Published:Updated:

கார்டியோலா சொதப்பல், டுகெல் அசத்தல்... சாம்பியன்ஸ் லீக் வென்றது செல்சீ!

Chelsea UCL winners ( AP )

2020-21 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று ஐரோப்பாவின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது செல்சீ. இன்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக நடந்த இறுதிப் போட்டியை 1-0 என வென்றது தாமஸ் டுகலின் அணி. செல்சீ வென்றிருக்கும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது.

கார்டியோலா சொதப்பல், டுகெல் அசத்தல்... சாம்பியன்ஸ் லீக் வென்றது செல்சீ!

2020-21 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று ஐரோப்பாவின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது செல்சீ. இன்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக நடந்த இறுதிப் போட்டியை 1-0 என வென்றது தாமஸ் டுகலின் அணி. செல்சீ வென்றிருக்கும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது.

Published:Updated:
Chelsea UCL winners ( AP )

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடக்கவிருந்த இந்த சீசனின் ஃபைனல், கொரோனா காரணமாக போர்ச்சுகலின் போர்டோவுக்கு மாற்றப்பட்டது. அரையிறுதியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெப் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி. 13 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது செல்சீ.

இந்த சீசனில் முன்பை விட அதிக ஆதிக்கம் செலுத்தியதால் மான்செஸ்டர் சிட்டிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே பலரும் கருதினார்கள். இருந்தாலும், தாமஸ் டுகெல் பயிற்சியாளராகப் பதவியேற்றபிறகு செல்சீயும் மிகச் சிறப்பாக ஆடித் தொடங்கியது. போக, பிரீமியர் லீகில் சிட்டியை வீழ்த்தியது. FA கப் அரையிறுதியில் வீழ்த்தி, அந்த அணியின் quadruple கனவையும் கலைத்தனர். அதனால், சிட்டி மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று வல்லுநர்கள் கருதினார்கள்.

அனைவரின் பிரிவ்யூ, கனிப்புகளெல்லாம் கடந்து, போட்டிக்கு முன்பு அதிகம் பேசப்பட்டது கார்டியாலோவின் அணுகுமுறை. 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனாவோடு சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றவரால், அதன்பிறகு ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை. இறுதிப் போட்டிக்கு வருவதே இதுதான் முதல் முறை.

பேயர்ன் மூனிச், மான்செஸ்டர் சிட்டி என இரண்டு பெரிய அணிகளை வழிநடத்தினாலும், முக்கியமான போட்டிகளில் லைன் அப்பிலேயே சொதப்பிவிடுவார். வழக்கமாக நடுகளத்தில் அதிக டிஃபன்ஸிவ் வீரர்களைக் களமிறக்குவார். அதனால், அவர்களின் வழக்கமான கேம் ஸ்டைல் மாறி ஆட்டத்தில் சொதப்பிவிடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக இதுவே தொடர்ந்துவந்த நிலையில், இந்தப் போட்டிக்கு முன்பும் கார்டியாலோ களமிறக்கப்போகும் லைன் அப் பற்றித்தான் பெரும் பேச்சு இருந்தது.

Pep Guardiola
Pep Guardiola
AP

அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே லைன் அப்பில் இந்த முறையும் சொதப்பினார் கார்டியோலா. வழக்கமாக அதிக டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர்களைக் களமிறக்குபவர், இம்முறை ஃபெர்னாண்டினியோ, ராட்ரி என இருவரையுமே களமிறக்கவில்லை. குண்டோகன், ஹோல்டிங் ரோலில் ஆடினார். அந்த அளவுக்கு அட்டாகிங் லைன் அப் அது. இது மட்டுமல்லாது, ஃபார்மிலேயே இல்லாத ரஹீம் ஸ்டெர்லிங்கையும் களமிறக்கினார். அவரது வேகம் இடது விங்கில் அவர்களுக்குக் கைகொடுக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவரின் திட்டங்கள் எதுவுமே நேற்று அரங்கேறவில்லை.

கார்டியோலாவின் திட்டங்களுக்கு தங்களின் தீர்க்கமான ஆட்டத்தால் முட்டுக்கட்டை போட்டனர் செல்சீ வீரர்கள். ஸ்டெர்லிங்கின் வேகத்தை ரீஸ் ஜேமிஸின் வேகமும் பலமும் எளிதாகத் தடுத்துவிட்டது. பல லாங் பால்கள் ஸ்டெர்லிங் வசம் செலுத்தப்பட்டும் அவரால் அதை எதையும் பயன்படுத்த முடியவில்லை. ரீஸ் ஜேம்ஸ், என்கோலா கான்டே இருவரும் நல்ல கவுன்ட்டர்களைத் தொடுத்ததால், வழக்கம்போல் ஜின்சென்கோவால் அட்டாக்கில் ஈடுபட முடியவில்லை. ஒருகட்டத்தில் கைல் வால்கர் மூன்றாவது சென்டர் பேக்காகவும், ஜின்சென்கோ விங்பேக்காகவும் செயல்படத் தொடங்கினார்கள். அப்போதும், கான்டேவை மீறி ஜின்சென்கோவால் எதுவும் செய்யமுடியவில்லை.

Chelsea players throwing Kante up!
Chelsea players throwing Kante up!
AP

அதேபோல் நடுகளத்தில் குண்டோகன், பெர்னார்டோ சில்வா, ஃபில் ஃபோடன், டி புருய்னா எல்லோரும் அட்டாக் செய்வதிலேயே குறியாக இருந்தனர். சீக்கிரம் முன்னிலை பெறவேண்டும் என்பதே சிட்டியின் கேம் பிளானாக இருந்ததுபோல் தெரிந்தது. டி புருய்னா 'false 9' பொசிஷனில் ஆடத் தொடங்கியதிலிருந்து அவரது தாக்கம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. இந்தப் போட்டியிலுமே அவரால் ஒரு அட்டகாசமான மூவ் கூட மேற்கொள்ள முடியவில்லை. கான்டே - ஜார்ஜினியோ கூட்டணி இவர்களை எந்த மாயமும் செய்ய விடவில்லை. வழக்கமாக முழு வீச்சில் பிரஸ் செய்யும் செல்சீ, நேற்று அட்டாக்கிங் தேர்டில் மட்டுமே பிரஸ் செய்தது. அதனால், சிட்டி பயன்படுத்திக்கொள்வதற்கேற்ற தவறுகள் எதுவும் நடக்கவில்லை. எந்த இடைவெளியும் கிடைக்கவில்லை.

இடது விங்கும் நடுகளமும் தான் எந்தவித பலனும் தரவில்லையெனில், கடந்த சில மாதங்களாக வலது விங்கில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த ரியாட் மாரஸையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர் செல்சீ வீரர்கள். குறிப்பாக பென் சில்வெல். அவர் வாழ்க்கையின் மிகச் சிறந்த போட்டியாக இது இருக்கும். வலது விங்கில் பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்த, கோல்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த மாரஸை ஒரேயொரு ஷாட் மட்டுமே எடுக்கவிட்டார். அதுவும் கடினமான ஆங்கிளில் இருந்து. அதையும் எளிதாகத் தடுத்துவிட்டார் கோல்கீப்பர் மெண்டி. அந்த அளவுக்கு அவரின் நிழலாக இருந்தார் சில்வெல். மாரஸ் மிட் தேர்டுக்குச் சென்றாலும் கூடவே சென்றார். அவர் நகரவோ, cut in செய்யவோ கொஞ்சம் கூட இடம்தரவில்லை. ஸ்டிரைக்கர் இல்லாத சிட்டியின் அட்டாக்கை மொத்தமாக கட்டுக்குள் கொண்டுவந்தது செல்சீ!

It was a Thomas Tuchel masterclass
It was a Thomas Tuchel masterclass
AP

மான்செஸ்டர் சிட்டியின் திட்டங்கள் இப்படித் தவிடுபொடியாக, வழக்கம்போல் தங்களின் நேச்சுரல் கேமை அட்டகாசமாக செயல்படுத்தினர் செல்சீ வீரர்கள். ஒரு முனையில் ஸ்டெர்லிங்கின் வேகம் வேலைக்கு ஆகாமல் போக, மறுமுனையில் வெர்னரின் வேகம் சிட்டி டிஃபண்டர்களைத் திணறடித்தது. வழக்கம்போல் கவுன்ட்டர்களில் பல வாய்ப்புகளை உருவாக்கினர் செல்சீ வீரர்கள். ரீஸ் ஜேம்ஸ், சில்வெல் இருவரும் டிஃபன்ஸில் அதிக கவனம் செலுத்தினாலும், அட்டாக்கிலும் பெரிய அளவில் பங்கேற்றனர். முழுமையான விங்பேக்குகளாக செயல்பட்டனர்.

