Published:Updated:

Premier League: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக்! கிளப் கரியரில் அரைசதம் கடந்தார்

Cristiano Ronaldo ( AP )

கிளப் கால்பந்து வரலாற்றில் இது ரொனால்டோவின் 50-வது ஹாட்ரிக். ரியல் மாட்ரிட் அணிக்காக 44 முறையும், யுவன்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடட் அணிகளுக்காக தலா 3 முறையும் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் ரொனால்டோ.

Premier League: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக்! கிளப் கரியரில் அரைசதம் கடந்தார்

கிளப் கால்பந்து வரலாற்றில் இது ரொனால்டோவின் 50-வது ஹாட்ரிக். ரியல் மாட்ரிட் அணிக்காக 44 முறையும், யுவன்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடட் அணிகளுக்காக தலா 3 முறையும் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் ரொனால்டோ.

Published:Updated:
Cristiano Ronaldo ( AP )

நார்விச் சிட்டி அணியுடனான பிரீமியர் லீக் போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதன்மூலம், கிளப் கால்பந்து வரலாற்றில் தன்னுடைய 50-வது ஹாட்ரிக்கையும் பதிவு செய்தார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று நடந்த பிரீமியர் லீக் போட்டியில், நார்விச் சிட்டியை சந்தித்தது மான்செஸ்டர் யுனைடட். புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணியுடனான போட்டி என்பதால், நிறைய மாற்றங்கள் செய்திருந்தார் மான்செஸ்டர் யுனைடட் பயிற்சியாளர் ரால்ஃப் ராக்னிக். நிறைய அட்டாகிங் வீரர்களைக் களமிறக்கியிருந்தார்.

அவர் ஏதிர்பார்த்ததைப்போலவே அட்டகாசமாக ஆட்டத்தைத் தொடங்கியது யுனைடட். ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே கோலடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நார்விச் பாக்சுக்குள் பந்தை வைத்திருந்த டிஃபண்டர் பென் கிப்சனிடமிருந்து பந்தைப் பறித்த இளம் வீரர் ஆன்டனி எலாங்கா, பெனால்டி ஏரியாவுக்குள் நுழைந்த ரொனால்டோவின் பாதையில் பந்தை பாஸ் செய்தார். அதை முதல் டச்சிலேயே கோலாக்கினார் சி.ஆர்.7.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கோலுக்கு முன்பே பெரும் அதிர்ச்சியை மான்செஸ்டர் யுனைடட் சந்தித்திருக்கும். மூன்றாவது நிமிடத்திலேயே யுனைடட் பாக்சுக்குள் பந்தோடு நுழைந்தார் நார்விச் ஸ்டிரைக்கர் டீமு புக்கி. நல்லவேளையாக கோல்கீப்பர் டேவிட் டி கா அதைத் தடுத்துவிட்டார். 30-வது நிமிடத்துக்குப் பிறகு மான்செஸ்டர் யுனைடட் அடுத்தடுத்து அட்டாக் செய்துகொண்டே இருந்தது. போக்பா, சான்சோ, ரொனால்டோ, டியாகோ டலோ, லின்கார்ட் என அனைவரும் தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டனர். இதன் பலனாக 32-வது நிமிடத்தில் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. அதையும் ரொனால்டோ கோலாக்க, இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றது மான்செஸ்டர் யுனைடட். சான்சோவின் ஷாட்டை குரூல் தடுத்து கார்னராக்க, கிடைத்த கார்னரை முதல் போஸ்ட்டுக்கு அருகில் கிராஸ் செய்தார் அலெக்ஸ் டெல்லஸ். தன் வழக்கமான ஸ்டைலில் உயர எம்பி ஹெட்டர் மூலம் அதை கோலாக்கினார் ரொனால்டோ.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
AP

2 கோல் முன்னிலையை யுனைடட் சிறப்பாகத் தக்கவைத்துக்கொண்டிருக்க, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் நார்விச் சிட்டி கோலடித்து அதிர்ச்சியளித்தது. ஜியான்னிஸ் கொடுத்த பாஸைப் பெற்று, மான்செஸ்டர் யுனைடட் டிஃபண்டர் லிண்டலாஃபை ஏமாற்றி இரண்டாவது போஸ்ட்டுக்கு அருகில் கிராஸ் செய்தார் டீமு பூக்கி. அங்கிருந்த கீரன் டோவல் ஹெட்டர் மூலம் அதை கோலாக்கினார். அதனால், யுனைடடின் முன்னிலை குறைந்தது. முதல் பாதி 2-1 என முடிவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது பாதி தொடங்கி ஏழாவது நிமிடத்திலேயே அந்த முன்னிலையை முற்றிலுமாக காலி செய்தது நார்விச் சிட்டி. முதல் கோல் அடிக்க டோவலுக்கு பூக்கி உதவ, இம்முறை பூக்கி கோலடிக்க உதவினார் டோவல். யுனைடட் டிஃபண்டர்களை ஏமற்றி டோவல் த்ரூ பால் கொடுக்க, டி காவை ஏமாற்றி கோலாக்கினார் பூக்கி. அதனால், ஆட்டம் 2-2 என சமனானது.

அதன்பிறகு இரண்டு அணிகளுமே சில முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், இரண்டு கோல்கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு அந்த முயற்சிகளைத் தடுத்தனர். சொல்லப்போனால், மான்செஸ்டர் யுனைடட் அணியைவிட நார்விச் அதிக முயற்சிகள் மேற்கொண்டது. ஆட்டம் சமநிலையில் சென்றுகொண்டிருக்கும்போது, நார்விச் பாக்சுக்கு வெளியே எலாங்காவை ஃபவுல் செய்தார் நார்விச் டிஃபண்டர் ஜியான்னூலிஸ். அந்த ஃப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி ஹாட்ரிக்கை நிறைவு செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
AP

கிளப் கால்பந்து வரலாற்றில் இது ரொனால்டோவின் ஐம்பதாவது ஹாட்ரிக். ரியல் மாட்ரிட் அணிக்காக 44 முறையும், யுவன்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடட் அணிகளுக்காக தலா 3 முறையும் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் ரொனால்டோ. போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச அரங்கில் 9 முறையும் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருக்கிறார்.

ரொனால்டோவின் இந்த ஹாட்ரிக் மூலம் 3-2 என வெற்றி பெற்று, பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடட். 32 போட்டிகளில் 54 புள்ளிகள் பெற்றிருக்கிறது அந்த அணி.

பிரீமியர் லீகில் நடந்த மற்ற போட்டிகளில் சில அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்தன. நான்காம் இடத்திலிருக்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியுடனான போட்டியில் 0-1 என தோல்வியைத் தழுவியது. 90-வது நிமிடத்தில் லியாண்ட்ரே ட்ரொசார்ட் அடித்த கோல் அந்த அணியை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இருக்கும் இன்னொரு அணியான ஆர்செனலும் அதே ஸ்கோரில் தோல்வியைத் தழுவியது. சௌதாம்ப்டன் அணியின் யான் பெட்னரக் அடித்த கோல், மைக்கேல் ஆர்டேடாவின் அணியை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளியது.

Tottenham Hotspur vs Brighton & Hove Albion
Tottenham Hotspur vs Brighton & Hove Albion
AP

மற்றொரு போட்டியில், கடைசி நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலால் வாட்ஃபோர்ட் அணியை வீழ்த்தியது பிரென்ட்ஃபோர்ட். போட்டி 1-1 என சென்றுகொண்டிருந்த நிலையில் கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் யான்சன் கோலடித்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism