உலகக் கால்பந்து ரசிகர்களின் மாபெரும் திருவிழா FIFA உலகக்கோப்பை. இத்தெடர் நடப்பாண்டு நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெறவிருக்கிறது. இதில் பயன்படுத்தப்படவுள்ள பந்தின் பெயர் "அல்-ரிஹ்லா" (Al-Rihla). வாட்டர் இங்க் (Water-based inks and glues) கொண்டு தயார் செய்யப்பட்ட முதல் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்து இதுதான். இதை அடிடாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பைத் தொடரில் SAOT என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தவுள்ளது FIFA. இதன் மூலம் ஆஃப்சைட் முடிவுகளை விரைவாக பெற முடியும் எனத் தெரிகிறது.

SAOT என்றால் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் 12 டிராக்கிங் கேமராக்கள் ஆடுகளத்தின் கூரைகளில் பொருத்தப்படும். வீரர்கள் உடம்பில் 29 இடங்களை (கை கால்கள், தலை, கழுத்து) இந்தத் தொழில்நுட்பம் தரவுப் புள்ளிகளாக (Data points) எடுத்து கொள்ளும். வீரர்கள் எந்த இடத்தில் விளையாடுகின்றனர் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம். மேலும் பயன்படுத்தப்பட இருக்கும் பந்து AI தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தின் நடுப்பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பெயர் Inertial measurement unit. இது பந்து பற்றிய தரவுகளை நொடிக்கு 500 என கண்காணிப்பு அறைக்கு கொடுக்கும். இதன் மூலம் பந்து உதைக்கபடும் இடத்தைப் பற்றித் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும்.
இவை இரண்டும் இணைந்து அட்டாக்கர் இருக்கும் இடம் ஆஃப்சைடா என்பதை அவரின் சக வீரர் பந்தை பாஸ் செய்யும் நேரத்தில் அட்டாக்கர் எங்கிருந்தார் என்பதைப் பொறுத்து அமையும். தானாகவே ஆஃப்சைட் ஏரியாவை இந்த தொழில்நுட்பம் வரையறுக்கும். இது கண்காணிப்பு அறையில் உள்ள நடுவர்களுக்கு முதலில் தெரியும். ஆஃப்சைட் லைன் என்பது அட்டாக் செய்யும் வீரரின் கைகால்கள் போன்ற தரவு புள்ளிகளிலிருந்து முடிவு செய்யப்படும். இவையெல்லாம் சில விநாடிகளில் நடைபெறும். பின்னர், களத்தில் உள்ள நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

இதை களத்தில் உள்ள நடுவர்களுக்கு 3D அனிமேஷனாக காட்டப்படும். அவர்கள் அதிலிருந்து இறுதி முடிவை வழங்குவர். மேலும் இது ரசிகர்களுக்கு பெரிய திரையில் காண்பிக்கப்படும். இது அனைத்தும் SAOT என்னும் AI தொழில்நுட்பத்தின் மூலம் நிகழும். இந்தத் தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்தும். VAR எனப்படும் Video Assistance Refree system நடைமுறையில் இருந்து வருகிறது . இந்தத் தொழில்நுட்பம் 2018 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக முழுமையாக பயன்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக தொடர்களில் பயன்படுத்தப்பட்ட நிலையில் சில முக்கியமான தருணங்களில் சர்ச்சைக்குள்ளானது. 2020 ஆண்டில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அர்ஜென்டினா - பராகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல் VAR மூலம் நிராகரிக்கப்பட்டது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இது ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உலகக்கோப்பையில் SAOT தொழில்நுட்பம் VAR தொழில்நுட்பத்துடன் இணைந்து பயன்படுத்தப்படவுள்ளது.
SAOT தொழில்நுட்பம் இதற்கு முன்னர் FIFA அரபுக் கோப்பை 2021-ல் வெற்றிகரமாக பயன்படுத்தி பார்க்கப்பட்டுள்ளது. கால்பந்தில் ஆஃப்சைட் முடிவுகளும் சர்ச்சைகளும் என்பது எப்போதும் "Never ending love story" போன்றது. அவை சரியாக தான் வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய FIFA அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் நல்ல பலன்களை தரும் என நம்புவோம்.