உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதலிடத்தைப் பெறுவதற்கான இறுதிப் போட்டியிலிருக்கும் விறுவிறுப்பு மூன்றாவது இடத்தைப் பெறும் போட்டியில் இருக்காதுதான்.
ஆனாலும் கூட நேற்று நடந்த மூன்றாமிடத்துக்கான போட்டியில் குரோஷியாவும், மொராக்கோவும் கடும் போட்டியோடுதான் விளையாடினார்கள்.
மூன்றாம் இடத்தைப் பெறுவதனால் என்ன கிடைக்கும்? அதிகமில்லை மக்களே... இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய் கிடைக்கும். நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு கிட்டத்தட்ட 204 கோடி ரூபாய் கிடைக்கும்.
ஆக, நேற்று ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை நூல் இழையில் தவறவிட்ட மொராக்கோ, இழந்தது ஒரு கோலையும், மூன்றாமிடத்தையும் மட்டுமல்ல. கிட்டத்தட்ட பதினாறு கோடி ரூபாயை...
முதலிரண்டு இடங்களைப் பற்றியெல்லாம் கேள்வியே கேட்காதீர்கள். இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 245 கோடி ரூபாய் கிடைக்கும். உலகக் கோப்பையைக் பைப்பற்றும் அணிக்கு அதைவிட 99 கோடி ரூபாய் அதிகமாக 344 கோடி ரூபாய் பரிசுத் தொகை காத்திருக்கிறது.
அதனால்தான் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணி, தான் வெல்லும் அணியை விட 16 கோடி ரூபாயைக் கூடுதலாக அள்ளி மகிழ்ச்சிக் கூத்தாட, இரண்டாம் இடம் பிடிக்கும் அணி "99 கோடி ரூபாய் போச்சப்பே, போச்சு" என்று அழுகிறார்கள் போல...

ஏற்கனவே ஃபிரான்ஸ் பொத்தல் போட்டு வைத்திருந்த மொராக்கோ கோட்டைச் சுவரின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆட்டம் ஆரம்பித்து சற்று நேரத்திலேயே ஒரு கோலைப் போட்டு முன்னிலை பெற்றது குரோஷியா. அந்த கோல் மூலம் குரோஷிய அணிக்காக இளம் வயதில் கோலடித்த சாதனைக்குச் சொந்தக்காரரானார் உலகின் மிகச் சிறந்த தடுப்பாட்டக்காரராக வருவதற்குரிய எல்லாத் தகுதிகளும், இளமையும் கொண்ட ஜோஸ்கோ வார்டியோல். தம்பிக்கு பிரகாசமான எதிர்காலம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என ஆரூடம் சொல்கிறார்கள் கால்பந்து நிபுணர்கள்.
ஆனால் "தடுப்பாட்டமெல்லாம் நேத்தைக்கு, இன்றைக்கு அட்டாக்கு" என்று ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றி, தாக்குதல் ஆட்டத்தைக் கைக்கொண்டு சில நிமிடங்களிலேயே பதில் கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் மொராக்கோவின் பின்கள வீரரான அச்ரஃப் டாரி. டாரிக்கு ஃபிரான்சுடனான ஆட்டத்தில் சிவப்பு அட்டை வழங்கப்படாத நல்வாய்ப்பு இன்று கைகொடுத்தது, அவரும் தனது முதல் சர்வதேச கோலை அடித்துவிட்டார். இல்லையென்றால் இன்று பெஞ்ச்சில் காத்திருக்க வேண்டியதிருந்திருக்கும்.
ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில்
ஓஷிச் பெனால்டி ஏரியாவின் ஓரத்திலிருந்த உதைத்த பந்து மொரோக்கோ கோல்போஸ்டின் கம்பத்தில் பட்டுத் திரும்பி வலைக்குள் தஞ்சம் புகுந்து கோலானது. இடைவேளையின் போது குரேஷியா 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் நூலிழையில் கை நழுவி, ஆட்டத்தைப் பரபரப்பாகவே வைத்திருப்பதற்கு மட்டும் உதவின.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தங்களுடைய முதல் ஆட்டத்தை குரோஷியாவும், மொராக்கோவும் தங்களுக்குள்தான் ஆடினார்கள். அவர்களுடைய இறுதி ஆட்டமும் இவ்விரு அணிகளுக்குள்ளேயே நடைபெற்றது. இடையில்தான் எத்தனையெத்தனை ஆட்டங்கள், வெற்றிகள், கொண்டாட்டங்கள், தோல்விகள், பரபரப்புகள்....?
போன முறை இரண்டாம் பிடித்த குரோஷியாவுக்கு இந்த முறை கிடைத்திருக்கும் மூன்றாமிடம் ஒரு படி குறைவுதான் என்றாலும், வருங்காலத்தில் அந்த அணி என்றேனும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றே தீரும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
நான்காமிடம் பிடித்த மொராக்கோவோ, ஐரோப்பிய, தென்னமெரிக்க அணிகளுக்கெதிராக மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, ஆசிய, ஆப்பிரிக்க, கால்பந்து கிறுக்குப் பிடித்த அரபு நாடுகளுக்குப் புதியதொரு உத்வேகத்தை அளித்திருக்கிறது.

மொத்த உலகமும் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் கோப்பையை மட்டுமல்ல, கோடிக்கணக்கான பணத்தையும், பெயரையும் புகழையும் கைப்பற்றப் போகும் அணி எதுவெனத் தெரிந்து கொள்ள உச்சபட்ச ஆர்வத்துடன் காத்திருக்கிறது.