உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த விவகாரம் விளையாட்டு அரங்கிலும் வெளிப்பட்டு வருகிறது. போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல விளையாட்டு வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவருகின்றனர். மறுபுறம் ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு எதிராக பல்வேறு கால்பந்து கிளப்களும் ரஷ்யாவில் நடக்கவிருக்கும் போட்டிகளை ரத்துசெய்துள்ளன.

இந்நிலையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA இனி ரஷ்யா நாட்டில் எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறாது என அறிவித்திருக்கிறது. மேலும் 2022 ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ரஷ்ய தேசிய அணிக்கு தடை விதித்துள்ளது. அதற்கு பதில் ரஷ்ய கால்பந்து யூனியன் என்ற பெயரில் அந்த அணி பங்கேற்கலாம் என தெரிகிறது. அப்படிச் செய்தால் அந்நாட்டின் கொடி மற்றும் தேசிய கீதத்தை பயன்படுத்த இயலாது. இது குறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மிக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியான அறிவிப்பு வந்தபோதும், ரஷ்ய கால்பந்து யூனியன் என்ற பெயரிலிலுமே ரஷ்யாவை விளையாட அனுமதிக்கக்கூடாது என முக்கிய அணிகள் சில கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகக்கோப்பைக்கான தகுதிப்போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக விளையாட போலந்து, ஸ்வீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதற்கான தீர்வை உடனடியாக எடுக்க அந்தந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது ஃபிஃபா.