Published:Updated:

EURO 2020: ஜெர்மனியை வெளியேற்றிய இங்கிலாந்து... 25 ஆண்டுகாலப் பகையைத் தீர்த்த செளத்கேட்!

Gareth Southgate
Gareth Southgate ( AP )

ஜூன் 26, 1996. வெம்ப்ளி மைதானம். இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம். இங்கிலாந்து ரசிகர்களின் கோஷம் வானைப் பிளந்துகொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கள் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவதைக் காண ஆர்வமாக இருந்தார்கள்.

ஜூன் 26, 1996... வெம்ப்ளி மைதானம். இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதி. இங்கிலாந்து ரசிகர்களின் கோஷம் வானைப் பிளந்துகொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கள் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவதைக் காண ஆர்வமாக இருந்தார்கள். ஏனெனில், 1966-ம் ஆண்டு சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றிருந்த இங்கிலாந்து, அதன்பிறகு பெரிதாக ஜொலிக்கவில்லை. இப்போது மீண்டும் இங்கிலாந்திலேயே போட்டி நடப்பதால் கோப்பை மீண்டும் வெல்லப்படும் என்று நம்புகிறார்கள். 'It's coming home' என்ற பாடல் பிரபலமாக அரங்கெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Gareth Southgate
Gareth Southgate
AP

இரண்டு அணிகளும் 1 கோல் அடித்திருக்க பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்குச் செல்கிறது போட்டி. 5 வாய்ப்புகளையும் இரு அணி வீரர்களும் கோலாக்குகிறார்கள். சடன் டெத் அடிக்க வருகிறார் இங்கிலாந்து டிஃபண்டர் கேரத் சௌத்கேட். வலுவற்ற அவரது ஷாட்டை எளிதாகத் தடுத்துவிடுகிறார் ஜெர்மனி கோல்கீப்பர் கோப்கே. இங்கிலாந்து ரசிகர்களின் இதயம் நொறுங்குகிறது. அந்த கோஷம் அப்படியே அடங்குகிறது. வெம்ப்ளி முழுதும் நிசப்தம். தன் வாய்ப்பை கோலாக்கி, ஜெர்மனியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்கிறார் கேப்டன் ஆண்ட்ரே மோலர். ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களுக்கும் மத்தியில் குற்றவுணர்ச்சியோடு நிற்கிறார் சௌத்கேட்.

25 ஆண்டுகள் 4 நாள்களுக்குப் பிறகு...

மீண்டும் யூரோ. மீண்டும் வெம்ப்ளி. மீண்டும் இங்கிலாந்து vs ஜெர்மனி. இந்த 25 ஆண்டுகளிலும் இங்கிலாந்து எதுவும் வென்றுவிடவில்லை. ஒவ்வொரு பெரிய தொடரின்போதும் எழுந்த 'It's coming home' கோஷம் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த அந்த அணி, இம்முறை எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், போர்ச்சுகலைப் பந்தாடிய ஜெர்மனியைத் தடுப்பது கடினம் என்றுதான் விமர்சகர்கள் கருதினார்கள். ஒவ்வொரு முறையும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து வீரர்கள், தங்களை நிரூபிக்கவேண்டிய நெருக்கடியோடுதான் நேற்று வெம்ப்ளியில் காலெடுத்துவைத்தார்கள்.

England vs Germany
England vs Germany
AP

ஜெர்மனியின் 3-4-3 ஃபார்மேஷனுக்கு ஈடுகொடுக்க, இங்கிலாந்தும் அதே ஃபார்மேஷனோடு களமிறங்கியது. 2018 உலகக் கோப்பையில் விளையாடிய அதே 3 டிஃபண்டர்கள் : ஹேரி மகுயர், ஜான் ஸ்டோன்ஸ், கைல் வால்கர் ஆகியோரே இந்தப் போட்டியிலும் தொடங்கினார்கள். நடுகளத்தில் டெக்லன் ரைஸ், கேல்வின் ஃபிளிப்ஸ் ஆகியோர் விளையாடியதால், நடுகளத்தில் 'கிரியேட்டிவிட்டி' இருக்காது என்றும் விமர்சனங்கள் பறந்தது. ஆனால், அந்த 90 நிமிடங்களில் அனைத்தையும் பொய்யாக்கினர் இங்கிலாந்து வீரர்கள்.

முதல் 45 நிமிடங்களில் நிறைய வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஜெர்மனியின் துருப்புச் சீட்டாகக் கருதப்பட்ட ஜோஷுவா கிம்மிக், ராபின் கோசன்ஸ் ஆகியோரை கட்டுக்குள் வைத்திருந்தனர் இங்கிலாந்து விங் பேக்குகளாக லூக் ஷா, கீரன் டிரிப்பியர் இருவரும். தடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் அட்டாக்கிலும் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தனர். ஸ்டெர்லிங், சகா இருவரும் தங்கள் வேகத்தைப் பயன்படுத்தி ஜெர்மனி டிஃபண்டர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினர்.

Jordan Pickford
Jordan Pickford
AP

முதல் பாதியில் இங்கிலாந்து ஓரளவு ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. இரண்டாவது பாதியும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆனால், கோல்கள்தான் எதுவும் அடிக்க முடியவில்லை. டிமோ வெர்னர், ஹேரி கேன் ஆகியோர் நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டனர். ஹாவர்ட்ஸ், ஸ்டெர்லிங் அடித்த ஷாட்களை இரண்டு கோல்கீப்பர்களும் அட்டகாசமாகத் தடுத்தனர். எங்கே எக்ஸ்டிரா டைம் போகுமே என்று எதிர்பார்த்த நேரத்தில் 75-வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்தது.