வாய்ப்புகள் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினாலும், அதை கோல்களாக மாற்றுவதில் இந்தப் போட்டியிலும் வெர்னர் சொதப்பவே செய்தார். 10-வது நிமிடத்தில் இடது விங்கில் இருந்து ஒரு கிராஸ் கொடுத்தார் மேசன் மென்ட். பெனால்ட்டி ஏரியாவில் நின்றிருந்த வெர்னர், சரியாக பந்தை அடித்திருந்தாலே கோலாகியிருக்கும். வழக்கம்போல் சரியாக கனெக்ட் செய்யவில்லை. 4 நிமிடங்கள் கழித்து அதேபோல் இன்னொரு வாய்ப்பு. இந்த முறை கொஞ்சம் கடினமானதுதான். கோல் நோக்கி அடித்தும்விட்டார். ஆனால், அதில் போதுமான பலம் இல்லாததால், எடர்சன் அதைத் தடுத்துவிட்டார். அடுத்த நிமிடத்தில், இடது விங்கில் இரு வாய்ப்பு கிடைத்தது. இம்முறை அவர் அடித்த ஷாட் சிட்டி வீரர் மீது பட்டு வெளியேறியது.

The goalscorer!
The goalscorer!
AP

இந்த வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தாலும், செல்சீயின் கோல் வாய்ப்புக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தார். 42-வது நிமிடத்தில் தங்கள் புயல்வேக கவுன்ட்டரைத் தொடுத்தது செல்சீ. மிட் லைனுக்கு அருகே இருந்த மவுன்ட்டுக்குப் பந்தைப் பாஸ் செய்தார் செல்வெல். பிரஸ் செய்ய நினைத்து தன் பொசிஷனை விட்டு பலதூரம் வெளியே வந்துவிட்டார் சிட்டியின் பிளேயர் ஆஃப் தி சீசன் ரூபன் டியாஸ். மவுன்ட் வசம் பந்து சென்றதும், இடது விங்கில் வேகமாக வெர்னர் ஓட, அவரை மார்க் செய்ய இடதுபுறம் நகர்ந்தார்.

நடுவே இரண்டு சென்டர்பேக்குமே இல்லை. மிகப்பெரிய இடைவெளி உருவானது. அங்கே ஹாவர்ட்ஸ் வேறு. அவரை ஜின்சென்கோ சரியாக மார்க் செய்யவில்லை. சரியாக மவுன்ட்டின் பாஸும் ஹாவர்ட்ஸை அடைகிறது. அற்புதமாக எடர்சனைக் கடந்து கோலாக்கினார் ஹாவர்ட்ஸ். இதற்கு முன் 19 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியிருந்த ஹாவர்ட்ஸ் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அவரது முதல் சாம்பியன்ஸ் லீக் கோல், அவர் அனிக்கு பட்டம் வென்று கொடுத்துவிட்டது!

செல்சீ சாம்பியன் ஆக இந்த ஒரு கோலே போதுமானதாக இருந்தது. இரண்டாவது பாதி தொடங்கும்போதே தன் கேம் பிளானை மாற்றி நடுகளத்தை கார்டியோலா பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதைச் செய்யத் தவறினார். டி புருய்னா காயமடைந்தபோதும்கூட கேப்ரியல் ஜீசுஸை இறக்கினார். அதன்பிறகு ஃபெர்னான்டினியோ, அகுவேரோ போன்ற சீனியர்கள் களமிறங்கியும் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. கடைசி கட்டத்தில் பல லாங் பால்களை செல்சீ பாக்சுக்குள் அனுப்பினார்கள். ஆனால், ஆட்டம் முழுக்க அசத்தலாக செயல்பட்ட செல்சீ டிஃபண்டர்கள் பதற்றமான நேரத்தில் எந்தத் தவறையும் செய்யாமல் தீர்க்கமாக ஆடினர். சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியக் காரணமாகவும் விளங்கினர்.

கடந்த ஆண்டு பி.எஸ்.ஜி மேனேஜராக இருந்த டுகெல் பேயர்ன் மூனிச் அணிக்கெதிராக பட்டத்தை இழந்தார். ஆனால், இந்த முறை செல்சீ மேனேஜராக அதை வென்று அசத்தியிருக்கிறார். அதுவும் பயிற்சியாளரான நான்கே மாதங்களில்!உலகின் மிகச் சிறந்த நடுகள வீரராக உருவெடுத்திருக்கும் என்கோலோ கான்டே, இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான 2 அரையிறுதிப் போட்டிகளிலும் அவரே ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்!