Published:Updated:

`கண்ணீர்... கனவு... சகோதரத்துவம்' மொராக்கோவின் கோட்டைச் சுவரைத் தகர்த்த பிரான்சின் அனுபவ ஆட்டம்!

FIFA World Cup 2022; மொராக்கோ vs ஃபிரான்சு

அடிப்படையில் எந்த ஒரு விளையாட்டும் இறுதியாக மனிதர்களிடம் கோருவதும் இதேதான்… அது… எந்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணுவது.

Published:Updated:

`கண்ணீர்... கனவு... சகோதரத்துவம்' மொராக்கோவின் கோட்டைச் சுவரைத் தகர்த்த பிரான்சின் அனுபவ ஆட்டம்!

அடிப்படையில் எந்த ஒரு விளையாட்டும் இறுதியாக மனிதர்களிடம் கோருவதும் இதேதான்… அது… எந்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணுவது.

FIFA World Cup 2022; மொராக்கோ vs ஃபிரான்சு
“சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டை, பதநீர், கடுக்காய் போன்றவற்றை வைத்து மிகக் குறுகிய காலத்தில் கட்டி எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்க முடியாமல் தவித்த ஆங்கிலேயப் படை, பிறகு பேனர்மேன் தலைமையில் பீரங்கிகளை வரவழைத்து தொடர் தாக்குதல் நடத்திய பின்னரே கோட்டைச் சுவர் விரிசல் கண்டது.”

கட்டபொம்மனின் கதையில் வரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பற்றி இது போல பல நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. அது போலவே விளையாட்டு உலகில், மைதானத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டையை மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பிய பெருமை மொராக்கோ கால்பந்து அணிக்கு உண்டு. மொராக்கோ அணி உலகக்கோப்பை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிறகு, அப்போது அதன் பயிற்சியாளாராக இருந்த வஹித் ஹலிலொட்ஸிக்கைத் தூக்கிக் கடாசியது மொராக்கோவின் கால்பந்து ஃபெடரேஷன். அவருக்கு ஏற்கனவே ஜப்பானையும், ஐவரி கோஸ்ட்டையும் இதே போல உலகக்கோப்பைக்குத் தகுதி பெற வைத்த பிறகு, வெளியே தூக்கி வீசப்பட்ட வீர வரலாறு உண்டு. நல்ல ராசியான மனிதர் போல…

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

புதிய பயிற்சியாளராக உலகக் கோப்பை தொடருக்கு வெறும் மூன்றே மாதங்களுக்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் பொறுப்பேற்ற, முன்னாள் மொராக்கோ கால்பந்து அணி வீரரும், பிறப்பால் ஃபிரஞ்சுக்காரருமான வாலித் ரெக்ரகுயிதான் அந்த கண்ணுக்குத் தெரியாத மொராக்கோ தடுப்புச்சுவரைக் கட்டி எழுப்பிய மனிதர். கடந்த பத்து போட்டிகளாக மொராக்கோவின் அந்த இரும்புக்கோட்டையை எந்த ஒரு அணியாலும் தகர்க்கவே முடியவில்லை.

ஆனாலும், காலிறுதி ஆட்டத்தின் முடிவிலேயே மொராக்கோவின் பின்கள வீரர்களில் நால்வர் காயம் காரணமாக முழு உடல் தகுதியில் இல்லாமல் சிரமப்பட்டார்கள். ஃபிரான்சுக்கு எதிரான அரையிறுதி போட்டி ஆரம்பித்த இருபதாவது நிமிடத்திலேயே மொராக்கோவின் பின்கள வீரரும், கேப்டனுமான ரொமெய்ன் செய்ஸ் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகத், தானாகவே சப்ஸ்டிடியூட் கேட்டு வெளியேறினார். அவர் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியிலேயே காயம் பட்டிருந்தாலும், அணிக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பதற்காக அவரைக் களமிறக்கியிருந்தார் பயிற்சியாளர் ரெக்ரகுயி. மேலும் கடந்த ஐந்து போட்டிகளின் மிகத் திறமையாக விளையாடிய மொராக்கோ பின்கள வீரர்கள் அமைத்த தடுப்புச் சுவரில் ஏற்கனவே நீண்ட போட்டித் தொடர் தந்த களைப்பாலும், காயங்களாலும் விரிசல் ஏற்பட்டிருந்தது.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