வலது விங்கில் இருந்து கட் இன் செய்து உள்ளே வந்த ஸ்டெர்லிங் பாக்சுக்கு அருகில் நின்ற கேனுக்கு பாஸ் செய்தார். நன்றாக ஹோல்ட் செய்து அதை கிரீலிஷுக்குக் கொடுத்தார் கேன். அதை அட்டகாசமாக கன்ட்ரோல் செய்து இடதுபக்கம் இருந்த லூக் ஷாவிக்குப் பாஸ் செய்தார் ஆஸ்டன் விலா கேப்டன். அதை முதல் டச்சிலேயே பெனால்ட்டி ஏரியாவுக்குள் அனுப்பினார் லூக் ஷா. அந்த 'மூவை' தொடங்கிவைத்த ஸ்டெர்லிங் அதை முடித்தும் வைத்தார். ஒரே டச்சில் கோலுக்குள் அனுப்ப முன்னிலை பெற்றது இங்கிலாந்து.

Raheem Sterling
Raheem Sterling
AP

சில நிமிடங்கள் கழித்து ஸ்டெர்லிங் செய்த ஒரு தவறால் தாமஸ் முல்லருக்குக் கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனியாக கோல்கீப்பரோடு ஒன் ஆன் ஒன். ஆனால், பாக்சுக்கு வெளியே இருந்த அவர் அடித்த ஷாட், கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்றது. போட்டியை சமனாக்கும் முயற்சியை தவறவிட்டார் முல்லர். உலகக் கோப்பையில் 10 கோலடித்திருக்கும் அவரால், இன்னும் யூரோவில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஜெர்மனி இன்னும் உக்கிரமாகப் போராடும் என்று நினைத்தபோது, இரண்டாவது கோலை அடித்தது இங்கிலாந்து. கனேப்ரியிடம் இருந்து பந்தைப் பறந்து இடது புறமிருந்து உள்ளே வந்து கிரீலிஷுக்குப் பாஸ் செய்தார் லூக் ஷா. அதை அவர் பெனால்ட்டி ஏரியாவுக்கு கிராஸ் செய்ய, அட்டகாசமாக ஹெட்டர் செய்து கோலடித்தார் கேப்டன் ஹேரி கேன். 2-0... இங்கிலாந்து காலிறுதிக்குச் சென்றது.

Harry Kane goal
Harry Kane goal
AP

இங்கிலாந்து வீரர்களைப் பொறுத்தவரை பலருக்கும் இந்த அரங்கில் தங்களை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. லூக் ஷாவின் கன்சிஸ்டன்ஸி தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்பட்டது, பிக்ஃபோர்ட் ஒட்டுமொத்த உலகத்தாலும் விமர்சிக்கப்பட்டார், சாம்பியன்ஸ் லீக் பைனலில் ஸ்டெர்லிங்கை பிளேயிங் லெவனில் எடுத்ததற்கு பெப் கார்டியோலாவே விமர்சனத்துக்குள்ளானார். இந்தத் தொடரின் 3 லீக் போட்டிகளிலும் கோலடிக்கத் தவறியிருந்தார் கேப்டன் ஹேரி கேன். இவர்கள் ஒவ்வொருவருமே தங்களை நிரூபித்தார்கள்.

EURO 2020 : உலக சாம்பியன் பிரான்ஸை வெளியேற்றிய ஸ்விட்சர்லாந்து... குரோஷியாவிடம் போராடிய ஸ்பெயின்!

இவர்களையெல்லாம் விட ஒருவருக்குத் தன்னை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் மேனேஜராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், தன் டிஃபன்ஸிவ் ஸ்டைலால் இங்கிலாந்து ரசிகர்களாலேயே வெறுக்கப்பட்டார். நிச்சயம் இவரால் இங்கிலாந்தை கோப்பை வெல்ல வைக்க முடியாது என்று பலரும் ஆருடம் கூறினார்கள். ஒவ்வொரு முறையும் அவரது முடிவுகள் விமர்சனத்துக்குள்ளானது. அவரது ஸ்குவாட் செலக்ஷன், டீம் செலக்ஷன் ஒவ்வொன்றையும் குறை கூறினார்கள். ஆனால், நேற்று அனைவருக்கும் பதில் கூறினார். அதே வெம்ப்ளியில், அதே ஜெர்மனிக்கு எதிராக, அதே இங்கிலாந்து ரசிகர்களுக்கு மத்தியில்... அதே கேரத் சௌத்கேட்.

The man of the moment
The man of the moment
AP
அன்று, நடுவரின் விசில் அடிக்கப்பட்டபோது சௌத்கேட்டின் தலை கவிழ்ந்திருந்தது. கவிழ்ந்திருந்த தலையின் பின்னால் கட்டப்பட்டிருந்தன அவர் கைகள். இப்போது, அவர் தலை வான் நோக்க, கைகள் வெற்றிக் களிப்பில் உயிர்ந்திருந்தன. பின்னால், அந்த கோஷம் எழுந்துகொண்டிருந்தது - It's coming home!
அடுத்த கட்டுரைக்கு