ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றிருக்கவேண்டிய தொடர் அப்படியே ஓர் ஆண்டு இடைவெளிக்கிப்பின் நேற்று முன்தினம் இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கியது. ஜூலை 11ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற இருக்கும் இத்தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
இதில் குருப் பி பிரிவில் உள்ள டென்மார்க் - ஃபின்லாந்து அணிகள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் மோதின. போட்டியின் முதல் பாதி முடியும்தருவாயில் டென்மார்க்கின் முக்கிய வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.





உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பார்வையாளர்கள் பகுதியில் உட்கார்ந்திருந்த எரிக்சனின் மனைவி உடனடியாக தடுப்புகளைத்தாண்டி கணவரைக் காணப் பதறி ஓடிவந்தது எல்லோரையும் கண்கலங்கவைத்தது. மைதானத்தில் இருந்தபடியே சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எரிக்சன்.
ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டதாக ஐரோப்பிய கால்பந்து அமைப்பு அறிவித்தது. ஆனால், எரிக்சன் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தன் அணி வீரர்களுடன் பேசினார் என்றும் அறிவித்த அதிகாரிகள், ஆட்டம் மீண்டும் தொடரும் என அறிவித்தனர்.

ஆட்டம் தொடங்கியது. முதல்முறையாக யூரோ கோப்பைக்குத் தகுதிபெற்று விளையாடும் ஃபின்லாந்து முதல் கோலை அடித்தது. ஃபின்லாந்து வீரர் ஜோயல் பேஜன்பேலோ கோல் அடித்தார். இதன்பிறகு டென்மார்க்கிற்கு கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் அது வீணடிக்கப்பட இறுதியில் ஃபின்லாந்து வென்றது.
யூரோ கோப்பையின் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது ஃபின்லாந்து. ஆனாலும், போட்டியின் நடுவே வீரர் ஒருவர் மயங்கி விழுந்தது கால்பந்து வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்டியன் எரிக்சன் விரைவில் உடல்நலம்பெற உலகம் முழுவதும் பிரார்த்தனைகளை நடைபெற்றுவருகின்றன.