பாஞ்சாலங்குறிச்சிக்கு பானர்மேன் பீரங்கிகளைக் கொண்டு வந்தது போல, மொராக்கோவின் தடுப்புச் சுவரைத் தகர்க்க நடப்பு சாம்பியனான ஃபிரான்சின் க்ரீஸ்மேன் தனது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றை அரை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

ஸ்பெயினைப் போலவே ஃபிரான்ஸுடனும் மொராக்கோவுக்கு நீண்ட நெடிய வரலாற்று, அரசியல் தொடர்பு உண்டு. ஃபிரான்ஸின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் ஒன்றுதான் மொராக்கோவும். இன்றும் லட்சக்கணக்கான மொராக்கியர்கள் ஃபிரான்ஸில் வசிக்கிறார்கள். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் கூட லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். மொத்த மைதானத்தில் 90 சதவீதம், கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மொராக்கோ ஆதரவாளர்கள் குடும்பத்தோடு வந்து நிறைந்திருக்க, மொராக்கோ வீரர்கள் பந்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் மைதானமே அதிர்ந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த நான்காவது நிமிடத்திலேயே மொத்த ஆப்பிரிக்க / அரபு உலகத்துக்கும் அதிர்ச்சியளித்தது ஃபிரான்ஸ்.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

கிரீஸ்மேனின் துல்லியமான பாஸை கோல் போஸ்ட் நோக்கி அடித்த எம்பாப்பேயின் முயற்சி தடுக்கப்பட, கோல்போஸ்டை விட்டு வெளியே தலை உயரத்தில் வெளியேறிச்சென்ற பந்தைத் தன் தலைக்கு மேலே காலைத் தூக்கி மீண்டும் கோல் வலைக்குள் தள்ளினார் ஃபிரான்ஸின் பின்கள வீரரான ஹெர்னாண்டஸ். மொத்த மைதானமும் மயான அமைதியில் ஆழ்ந்தது. அதாவது களத்தில் வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது கூடக் கேட்கும் அளவுக்கு அமைதியில் ஆழ்ந்தது. ஆட்டத்தின் முதல் கோலை ஃபிரான்சுக்காக அடித்தது மட்டுமல்ல, முதல் கோலை வாங்கி, ஆட்டத்தில் பின்தங்கிய பிறகும் பந்தைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, பந்து தங்கள் வசம் வந்த அடுத்த நொடியே, அதிவேகத்தில் ஃபிரான்சின் பெனால்டி ஏரியாவுக்குள் நுழைந்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட மொராக்கோவின் பெரும்பாலான கோலடிக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்திய இருவரில் ஒருவர் ஹெர்னாண்டஸ், மற்றவர் ஆச்சரியமாக… அண்டனி க்ரீஸ்மேன்.

போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் க்ரீஸ்மேனின் ‘ஹீட் சிக்னேச்சர்’ என்று ஒரு படத்தைக் காட்டினார்கள். மைதானத்தின் வெகுசில மூலைகளில் மட்டும்தான் அவர் இல்லாமலிருந்திருக்கிறார். முன்களம், நடுக்களம் மட்டுமல்ல, மொராக்கோவின் முக்கியமான இரு கோல் முயற்சிகளைக்கூட கடைசி நேரத்தில் தடுத்தும் நிறுத்தினார். ஆட்டத்தில் ஒரு முறை தனக்கு வந்த பந்தைத் தவற விட்டார் கிரீஸ்மேன். “கிரீஸ்மேன் பந்தைத் தவற விடுவது இந்த ஆட்டத்தில் இதுவே முதல் முறை” என்றார் ஒரு கமெண்டேட்டர். “இந்த மொத்தத் தொடரிலுமே முதல் முறை என்று சொல்லுங்கள்” என்றார் இன்னொரு கமெண்டேட்டர். அந்த அளவுக்குத் துல்லியமான ஆட்டத்தை கிரீஸ்மேன் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக நேற்றைய ஆட்டத்தின் நாயகன் க்ரீஸ்மேன் தான்.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

