Published:Updated:

கிறிஸ்டியானோ ரொனால்டோ - இந்தப் பேரண்டத்தின் பேரதிசயம்! | HBD Cristiano Ronaldo

Cristiano Ronaldo

ஃபுன்சால் கிராமத் தெருக்களில் பந்துகளை உதைத்திரிந்தபோது, 'ஃபுட்பால் பிளேயர்' ஆவேன் என்று யாரிடமும் சொல்லியதில்லை. ஸ்போர்டிங் அணியில் வளர்ந்துவந்தபோது, 'பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்று சொல்லியதில்லை. ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லியது 'வேர்ல்ட் பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்பதுதான்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - இந்தப் பேரண்டத்தின் பேரதிசயம்! | HBD Cristiano Ronaldo

ஃபுன்சால் கிராமத் தெருக்களில் பந்துகளை உதைத்திரிந்தபோது, 'ஃபுட்பால் பிளேயர்' ஆவேன் என்று யாரிடமும் சொல்லியதில்லை. ஸ்போர்டிங் அணியில் வளர்ந்துவந்தபோது, 'பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்று சொல்லியதில்லை. ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லியது 'வேர்ல்ட் பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்பதுதான்.

Published:Updated:
Cristiano Ronaldo

வறுமையான குடும்பம், மிகப்பெரிய கனவுகள், கடினமான குழந்தைப் பருவம், ஒரு மிகப்பெரிய வாய்ப்பு, கடுமையான உழைப்பு, வெற்றி, பெயர், புகழ்... இந்த உலகம் கண்ட பல சாதனையாளர்களின் பயோகிராஃபியில் இருக்கும் அதே டெம்ப்ளேட்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடையது. பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. சாதனை படைத்தவர்களையும், சரித்திரம் படைத்தவர்களையும் வேறுபடுத்திக்காட்டுவது - ஆட்டிட்யூட்! அதுதான் ரொனால்டோவை மற்ற ஆயிரக்கணக்கான கால்பந்து வீரர்களிடமிருந்தும், சில சாதனையாளர்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.

என்னைப் பற்றி இந்த உலகம் என்ன சொல்லும் என்று நினைத்ததில்லை. வரலாற்றில் என் பெயர் என்ன என்று சிந்தித்ததில்லை. விருதுகள், பட்டங்கள், புகழ் என எந்தப் பிரதிபலனையும் நான் எதிர்பார்த்ததில்லை. நான் கால்பந்தை நேசிக்கிறேன். அதை விளையாடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுமட்டும்தான் என் ஆசை.
கிறிஸ்டியானோ ரொனால்டோ

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு நிமிடம்...

கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்படிச் சொல்லியிருப்பாரா?

நோ சான்ஸ்.

அரியாத வயதில் தெரியாமல் வந்த கனவிலும் இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. சாதனைகள் புரிந்த கால்பந்து வீரர்கள் பெரும்பாலும் இப்படித்தான் சொல்வார்கள். கால்பந்து வீரர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் சாதித்த எல்லோருமே கிட்டத்தட்ட இதைத்தான் சொல்வார்கள். ஆனால், சி.ஆர் - 7..? ம்ஹூம்!

வரலாற்றின் பக்கங்களில் தன் பெயர் எழுதப்படவேண்டும் என்று நினைப்பவர் ரொனால்டோ. இல்லை... தன் பெயர் மட்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும் என்று நினைப்பவர்! கால்பந்தின் கடவுள் பீலேவுக்காக, கால்பந்து உலகம் ஒரு மியூசியம் திறப்பதற்கு, ஓராண்டு முன்பே தனக்கான ஒரு மியூசியத்தை உருவாக்கியவர் ரொனால்டோ. தன் ஒவ்வொரு முடிவிலும், அசைவிலும் வரலாற்றில் தனக்கான இடத்தை அழுத்தமாகப் பதித்துக்கொண்டிருப்பவர் அவர். புகழை, பெயரை, விருதுகளை விரும்புபவர் அவர். அதற்காகவே உழைப்பவர் அவர்.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

