Published:Updated:

உலகின் பழைமையான கோப்பையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற பிரேசில்!

உலகிலேயே பழைமையான கால்பந்து கோப்பையான கோபா அமெரிக்காவை தனது நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாமலேயே வென்றுள்ளது பிரேசில்.

பிரேசில் முன்வரிசை வீரர்கள்
பிரேசில் முன்வரிசை வீரர்கள் ( AP Photos )

கால்பந்தின் வேர்களைத் தேடிச்சென்றால் கோபா அமெரிக்காவைத் தொடாமல் இருக்கமுடியாது. தற்போது இருக்கும் விளம்பரங்களின் யுகத்தில், பளபளப்பான UEFA கோப்பைகளுக்கு நடுவே மறைந்துகொண்டிருக்கும் ஒரு பிரமாண்டம் கோபா அமெரிக்கா.

கோபா அமெரிக்கா உலகிலேயே பழைமையான இன்டர்கான்டினென்டல் டோர்னமென்ட். 1916-ல் இருந்தே கோபா அமெரிக்கா போட்டிகள் நடைபெறுகின்றன.
CONMEBOL ARCHIVE

தென் அமெரிக்க கண்டத்துக்குள் நடக்கும் இந்தப் போட்டி உலகக்கோப்பையைவிட பழைமையானது. தென் அமெரிக்க கால்பந்து அசோசியேஷனான CONMEBOL-ஐ விட பழைமையானது. தென் அமெரிக்க கால்பந்தின் அங்கீகாரமான இந்தக் கோப்பையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் ஏந்தியுள்ளது பிரேசில்.

கோபா அமெரிக்கா கோப்பையோடு பிரேசில்
கோபா அமெரிக்கா கோப்பையோடு பிரேசில்
AP Photos

இந்த ஆண்டு கோபா அமெரிக்காவின் வெற்றியாளர் பிரேசில் என்றால், மோசமான தோல்வியைச் சந்தித்த அணி பொலிவியா. குரூப் டேபிளில் விளையாடிய மூன்று போட்டியிலும் 3 கோல்களைக் கோட்டைவிட்டு தோல்வியையே சந்தித்தது.

கோபா அமெரிக்கா ஃபைனல்
கோபா அமெரிக்கா ஃபைனல்
AP Photos

ஆரம்பம் முதல் அசால்ட்டாக இருந்த பிரேசிலின் நம்பிக்கையை அசைத்துப்பார்த்த அணி பாராகுவே. 58-வது நிமிடத்தில் பாராகுவே ஒரு சிவப்பு அட்டை வாங்கி வெறும் 10 பேர் கொண்ட அணியாக விளையாடினாலும் வலுவாக தடுத்துப் போராடி பிரேசிலை கோல் அடிக்கவிடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் பாராகுவே வீரர்கள். பெனால்ட்டி கிக்கிலேயே பிரேசில் செமி ஃபைனலுக்கு நுழைந்தது.

பிரேசிலின் பாரம்பர்ய போட்டியாளரான அர்ஜென்டினா சர்ச்சைகளுக்கு நடுவே சிக்கிவிட்டது. அர்ஜென்டினா-பிரேசில் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா தோற்றதற்கு ரெஃபிரிகளைக் குறைகூறினார் மெஸ்ஸி. கோபா அமெரிக்கா பிரேசிலுக்கு என்று முன்பே முடிவு செய்துவிட்டதாக கடுப்பின் உச்சமாகக் பேசினார்.

``கோபா அமெரிக்காவை பிரேசிலுக்கு எழுதி வைத்துவிட்டார்கள்''
மெஸ்ஸி

மூன்றாம் இடத்துக்கான அர்ஜென்டினா-சிலி போட்டியில் மெஸ்ஸி மற்றும் கேரி மெடல் மல்லுக்கட்ட இருவருக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா வென்றாலும், ``நாங்கள் மூன்றாம் இடத்துக்கான மெடலை வாங்கப்போவதில்லை. CONMEBOL ஊழல் செய்கிறது'' என்று மெஸ்ஸி கூறியது தென்னமெரிக்க பிளேயர்களுக்கு மெஸ்ஸி மேல் வெறுப்பைக் கிளறிவிட்டுள்ளது.

கோபா அமெரிக்கா ஃபைனல்
கோபா அமெரிக்கா ஃபைனல்
AP Photos

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நடைபெற்ற மோதல் விவகாரத்தில் மெஸ்ஸியின் மீதே தவறு என்பதைக் கண்டறிந்து CONMEBOL அவருக்கு 1500 டாலர் அபராதமும் ஒரு மேட்ச் தடையும் விதித்துள்ளது. CONMEBOL-ஐ அவமானப்படுத்தியதற்காக மெஸ்ஸிக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை இன்டர்நேஷனல் போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என கால்பந்து வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.

இந்த ஆண்டு கோபா அமெரிக்காவின் சிறந்த பிளேயர் விருதை பிரேசிலின் டேனி ஆல்வெஸ் வாங்கியிருக்கிறார். அர்ஜன்டினாவின் லாடாரோ மார்டினெஸ் மற்றும் பிரேசிலின் எவர்டன், கோபா அமெரிக்காவின் இளம் ஹீரோக்கள். தேசிய அணிகளில் சொற்ப மேட்ச் அனுபவங்களே கொண்ட இந்த இருவரும் தங்களுடைய அணியின் நட்சத்திரங்களின் நிழலைத் தாண்டி ஜொலித்தார்கள். குறைவான கோல்கள்தான் என்றாலும் ஒவ்வோர் அட்டாக்கிலும் எதிர் அணியைப் பதறடித்தனர். பிரேசிலின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் ஆலிசன் பெக்கர். எவ்வளவு பிரஷர் இருந்தாலும் பந்தைப் பார்த்தவுடன் பாய்ந்து பிடிப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

டோர்னமென்ட்டின் சிறந்த வீரர்கள்
டோர்னமென்ட்டின் சிறந்த வீரர்கள்
AP Photos

பெருவின் பாலோ குரெரோ மற்றும் ஆண்ட்ரி காரில்லோ தன்னுடைய அணியை ஃபைனல் வரை கொண்டுவந்தனர். நட்சத்திர பிளேயர்களோ, பெரிய வெற்றியோ எதுவும் கிடையாது. போராடியே இறுதிப்போட்டிக்கு வந்தது பெரு அணி.

எவர்டன்
எவர்டன்
AP Photos

நடப்பு சாம்பியன் சிலி, 15 முறை வென்ற உருகுவே போன்ற பெரிய அணிகளைத் தோற்கடித்தாலும் பெருவால் அசுர வெறியில் இருக்கும் பிரேசிலை தொடமுடியவில்லை. பெருவுடன் மோதிய முதல் போட்டியிலேயே 5 கோல் அடித்திருந்தது பிரேசில். அதனால் ஃபைனலில் எப்படியும் பிரேசில் வெற்றிபெரும் என்றே எல்லோரும் கணித்தார்கள். நினைத்தபடியே 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தென்னமெரிக்காவின் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டது பிரேசில்.