Published:Updated:

Croatia v Brazil: கோல் அடிச்சது மட்டும் இல்ல; ஆதிக்கம் செலுத்தியதும் குரோஷியாதான்!

Croatia ( FIFA )

வழக்கமாக பிரேசில் அணியினரது ஆட்டம் அவர்களது புகழ்பெற்ற துள்ளலான ‘சம்பா’ நடனத்தோடு ஒத்திருக்கும். ஆனால் நேற்றைக்கு அது அப்படியில்லை.

Published:Updated:

Croatia v Brazil: கோல் அடிச்சது மட்டும் இல்ல; ஆதிக்கம் செலுத்தியதும் குரோஷியாதான்!

வழக்கமாக பிரேசில் அணியினரது ஆட்டம் அவர்களது புகழ்பெற்ற துள்ளலான ‘சம்பா’ நடனத்தோடு ஒத்திருக்கும். ஆனால் நேற்றைக்கு அது அப்படியில்லை.

Croatia ( FIFA )
கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின் காலிறுதிச் சுற்று நேற்று துவங்கியது. முதல் போட்டியில் இதுவரை ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றியிருக்கும், இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் அணியாகப் பெரும்பாலாரோல் கருதப்பட்ட தென்னமெரிக்க அணியான பிரேசிலும், கடந்த சில உலகக்கோப்பைத் தொடர்களில் அரை இறுதி, இறுதிப்போட்டிக்குத் தவறாமல் தகுதி பெறும் ஒரு வலிமையான அணியாக உருமாறியுள்ள ஐரோப்பிய அணியுமான குரோஷியாவும் மோதின.

பிரேசிலியர்கள் தங்களது முந்தைய ஆட்டத்தில் தென்கொரியாவை 4 – 1 என்ற கணக்கில் பந்தாடிவிட்டு வந்திருந்தார்கள். சொல்லப்போனால் தென்கொரியாவுடனான போட்டியை பிரேசில் அணியினர் ஒரு சர்வதேச அணி, உள்ளூர் அணியுடன் விளையாடும் ஒரு பயிற்சி ஆட்டத்தை ஆடுவது போலவே ஆடினார்கள். ஆனால் குரோஷியாவோ ஜப்பானுடனான போட்டியில் முதலில் ஒரு கோல் வாங்கி, பிற்பாதி ஆட்டத்தில் மிகக் கடுமையாகப் போராடி அதைச் சமன் செய்து, இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையிலேயே வென்று இப்போட்டிக்கு வந்திருந்தார்கள். பிரேசில் தங்களது வழக்கமான அணியைக் களமிறக்க, குரோஷிய அணி சரிபாதி பழுத்த அனுபவம் மிக்க வீரர்களைக் களமிறக்கியது.

Modric
Modric
FIFA
ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து இரு அணிகளும் சம அளவிலேயே பந்தைக் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போலத் தோன்றினாலும், நுணுக்கமாகக் கவனித்துப் பார்த்தால், ஆட்டம் குரோஷியாவின் மிக வலிமையான நடுக்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது எனலாம்.

குரோஷிய அணிக்கு லூகா மார்டிச்தான் கேப்டன். மேலும் மிகச் சிறந்த நடுக்கள வீரரும், 2018-ல் ரொனால்டோ, மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பாலன் டி’ ஓர்’ விருதைப் பெற்றவரும், கடந்த உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரர் விருதைப் பெற்றவரும் கூட. உண்மையில் அவர்தான் நேற்றைய போட்டி செல்லும் திசையைச் தீர்மானிப்பவராக இருந்தார்.

வழக்கமாக பிரேசில் அணியினரது ஆட்டம் அவர்களது புகழ்பெற்ற துள்ளலான ‘சம்பா’ நடனத்தோடு ஒத்திருக்கும். ஆனால் நேற்றைக்கு அவர்களது அந்த ‘ரிதம்’ லூகா மார்டிச்சின் துடிப்பான ஆட்டத்தாலும், குரோஷிய அணியின் நடுக்கள வீரர்களாலும் சரியாக அமைந்து வரவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.

வழக்கமான பிரேசிலின் ஆட்டமாகவே அது இல்லை. மிக அரிய நிகழ்வாக பந்து பிரேசிலுடைய எதிரணியினரின் கட்டுப்பாட்டில் நீண்ட நேரம் இருந்தது. பிரேசிலின் முதன்மை ஸ்ட்ரைக்கரும், இந்த உலகக் கோப்பைத் தொடரின் இது வரையிலான ஆட்டங்களில் மிகச் சிறந்த கோலை அடித்தவருமான ரிச்சார்லிசன் ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதிவரை பந்தைத் தொடவே முடியாதபடிக்கு குரோஷிய அணியினரின் தடுப்பாட்டம் இருந்தது. குரோஷியாவின் பின்கள ஆட்டக்காரரான ஜோஸிப் ஜுரோனாவிச்சின் முன்களம் நோக்கிய நீண்ட அதிரடி ஓட்டங்கள் கண்ணைக்கவரும் விதமாக இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

Neymar
Neymar
FIFA

இத்தனை தடைகள் இருந்தும் பிரேசில் நேற்றைய ஆட்டத்தில் மொத்தமாக பத்து முறைக்கும் மேல் கோல் போஸ்ட்டை நோக்கி பந்தைச் செலுத்தியிருந்தார்கள். வினிசியஸ் ஜூனியரின் துடிப்பான ஆட்டமும், துல்லியமான பாஸ்களும் அதற்குக் கை கொடுத்தன. அவர் தொடர்ந்து குரோஷியாவின் பெனால்டி ஏரியாவுக்குள் ஊடுருவியபடியே இருந்தார். ஆனாலும் பலனில்லைதான். குரோஷியாவின் கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச்சின் மிகச் சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக நேற்று இருந்தது பிரேசிலின் கெடுவாய்ப்பாகிப் போனது. விருந்தாளிகள் கேலரியில் அமர்ந்திருந்த பிரேசிலின் முன்னாள் கதாநாயகர்கள் ரொனால்டோ, ரிவால்டோ, ராபர்டோ கார்லோஸ் ஆகியோரது முகம் மெல்ல இறுகத் தொடங்கியது.

இரு பாதி ஆட்டநேரமும் முடிந்த பின்னரும் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை என்பதால் அரைமணிநேர ‘எக்ஸ்ட்ரா டைம்’ கொடுக்கப்பட்டது. ஆட்டத்தின் 105வது நிமிடத்தில் நெய்மார் ஜூனியர் தான் ஏன் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்தார். ஆட்டக்களத்தின் மையத்திலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு போய், பாஸ் செய்து, அதைத் துல்லியமாகத் திரும்பப் பெற்று கோலாக மாற்றினார்.

இது அவர் பிரேசிலுக்காக அடித்த 77வது கோல். இதன் மூலம் அவர் பீலேவின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார்.

இதுவே அவர் விளையாடும் கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்க வாய்ப்புள்ள லூகா மார்டிச்சின் முகம் இருண்டு போனது. ஆனாலும் குரோஷியா துவண்டுவிடவில்லை. முதல் கோல் விழுந்ததுமே பிரேசிலின் பயிற்சியாளர் ‘டைட்’ இரு வீரர்களைத் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும்படி சொன்னது தெரிந்தது. ஆனால் அதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை போல. அவர்களது சிறு கவனக்குறைவான நேரத்தில் ஆட்டத்தின் எக்ஸ்ட்ரா டைம் முடிய வெறும் மூன்றே நிமிடங்களில் குரோஷியாவின் புரூனோ பெட்விக் குரோஷிய அணிக்கான கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

Livakovic
Livakovic
FIFA
இதுவரை விளையாடிய மொத்த உலகக்கோப்பை போட்டிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில், முதலில் பிரேசில் கோலடித்திருக்கிறது. அப்படியான போட்டிகளில் பிரேசில் தோற்றது மூன்றோ, நான்கோ போட்டிகளில்தான் என்கிற வரலாறு அந்த அணிக்கு உண்டு. எனவே கிட்டத்தட்ட பிரேசிலின் வெற்றி உறுதியானது போல இருந்தது. அதே நேரம் ஆட்ட நேரம் நேரம் முடிந்து, எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்படும் போட்டிகளில் வெல்லும் வழக்கம் குரோஷியாவுக்கும் உண்டு என்பதை நிரூபித்து பிரேசிலின் வரலாற்றைத் திருத்தி எழுதி, ஆட்டத்தைப் பெனால்டி ஷூட் அவுட்டுக்குக் கொண்டு சென்றது குரோஷியா.

பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலுக்கான முதல் வாய்ப்பை இளைஞரான ரோட்ரிகோ அடிக்க, குரோஷியாவின் கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச் அபாரமாக அதைத் தடுத்தார். இந்த ஆட்டத்தின் கதாநாயகனே லிவாகோவிச்தான். மொத்த ஆட்டத்திலும் அவர் 11 முறை பிரேசிலின் கோல் வாய்ப்புகளைத் தடுத்திருந்தார். நான்காவது மற்றும் கட்டாயமாக கோலாக்க வேண்டிய வாய்ப்பை பிரேசிலின் மார்கின்ஹோஸ் கோல் போஸ்ட்டின் இடது கம்பத்தில் அடித்து தவற விட, தொடர்ந்து நான்கு கோல்களையும் குரோஷிய வீரர்கள் அடித்து அரை இறுதிக்குள் வெற்றிகரமாக நுழைந்தார்கள்.

கடைசியில் இம்முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றிவிடுவோம் என்று நினைத்திருந்த நெய்மாருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதில் வருத்தமே.