'Over confidence உடம்புக்கு நல்லது இல்லை', 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே. எல்லாம் அதுவாகவே கிடைக்கும்' என்ற பொது இலக்கணங்களுக்கு எதிரானவர் ரொனால்டோ. தன்மீது, தன் திறமையின் மீது எல்லையற்ற நம்பிக்கை கொண்டவர். 'நான் திறமையானவன்' என்று நினைப்பவரல்ல...'நான் எல்லோரையும்விட திறமையானவன்' என்று நினைப்பவர். அப்படி நினைக்கக்கூடாதுதான். நினைப்பது தவறுதான். ஆனால், இதுதான்... இந்தக் குணம்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற சகாப்தத்தின் தொடக்கப் புள்ளி..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேசனோல் (Nacianol) கிளப்புக்கு விளையாடிவந்த ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்கிறது ஸ்போர்டிங் லிஸ்பன் கிளப். அந்த அணியின் 'டிரான்ஸ்ஃபர் ஹெட்' அரீலியோ பெரீராவிடம் அனைவரும் ரொனால்டோவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 'அந்தச் சிறுவனின் ஆட்டத்தைப் பார்த்தால் மட்டும் போதாது, அவனது கேரக்டரைப் பரிசோதிக்கவேண்டும்' என்கிறார் அரீலியோ.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
AP

களத்தில் 12 வயது ரொனால்டோ. எதிர்த்து விளையாடுவது 14, 15 வயது சிறுவர்கள். ரொனால்டோ களத்தில் சுழல்கிறார். எதிரணியைத் திக்குமுக்காடச் செய்கிறார். ஆனால், அரீலியோ இம்ப்ரெஸ் ஆகவில்லை. ஒரு சீனியர் டிஃபண்டர் ரொனால்டோவைப் பின்னிருந்து தள்ளுகிறார். திரும்பி அந்த 12 வயதுச் சிறுவன் சொன்ன வார்த்தை: "Hey kid, calm down".

ரொனால்டோவின் அந்த ரியாக்ஷனை அரீலியோ எதிர்பார்க்கவில்லை. ஒரு 12 வயது சிறுவன், தன்னைவிட பெரியவனை எப்படி டீல் செய்கிறான்..? அவனுக்கு வேறு யாரும் பெரிதாகத் தெரியவில்லையே! எதுவுமே அவனைவிடப் பெரிதாகத் தெரியவில்லையே! இவன் கண்ணுக்கு வெற்றிகள் மட்டுமே தெரியும்..! ரொனால்டோவை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்ற முடிவை அந்த நொடியில் எடுக்கிறார் அரீலியோ. மதீரா எனும் தீவில் இருந்த சிறுவனை, உலக அரங்கில் கால் பதித்த நொடி அதுதான்.

13 முதல் 19 வயதுக்குட்பட்ட காலத்தில்தான் ஒருவரின் குணாதீசியங்கள் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படும். அந்தப் பருவத்தில்தான் 'தான் யார்' என்ற கேள்வியை எல்லோரும் தேடத் தொடங்குவார்கள். தன் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பதெல்லாம் இந்தப் பருவம் கொடுக்கும் அனுபவத்தை வைத்துத்தான். ஆனால், ரொனால்டோ இந்தப் பருவத்துக்குள் நுழையும் முன்பே, தன் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட்டார்.

"நான் உலகத்துலயே பெஸ்ட் பிளேயர் ஆவேன்" - 12 வயதில், தன் காட்ஃபாதரிடம் சொன்னது இது.
"ஒருநாள் நான் இந்த உலகத்தோட பெஸ்ட் பிளேயராகி, எத்தனை ஃபெராரி வாங்குவேன் பாரு" - 14 வயதில், தன் நண்பன் ஹுகோ பினாவிடம்.
"பெஸ்ட் பிளேயராகி வீடு வாங்குனதுக்கு அப்புறம், அதுல பெரிய ஜிம் வைக்கணும்" - 15 வயதில், ஹூகோ பினாவிடம்.
"நான் வேர்ல்ட்லயே பெஸ்ட் பிளேயர் ஆன பிறகு, என்ன பொடியன்னு சொல்வீங்களா பாக்குறேன்" - 16 வயதில், தன்னை கலாய்த்த சீனியர் ஒருவரிடம்.
Cristiano Ronaldo
Cristiano Ronaldo

ஃபுன்சால் கிராமத் தெருக்களில் பந்துகளை உதைத்திரிந்தபோது, 'ஃபுட்பால் பிளேயர்' ஆவேன் என்று யாரிடமும் சொல்லியதில்லை. ஸ்போர்டிங் அணியில் வளர்ந்துவந்தபோது, 'பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்று சொல்லியதில்லை. ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லியது 'வேர்ல்ட் பெஸ்ட் பிளேயர் ஆவேன்' என்பதுதான். ரொனால்டோ என்ற உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் அப்போதே உருவாகிவிட்டான். ஸ்போர்டிங் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, லிஸ்பன் நகருக்கு விமானத்தில் தனியாகச் சென்றபோதே, அந்த 12 வயதுச் சிறுவனின் கனவுகள் நனவாகத் தொடங்கியிருந்தன!

இன்று அவர் வைத்திருக்கும் 3 ஃபெராரிகளும், அவர் வீட்டின் பாதியை ஆக்கிரமித்திருக்கும் அந்த உலகத்தர ஜிம்மும் அந்தச் சிறுவனின் கனவுகள்தான். காற்றில் பறந்துவரும் பந்தை ஹெட் செய்ய அவர் காற்றிலேயே பறப்பதைப் பார்த்து கால்பந்து உலகமே மிரளும். அது எங்கிருந்து தொடங்கியது? தான் பள்ளிக்குக் கையோடு எடுத்துச் சென்ற கால்பந்தோடு, வகுப்பின் சுவர்களைத் தாண்டிக் குதித்தபோது தொடங்கியது அது! 'நீ எதுவாக ஆசைப்படுகிறாயோ, அதுவாகவே ஆகிறாய்' - கீதையை நம்பாதவர்கள் கிறிஸ்டியானோவை நம்பலாம்!

ஆனால், எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிடுகிறதா என்ன? இல்லையே! 'இரும்பை அடிப்பதற்காக, அது சூடாகும்வரை காத்திருக்காதே. அடித்துக்கொண்டே இரு... அது சூடாகும்' - இது அமெரிக்க வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் வில்லியம் பி.ஸ்ப்ரேக் சொன்னது. ரொனால்டோ அந்தக் கனவென்னும் இரும்பை அடித்துக்கொண்டே இருந்தார். சொந்தமாக ஜிம் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட அந்தச் சிறுவன், ஒவ்வொரு நாளும் கால்களில் இரும்பைக் கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஓடினான். விடுமுறைக்கு ஊர் திரும்பிய 14 வயது ரொனால்டோ, அதிகாலை 4 மணிக்கு, காலில் கட்டிய இரும்போடு ஓடுவதைப் பார்த்து எல்லோருமே மிரண்டிருக்கிறார்கள்.

தன் உயரத்தையும், மெலிந்த தேகத்தையும் பார்த்து 'நூடுல்ஸ்' என்று கிண்டல் செய்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வெறி அந்தச் சிறுவனுக்கு. இன்று அவரைப் பலரும் `ஈகோயிஸ்ட்’ என்கிறார்கள். 14 வயதில் சுயமரியாதையை மீட்க வெறிபிடித்துப் பயிற்சி செய்தவன் உலகின் கண்களுக்கு அப்படித் தெரிவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், உலகின் குரல்களுக்கு அவர் செவி சாய்த்ததில்லை. விமர்சனங்களுக்காகப் பின்வாங்கியதில்லை. "நீ ரொம்ப சுயநலமா ஆடுற" என்று சொன்ன சக வீரர்களிடமே, "டீமை விட்டுப் போகாத" என்று சொல்லவைத்தவர் அவர். கோல்களாலும் வெற்றிகளாலும் மட்டுமே பேசுபவர் அவர்.

இங்கும் ஓர் விமர்சனம் உண்டு. 'ரொனால்டோ தனக்காக மட்டுமே ஆடுவார். அணியின் வெற்றி பற்றிக் கவலைப்படமாட்டார். கோல் அடிப்பது மட்டுமே அவருக்கு முக்கியம்'. ஆம், கோல் அடிப்பது அவருக்கு முக்கியம். ஸ்போர்டிங் கிளப்பின் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கு ஆடிய, 14 வயது ரொனால்டோ, தன் அணியின் சீனியர்களையே மிரட்டியிருக்கிறார். பெனால்டி, ஃப்ரீ கிக் எல்லாம் தானே எடுக்கவேண்டும் என்று சண்டையிட்டிருக்கிறார். இன்றுவரை அப்படித்தான். 'என்னால் அனைத்தையும் கோலாக்க முடியும்' என்ற அவரது அந்த ஆட்டிட்யூட்தான் அவரைச் சண்டையிடச் செய்தது. ஆனால், அதற்காக அணியைப் பற்றி நினைக்காதவர் அல்ல அவர்.

12 வயது... முதல் பாதியின் முடிவில் அண்டோரினா ஜூனியர் அணி 0-2 என பின்தங்கியிருக்கிறது. டிரெஸ்ஸிங் ரூமில் அழுது கதறுகிறார் ரொனால்டோ. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேற்றி அனுப்புகிறார்கள். தோல்வியைத் தவிர்க்க களத்தில் சுழன்றடிக்கிறார். 2 கோல்கள். மொத்தம் 3 கோல்கள் அடித்து அணி வெற்றி பெறுகிறது. அந்தக் கண்ணீர் 'Cry Baby' என்ற இன்னொரு பட்டப் பெயரைப் பெற்றுத் தருகிறது. அந்த அளவுக்கு அழுதவர் அவர். அந்தக் கண்ணீர், அவரைக் குறைசொல்லும் பலருக்கும் தெரியாது.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

மான்செஸ்டர் யுனைடட், ரியல் மாட்ரிட் டிரெஸ்ஸிங் ரூம்களில் அழுதிருக்கமாட்டார். சுயமரியாதையின் அர்த்தத்தையும்தான் அப்போதே புரிந்துகொண்டாரே. ஆனால், தன் கோல்களுக்காக அணியின் வெற்றியை அவர் அடமானம் வைத்ததில்லை. அவர் அப்படிப்பட்டவராக இருந்தால், நட்சத்திரங்கள் இல்லாத போர்ச்சுகல் இன்று ஐரோப்பாவின் சாம்பியன் ஆகியிருக்க முடியாது.

ஆட்டிட்யூட் - களத்தில் நடந்துகொள்வதை வைத்து மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது. 90 நிமிடங்கள் அமைதியாக இருந்தால் கூல் பிளேயர். ஆக்ரோஷம் காட்டினால், மோசமான ஆட்டியூட். கால்பந்தில் மட்டுமல்ல, பிற விளையாட்டுகளிலும் இப்படித்தான் ஒருவரின் ஆட்டிட்யூட் மதிப்பிடப்படுகிறது. ஒருவனின் ஆழ்மனதில் இருக்கும் லட்சிய வெறி, அதன்மீது அவன் காட்டும் அர்ப்பணிப்பு, அவன் கொடுக்கும் உழைப்பு, சுயமரியாதைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவையும் ஒருவனது ஆட்டிட்யூடைத் தீர்மானிப்பவைதான். அரீலியோ பெரீரா போன்ற வெகுசிலருக்கு மட்டுமே அது முழுமையாகப் புரிந்திருக்கிறது.

அப்படிப் புரிந்துகொண்டவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ - இந்தப் பேரண்டத்தின் பேரதிசயம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism