெண், தனது ஐந்து குழந்தைகளுடன் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியை காண்பதற்காக காரிலேயே கத்தார் சென்றுள்ளார். அக்டோபர் 15ஆம் தேதி காரில் புறப்பட்ட இவர், மும்பையில் இருந்து ஓமன் நாட்டிற்கு தனது காரருடன் கப்பலில் சென்றுள்ளார். ஓமன், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா வழியாக காரில் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார்.
4. FIFA உலக கோப்பை 2022 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார், கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த வாரத்தில், யுனைடெட் மான்செஸ்டர் அணியுடன் ரொனால்டோ செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. தற்போது அவரை சவுதி அரேபியா அணியில் மூன்று வருடம் விளையாடுவதற்காக, 225 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்த உடன், இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. நேற்று, போலந்து அணிக்கும் சவுதி அரேபியா அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வீழ்த்தி, போலந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் போலந்து அணி வீரர், லெவன்டோஸ்கி கோல் அடித்தார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இவர் அடித்த முதல் கோல் இதுவாகும்.