ஆனால் அதிசயமாக தனக்குக் கிடைக்கும் சின்ன வாய்ப்பையும் கோலாக மாற்றும் ஃபிரான்ஸின் ஒலிவியே ஜிரு நேற்று ரொம்பவே சொதப்பினார். ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் காலியாகக் கிடந்த மொராக்கோ பெனால்டி ஏரியாவுக்குள் தனியாக பந்தைப் பெற்ற ஜிரு அதை அவசரப்பட்டு கோல்போஸ்டுக்கு வெளியே உதைத்தார். எதிர்பார்த்தது போலவே அவர் விரைவிலேயே சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டு பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டார்.

பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் என்று பெரிய அணிகளை வீட்டுக்கு அனுப்பி, முதல் முறையாக அரையிறுதியில் கால்பதித்ததற்காகவும், ரசிகர்களின் மனதில் புதியதொரு அணி முன்னேறுகிறது என்பதற்காகவும், ஆப்பிரிக்க அரபு விளையாட்டு உலகத்தில் ஒரு புது நம்பிக்கையையும், வசந்தத்தையும் ஏற்படுத்தியதற்காகவும், காலனியாதிக்கத்தில் இருந்த ஒரு நாடு தன் முன்னாள் எஜமானர்களை வெற்றி கொள்ள வேண்டுமென்பதற்காகவும், இஸ்லாமிய நாடு என்பதற்காகவும், புவி அரசியல் காரணங்களுக்காகவுமென இம்முறை மொராக்கோ அணிக்கு உலகெங்கும் காரண, காரியங்களுடன் கிடைத்த வரவேற்பு அளப்பரியது.

இது ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி, தன்னை வெகு காலம் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த ஃபிரான்ஸுக்கு எதிராக மொராக்கோ அணி வெல்ல வேண்டுமென்பதும் நிறைய பேரின் ஆழ்மன விருப்பமாக இருந்தது

நேற்றைய போட்டியும் அதைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது. மொராக்கோவின் ஆட்டத்தில் பொறிபறந்தது. அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை, ஆனால் பெறப்போவது வானளவு என்கிற அடிப்படையில் ஆடினார்கள். மொராக்கோ அணியினரின் அந்த உத்வேகத்திற்கும், இத்தனை வருட கால்பந்து அனுபவமும், நடப்பு சாம்பியன் என்கிற தகுதியும் கொண்ட ஃபிரான்ஸின் ஆட்டத்திறமைக்கும் நடந்த போட்டிதான் இது.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

ஆனால், இவ்வளவு முக்கியமான, கடுமையான போட்டியிலும் கூட ஃபிரான்ஸ் வீரர்களின் கட்டுப்பாடான விளையாட்டு ரசிக்கக் கூடியதாக இருந்தது. மாறாக இத்தனை திடீர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த மொராக்கோ மிகக் கடுமையான முரட்டு ஆட்டம் ஆடியது. ஆனால் என்ன காரணத்தினாலோ மஞ்சள் அட்டை காட்ட வேண்டிய மொராக்கோ அணியினரின் ஃபவுல்களைக் கூட நடுவர் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக, தொடர்ந்து ஃபிரெஞ்சு வீரர்களின் பாதங்களைக் குறி வைத்தே மிதித்துக்கொண்டிருந்த மொராக்கோ பின்கள வீரரான அச்ரஃப் டாரிக்கு குறைந்தது மூன்று முறையாவது சிவப்பு அட்டையே காட்டியிருக்க வேண்டும். நடுவரோ ஃபிரெஞ்சு வீரர்களின் முறையீடுகளைக் கணக்கிலெடுக்கவே இல்லை. எம்பாப்பே தனது பிய்ந்து போன ஷூ லேஸ்களைக் காட்டியபிறகும் கூட. ஒரு வேளை நடுவரும் இந்தத் திடீர் மொராக்கோ ரசிகர் மன்ற அலையில் இணைந்துவிட்டார் போல.

