Published:Updated:

பார்சிலோனா எஸ்கேப்... செல்சீ அவுட்... டாப் கியரில் சாம்பியன்ஸ் லீக்! #UCL

UEFA Champions League ( AP )

சிக்னல் இடுனா பார்க் ரசிகர்களை எப்படி ஒரு பெனால்ட்டி ஏமாற்றியதோ, அப்படியே ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் ரசிகர்களையும் ஏமாற்றியது ஒரு பெனால்ட்டி. இம்முறை தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று ஏங்கிய ரசிகர்களை!

பார்சிலோனா எஸ்கேப்... செல்சீ அவுட்... டாப் கியரில் சாம்பியன்ஸ் லீக்! #UCL

சிக்னல் இடுனா பார்க் ரசிகர்களை எப்படி ஒரு பெனால்ட்டி ஏமாற்றியதோ, அப்படியே ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் ரசிகர்களையும் ஏமாற்றியது ஒரு பெனால்ட்டி. இம்முறை தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று ஏங்கிய ரசிகர்களை!

Published:Updated:
UEFA Champions League ( AP )

பெனால்ட்டி - கடந்த சில வாரங்களாக மான்செஸ்டர் யுனைடட் அணியைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. போக்பா, ரேஷ்ஃபோர்ட் என வரிசையாக இரண்டு வாரங்கள் இரு முக்கிய வீரர்கள் பெனால்ட்டியைத் தவறவிட்டதால், வெற்றிகளை இழந்துகொண்டிருந்தது ரெட் டெவில்ஸ். ஒருவழியாக, இந்த வாரம் அதற்கு ஒரு முடிவு கிடைத்தது. லீசெஸ்டர் அணிக்கெதிரான போட்டியில் பெனால்ட்டியை கோலாக்கி, அந்த சிக்கலுக்கு ஒரு முடிவு கட்டினார் ரேஷ்ஃபோர்ட். ஆனால், நேற்று... செல்சீ, பார்சிலோனா என இரண்டு அணிகளின் முடிவுகள் நேற்று பெனால்ட்டியால் மாறியிருக்கிறது. ஒரு அணி தோல்வியைத் தவிர்த்திருக்கிறது, ஒரு அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019 - 20 சீசனின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடர் நேற்றிரவு தொடங்கியது. காயத்தால் இந்த சீசனில் இதுவரை விளையாடாத மெஸ்ஸி, நேற்று அணியோடு பயணித்திருந்ததால் பார்சிலோனா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பென்ச்லிருந்து அவர் ஆட்டத்தைத் தொடங்க, சுவாரஸ், கிரீஸ்மேன், அன்சுமான் ஃபடி அடங்கிய ஃபார்வேர்டு லைன் பொருஷியா டார்ட்மண்டைப் பதம் பார்க்கக் களமிறங்கியது. முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எதிரணியின் கோல் போஸ்டைப் பல முறை முற்றுகையிட்டன. பார்சிலோனாவின் முயற்சிகளை டார்ட்மண்டின் டிஃபண்டர்கள் அரணாய் நின்று தடுத்தார்கள். அதேசமயம், டார்மண்ட் அட்டாக்குகள், மோசமான ஷாட்களால் வீணாகின. ரியூஸுக்குக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பை, கோல்கீப்பர் டெர் ஸ்டெகன் சிறப்பாகத் தடுத்தார்.

BVB vs Barcelona
BVB vs Barcelona
AP

இரண்டாவது பாதியில், அதைவிட மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றார் ரியூஸ். நெல்சன் செமடோ, சான்சோவை ஃபவுல் செய்ய, டார்ட்மண்டுக்குப் பெனால்ட்டி வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு மட்டுமல்ல, இந்த தொடரிலேயே இது ஒரு முக்கியமான தருணம். இன்டர் மிலனும் இருக்கும் அந்த குரூப்பில், பார்சிலோனாவுக்குத் தோல்வியைப் பரிசளிப்பது என்பது, அந்த அணிக்கு மிகப்பெரிய அடியாக இருந்திருக்கும். மாபெரும் அதிர்ச்சிக்குத் தொடக்கமாக இருந்திருக்கும். டார்ட்மண்ட் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கும் உதவியாக இருந்திருக்கும். ஆனால், அதையெல்லாம் நழுவவிட்டார் அந்த அணியின் நம்பிக்கை நாயகன் ரியூஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்சிலோனா கோல்கீப்பர் டெர் ஸ்டேகனுக்கு இடது புறமாக பந்தை அடித்தார். கார்னருக்கும் செல்லவில்லை. வேகமும் இல்லை. அற்புதமாகத் தடுத்தார் டெர் ஸ்டேகன். தடுத்ததோடு மட்டுமல்லாமல், ரீபௌண்டையும் பிடித்தார். மிகப்பெரிய ஆபத்திலிருந்து பார்காவைக் காப்பற்றினார். தோல்வி பயம் தெரிந்த சில நொடிகளிலேயே மெஸ்ஸியைக் களமிறக்கினார் மேனேஜர் வெல்வர்டே.

