Published:Updated:

ISL 2022-23: கரிகரி ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் ஹைலைட் - ATK-வை வீழ்த்திய சென்னையின் FC!

கரிகரி ( ISL )

இரண்டாம் பாதியில் சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்து ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

ISL 2022-23: கரிகரி ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் ஹைலைட் - ATK-வை வீழ்த்திய சென்னையின் FC!

இரண்டாம் பாதியில் சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்து ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

Published:Updated:
கரிகரி ( ISL )
ஐ.எஸ்.எல்-இன் 9வது சீசனில் சென்னையின் FC அணி தனது முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. ஏமாற்றமிக்க கடந்த சீசனிலிருந்து சில மாற்றங்களைச் செய்து கொண்டு மீண்டு வந்து இங்கே முதல் போட்டியிலேயே வலுவான ATK மோஹன் பகனை 2-1 என வீழ்த்தியிருக்கிறது.

பேண்டோவிச்சை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தாமஸ் ப்ராட்ரிக்கை சென்னை அணி புதிய பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்த பிறகு நடைபெறும் முதல் ஐ.எஸ்.எல் சீசன் இது. பேண்டோவிச் ரொம்பவே டிஃபன்ஸிவ்வான அணுகுமுறை கொண்டவர் எனும் விமர்சனம் இருந்தது. அந்த அணுகுமுறைதான் சென்னையின் மோசமான தோல்விக்கும் வித்திட்டது. பேண்டோவிச்சையும் அணியிலிருந்து வெளியேற்றியது. புதிதாக வந்திருக்கும் தாமஸ் முதலிலேயே நாங்கள் 'offensive' ஆகத்தான் ஆடப்போகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார். ATK-க்கு எதிரான போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கூட "தாக்குதல் ஆட்டம் ஆடுவதுதான் எனக்குப் பிடிக்கும். நிறைய கோல்கள் அடிக்கத்தான் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் களத்திலும் செயல்படுத்தப்போகிறோம்" எனப் பேசியிருந்தார். தாமஸின் விருப்பப்படி சென்னை அணி, ATK-விற்கு எதிராக ஓரளவு அட்டாக்கிங்காகவே ஆடியிருக்கிறது.

2-1 எனச் சென்னை அணி போட்டியை வென்றிருந்தது. அவர்கள் அடித்த இரண்டு கோல்களுமே இரண்டாம் பாதியிலேயே வந்திருந்தன. ATK முதல் பாதியிலேயே கோல் அடித்து முன்னிலையைப் பெற்றிருந்தது. ATK அணி அடித்திருக்கும் மொத்த கோல்களில் 26% கோல்கள் ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களுக்குள் வந்தவை என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரத்துக்கு ஒப்பாகத்தான் நேற்றைய ஆட்டம் அமைந்திருந்தது.

Thomas
Thomas
Chennaiyin FC
முதல் பாதி முழுவதுமாக, குறிப்பாக முதல் அரை மணி நேரம் முழுவதுமே ATK நெட்டை குறிவைத்து மூர்க்கமாகத் தாக்குதல் ஆட்டம் ஆடியிருந்தது. இந்த சமயத்தில் சென்னை அணி கொஞ்சம் ரிதமுக்கு வராமல் ஒரு மாதிரியாகவே ஆடிக்கொண்டிருந்தது.

Possession முழுவதும் ATK விடமே இருந்தது. ஆனால், இந்நிலையை ATK முழுமையாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்ததா என்றால், அதுவும் இல்லை. நிறைய வாய்ப்புகளை உருவாக்கினார்கள். கார்னர்களும் கிடைத்தன. ஆனால், எதையுமே சரியாக ஃபினிஷ் செய்யவில்லை. 27வது நிமிடத்தில் மன்வீர் சிங்கும் டிமிட்ரி பெட்ராடோஸூம் மாறி மாறி ஸ்கொயராக பாஸ் செய்து சென்னையின் டிஃபன்ஸை உடைத்து ஆட்டத்தின் முதல் கோலை அடித்திருந்தனர். மன்வீர் சிங் அடித்த இந்த கோலுக்குப் பிறகு ATK-வால் கடைசி வரை ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. ATK-வின் முயற்சிகள் சிலவற்றை சென்னையின் கோல் கீப்பர் தேப்ஜித்தும் சிறப்பாக முறியடித்தார்.

இரண்டாம் பாதியில்தான் சென்னை அணியின் ஆட்டமே ஆரம்பித்தது. மைதானத்தின் மின்விளக்குகளில் பிரச்னை ஏற்பட ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சில நிமிட இடைவேளைக்குப் பிறகுதான் சென்னை அணி இரண்டு கோல்களையும் அடித்தது. 59வது நிமிடத்தில் ஃபாலோவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை அணி Equaliser-ஐ அடித்துவிட்டது.

கரிகரி பந்தோடு பாக்ஸூக்குள் வருகையில் ATK வின் கீப்பர் விஷால் ஃபவுல் செய்துவிடச் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டியில் கரிகரி அடித்த கிக் வலைக்குள் சீறிப்பாய ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
கரிகரி
கரிகரி
ISL

இதே கரிகரிதான் இன்னொரு கோலுக்கும் அசிஸ்ட் செய்து கொடுத்தார். 83வது நிமிடத்தில் கரிகரி ரைட் ஃப்ளாங்கிலிருந்து கட் செய்து லாகவமாக ரஹீம் அலிக்கு பாஸ் செய்ய ரஹீம் அதைக் கச்சிதமாகக் கோலாக்கியிருந்தார். 2-1 என சென்னை அணி முன்னிலை பெற்றது. கடைசி வரை ATK-வால் ஈக்குவலைசரை அடிக்க முடியவில்லை. ஆட்டம் 2-1 என்றே முடிந்தது. சென்னை அணி வென்றது.

இரண்டாம் பாதியில் சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்து ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ATK ஆதிக்கம் செலுத்திய போதே கோல்களை கன்வர்ட் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதன் விளைவே ATK-வின் தோல்வி. சென்னை அணியுமே தொடக்கத்தில் டிஃபன்ஸில் கொஞ்சம் சுணக்கமாகவே இருந்தனர். அடுத்தடுத்தப் போட்டிகளில் அதைச் சரி செய்ய வேண்டும். மேலும், முதல் போட்டியில் பெற்றிருக்கும் வெற்றியையும் சென்னை அணி தொடர வேண்டும்.

ஏனெனில், கடந்த சீசன்களிலும் முதல் போட்டியில் சென்னை நன்றாகவே ஆடியிருக்கும். அதன்பிறகுதான் எல்லாமே தலைகீழாக மாறும். அது இந்த சீசனிலும் நிகழ்ந்துவிடக்கூடாது.