ஆட்டத்தின் 78 வது நிமிடத்தின் கிரீஸ்மேன், எம்பாப்பே இணை ஏற்படுத்திக் கொடுத்த எளிமையான அஸிஸ்ட்டைப் பயன்படுத்தி, சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்த குறைந்த நேரத்தில் கோலடித்ததில் இரண்டாமிடச் சாதனைக்குச் சொந்தக்காரரானார் ஃபிரான்ஸின் கோலோ முவானி. அந்த நேரத்திலேயே இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்பதை, மைதானத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்களென ஆயிரக்கணக்கான மொராக்கோ ரசிகர்களின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் உறுதிப்படுத்தியது.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை கோல் வாங்காத மொராக்கோ அணி, அரை இறுதியில் இரு கோல்களை வாங்கியது. ஆனால் கால்பந்து வரலாற்றில் இது ஒன்றும் புதிதில்லை. 1990 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் இத்தாலி அணிக்காரரும், உலகின் மிகச் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் என்று கருதப்படும் வால்டர் ஸெங்காவும் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் தோல்வி வரை எந்த கோலையும் தன்னை மீறி அனுமதிக்கவில்லை. மொராக்கோவுக்கு எதிராகவாவது ஒரு ‘ஓன் கோல்’ பதிவாகியிருக்கிறது. வால்டர் ஸெங்கா அதிலும் க்ளீன் ஸ்லேட் வைத்திருந்தார். பிற்காலத்தில் டீவி தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற வால்டர் ஸெங்கா போல, மொராக்கோ கோல் கீப்பர் யாஸினியும் கூட முயற்சி செய்யலாம், மனிதர் சிரித்தால் அவ்வளவு அழகாக இருக்கிறார்.

இந்தத் தொடரில் முதல் முறையாக கோல் வாங்கி மொராக்கோ வெளியேற, முதல் முறையாக கோல் வாங்காமல், பிரேசிலுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற அணி என்கிற வரலாற்றுச் சாதனையை வசப்படுத்தியிருக்கிறது ஃபிரான்ஸ்.

“சுதந்திரத்தின் வேர், ஒளி எழும் இடம்…”

என்று ஆரம்பிக்கும் மொராக்கோவின் தேசிய கீதம்

“செல்வோம் சகோதரர்களே, பிரம்மாண்டத்தை நோக்கி!

இவ்வுலகுக்குக் காட்டிடுவோம், நம் வாழ்க்கை என்பது

இறைவனுக்காக, தாய்நாட்டுக்காக, அரசனுக்காக….”

என்று முடிகிறது.

மொராக்கோ vs ஃபிரான்சு
மொராக்கோ vs ஃபிரான்சு

“நல்லா காட்டு காட்டுனு” இவ்வுலகுக்கு பயத்தைக் காட்டினாலும், அதில் இப்போது கால்பந்துக்காகவும் என்று ஒரு வரி சேர்க்கலாம் போல. அலி ஸ்குவாலி ஹொஸெய்னி எழுதிய மொராக்கோவின் இந்தத் தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர் லியோ மோர்கன் என்கிற ஒரு ஃபிரெஞ்சு ராணுவ தளபதி என்பது ஒரு சுவாரசியமான கூடுதல் தகவல்.

போட்டி முடிந்த பிறகு மொராக்கோ வீரர்கள் யாரும் அழவில்லை. அவர்களுக்கும் ஃபிரான்ஸ் வீரர்களுக்குமிடையேயான சகோதரத்துவத்தையும் காண முடிந்தது. களத்தில் வீரர்கள் முரட்டுத்தனம் காட்டி விளையாடினாலும், களத்துக்கு வெளியே ஆயிரம் அரசியல் பிரச்சனைகள் இருந்தாலும், அடிப்படையில் எந்த ஒரு விளையாட்டும் இறுதியாக மனிதர்களிடம் கோருவதும் இதேதான்… அது… எந்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணுவது.