Published:Updated:

15 போட்டிகளில் முதல் கோலடித்த ஸ்டெர்லிங்... வெற்றியோடு தொடங்கிய இங்கிலாந்து! #Euro2020

Raheem Sterling ( AP )

குரோஷியாவை வீழ்த்தி யூரோ 2020 தொடரை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து. மிகவும் சுமாராகவே விளையாடியிருந்தாலும், ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த கோல், அந்த அணிக்கு 3 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

15 போட்டிகளில் முதல் கோலடித்த ஸ்டெர்லிங்... வெற்றியோடு தொடங்கிய இங்கிலாந்து! #Euro2020

குரோஷியாவை வீழ்த்தி யூரோ 2020 தொடரை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து. மிகவும் சுமாராகவே விளையாடியிருந்தாலும், ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த கோல், அந்த அணிக்கு 3 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

Published:Updated:
Raheem Sterling ( AP )

வெம்ப்ளியில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நன்றாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வயதான குரோஷிய வீரர்களை இங்கிலாந்து வீரர்கள் தங்கள் வேகத்தால் திணறடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அட்டாக்கில் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியாமல் தடுமாறினர். கேப்டன் ஹேரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங், ஃபில் ஃபோடன் அடங்கிய அட்டாக்கிங் கூட்டணி சொதப்பித்தள்ளியது. குறிப்பாக வலது விங் முழுவதும் உயிரற்றுக் கிடந்தது. ஆரம்பத்திலேயே அட்டகாசமான ஒரு மூவால் போஸ்ட்டை அடித்த ஃபோடன் அதன்பிறகு எதுவுமே செய்யவில்லை. கைல் வால்கர் அட்டாக்கில் சேராததும் அதற்கொரு காரணம்.

England vs Croatia
England vs Croatia
AP

மேனேஜர் சௌத்கேட் கீரன் டிரிப்பியரை இடது ஃபுல்பேக் பொசிஷனில் ஆடவைத்ததும் கேள்வியெழுப்பியது. இடது விங்கில் ட்ரிப்பிள் செய்து அட்டாக்கிங் தேர்டுக்குள் நுழைவதெல்லாம் செய்யவே இல்லை. நடுகளத்தில் ஆடிய கேல்வின் ஃபிளிப்ஸ் மட்டும்தான் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொல்லப்போனால் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே செயல்பட்டார். நடுகளத்தில் பால் பொசஷன் மீட்பது, அட்டாக்கில் இணைவது, ஷாட் எடுப்பது என முழுமையான மிட்ஃபீல்டராக செயல்பட்டார் ஃபிளிப்ஸ்.

இங்கிலாந்து அடித்த அந்த ஒரு கோலிலும் அவர் பங்களிப்பு இருந்தது. வலது விங்கில் கீழே இறங்கி ஆடிய கேப்டன் கேன், டிஃபெண்டர்களை அவரோடு இழுத்துவர அட்டாகிங் தேர்டில் கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்தார் ஃபிளிப்ஸ். அதே சமயம் பாக்ஸுக்கு நடுவே ஸ்டெர்லிஙும் நுழைய, அவரை சரியாகக் கணித்து பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அனுப்பினார் ஃபிளிப்ஸ். அதுவரை சொதப்பிக்கொண்டிருந்த ஸ்டெர்லிங் அதை கோலாக மாற்றினார். யூரோ, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இதற்கு முன்பு விளையாடிய 14 போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்த ஸ்டெர்லிங்குக்கு இந்த கோல் மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது.

போட்டியின் கடைசி நிமிடங்களில் இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹமுக்கு வாய்ப்பு வழங்கினார் சௌத்கேட். 17 ஆண்டு, 349 நாள்களே ஆன பெல்லிங்ஹம், யூரோ கோப்பையில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.

கடைசி கட்டத்தில் குரோஷிய அணி லாங் பால்கள், கிராஸ்கள் என முயற்சி செய்தும் அவர்களால் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இறுதியில் அந்தப் போட்டி 1-0 என முடிந்தது. இதற்கு முன்பு நடந்த யூரோ தொடர்களின் முதல் போட்டிகளில் இங்கிலாந்து தோற்காமலும், குரோஷிய அணி தோற்காமலும் இருந்து வந்தன. அந்த இரண்டுமே இப்போது மாறிவிட்டது.

இங்கிலாந்து vs குரோஷிய போட்டியைத் தொடர்ந்து ஆஸ்திரியா, நார்த் மெசடோனியா அணிகள் ரொமேனியாவில் மோதின. நார்த் மெசடோனியா அணிக்கு உலக அரங்கில் இது முதல் போட்டி. அதனால், தங்கள் வீரர்கள் வரலாறு படைப்பதைப் பார்க்க அந்நாட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். சீறிய எமோஷன்களுக்கு மத்தியில் அந்த அணியை வழிநடத்தினார் கேப்டனும் ஜாம்பவானுமான கோரன் பாண்டேவ்.

Goren Pandev
Goren Pandev
AP

ஆட்டத்தின் 18-வது நிமிடத்திலேயே கோலடித்து ஆஸ்திரியாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் ஸ்டீவன் லெய்னர். ஆனால், அடுத்த 10 நிமிடங்களிலேயே மெசடோனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கோலை அடித்தார் கேப்டன் பாண்டேவ். ஆஸ்திரிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியும் அவர்களால் அவ்வளவு எளிதாக இரண்டாவது கோலை அடித்துமுடியவில்லை. ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்க கடைசி கட்டத்தில் வீறுகொண்டெழுந்தது ஆஸ்திரியா. 78-வது நிமிடத்தில் கிரெகோவிட்ச் இரண்டாவது கோல் அடித்து மீண்டும் முன்னிலை ஏற்படுத்த, 89-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடித்தார் சீனியர் வீரர் மார்கோ ஆர்னடோவிச். ஆட்டம் 3-1 என முடிவுக்கு வந்தது.

ஆம்ஸ்டர்டாமில் நடந்த மூன்றாவது போட்டியில் நெதர்லாந்து அணி உக்ரைனை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டன. அதனால், ஆட்டப் பரபரப்பாகச் சென்றது. முதல் பாதியில் 10 ஷாட்கள் அடித்திருந்தும் நெதர்லாந்தால் கோல் போட முடியவில்லை. ஒருசில அட்டகாச வாய்ப்புகளை உக்ரைன் கோல்கீப்பர் புஷான் சிறப்பாகச் செயல்பட்டு தடுத்துவிட்டார். ஆனால், இரண்டாவது பாதியில் உக்ரைன் தடுமாறி, இரண்டு கோல்கள் விட்டது. முதலில், நெதர்லாந்து கேப்டன் வைனால்டம் கோலடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுக்க, வௌட் வெகோர்ஸ்ட் இரண்டாவது கோலை அடித்தார்.

Netherlands vs Ukraine
Netherlands vs Ukraine
AP

மிட்ஃபீல்டில் பந்தை சில நொடிகள்கூட தங்கள் வசம் வைக்க முடியாமல் தடுமாறியது உக்ரைன். அதனால், அவர்களால் எந்த நல்ல அட்டாக்கும் செய்ய முடியவில்லை. ஆனால், நெதர்லாந்து அசந்த இரண்டு தருணங்களில் அவர்கள் இரண்டு கோல்கள் அடித்தனர். அதுவரை சுமாராக ஆடிவந்த உக்ரைன் கேப்டன் யார்மலென்கோ, திடீரென ஒரு அட்டகாசமான லாங் ஷாட் மூலம் கோலடித்தார். அடுத்த நான்காவது நிமிடம், மலினோவ்ஸ்கி எடுத்த ஃப்ரீ கிக்கை அட்டகாசமான ஹெட்டர் மூலம் கோலாக்கினார் யரேம்சுக். ஆட்டம் 2-2 என சூடு பிடிக்க, 85-வது நிமிடம் மீண்டும் ஒரு தவறு செய்தது உக்ரைன். கோல்கீப்பர் புஷான் இரு தவறுகள் செய்ய, முதல் பாதியில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் டம்ஃப்ரைஸ் இம்முறை ஹெட்டர் செய்ய, நெதர்லாந்துக்கு மூன்றாவது கோல் விழுந்தது. தொடரை வெற்றிகரமாக தொடங்கியது நெதர்லாந்து அணி.