முதல் முறையாக மெஸ்ஸி - சுவாரஸ் - கிரீஸ்மேன் கூட்டணி களமிறங்கியது. மெஸ்ஸியின் வருகை ஆட்டத்தை பார்சிலோனாவின் பக்கம் திருப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹம்மல்ஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் டார்ட்மண்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது எப்படி துடிப்புடனும் நம்பிக்கையுடனும் இருந்தாரோ, அப்படியே இருந்தார். மெஸ்ஸி, கிரீஸ்மேன், சுவாரஸ், ஃபடி யாரையுமே கோலை நெருங்க விடவில்லை.

Hummels and Suarez
Hummels and Suarez
AP

அதேசமயம், பார்சிலோனாவின் கோல் போஸ்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்தது டார்மண்ட். முதல் பாதியின்போது பார்சிலோனா 'லெஃப்ட் பேக்' ஜோர்டி ஆல்பா காயம் காரணமாக வெளியேறினார். அதனால், வலது புறம் ஆடிக்கொண்டிருந்த நெல்சன் செமடோ இடது புறம் ஆடத் தொடங்கினார். ஆனால், அவரால் அந்த இடத்தில் சரியாக விளையாடமுடியவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டது BVB. தங்களின் வலது விங்கில் பல அட்டாக்குகளை முன்னெடுத்தது. அச்ரஃப் ஹகிமி, ஜேடன் சான்சோ இருவரும் மிரட்டினார்கள். அதன் விளைவுதான் அந்த பெனால்ட்டியும். அங்கும் குற்றவாளி செமடோவேதான்! ஆனால், வலது விங்கில் இருந்து வந்த கிராஸ்களை அல்கசர், ரியூஸ் போன்றவர்களால் கோலாக்க முடியவில்லை.

மாற்று வீரராக வந்த ஜுலியன் பிராண்ட், 77-வது நிமிடத்தில் அடித்த ஷாட் கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது. டார்ட்மண்ட், பார்சிலோனா அணிகள் ஆடும் ஆட்டம் கோல்கள் பொழியும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு கோல்கூட அடிக்கப்படாமல் அந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரியூஸ் தவறவிட்ட பெனால்ட்டி, அந்த அணியின் 2 புள்ளிகளைத் தாரைவார்த்துக்கொடுத்தது.

Marco Reus
Marco Reus
AP

சிக்னல் இடுனா பார்க் ரசிகர்களை எப்படி ஒரு பெனால்ட்டி ஏமாற்றியதோ, அப்படியே ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் ரசிகர்களையும் ஏமாற்றியது ஒரு பெனால்ட்டி. இம்முறை தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று ஏங்கிய ரசிகர்களை! மூன்று நாள்கள் முன்பு தங்கள் அணியின் அட்டகாச வெற்றியை, தங்கள் அகாடெமி வீரர்களின் எழுச்சிமிகு ஆட்டத்தைக் கண்ட அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஒற்றை ஷாட்டில் கரைத்தார் ராஸ் பார்க்லி.

சனிக்கிழமை வோல்வர்ஹாம்ப்டன் அணியோடு ஆடிய லெவன் கிட்டத்தட்ட அப்படியே களமிறங்க, மீண்டும் ஒரு கோல் திருவிழாவை எதிர்பார்த்தனர் லண்டன் ரசிகர்கள். ஆனால், வெலன்சியாவின் கோல் போஸ்டை அவர்களால் உடைக்க முடியவில்லை. அணியின் இளம் நட்சத்திரம் மேசன் மவுன்ட் 16 நிமிடங்கள் மட்டுமே ஆடிய நிலையில் காயத்தால் வெளியேறினார். அதுவும் செல்சீக்குப் பின்னடைவாக அமைந்தது. முதல் பாதியில் நிதானம் காட்டிய வெலன்சியா, இரண்டாவது பாதியில் வேகமெடுத்தது. அடுத்தடுத்து அட்டாக்குகளை முன்னெடுத்தது. அதன் விளைவாக 74-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் மூலம் கோலடித்தார் ராட்ரிகோ.

Mason Mount
Mason Mount
AP

ஆட்டத்தை டிராவாவது செய்யவேண்டுமெனப் போராடிய செல்சீக்கு 85-வது நிமிடம் பெனால்ட்டி வழங்கப்பட்டது. செல்சீ ரசிகர்கள் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருக்க, பெனால்ட்டியின் ஏரியாவில் வந்து நின்றார் ராஸ் பார்க்லி.

அந்த அணியின் ஆஸ்தான பெனால்ட்டி டேக்கர் ஜார்ஜினியோ இன்னும் களத்தில்தான் இருக்கிறார். இரண்டாவது சாய்ஸான வில்லியன், `நான் எடுக்கிறேன்’ என பார்க்லியிடம் கேட்கிறார். ஆனால், `நான்தான் எடுப்பேன்’ என்பதில் பார்க்லி தீர்க்கமாக இருந்தார். விசில் அடிக்கப்பட்டது. அவர் வேகமாக அடித்த ஷாட் கிராஸ் பாரில் பட்டு வெளியேறியது. செல்சீ ரசிகர்கள் கனவு கண்ட அந்த ஒரு புள்ளியும் காணாமல் போனது.

மற்றொரு பிரீமியர் லீக் அணியான லிவர்பூல்... நடப்பு சாம்பியன் லிவர்பூல், நெபோலியிடம் தோல்வியடைந்தது. அதிர்ச்சி. நெபோலியும் பலமான அணிதான் என்றாலும் 2-0 என லிவர்பூல் தோற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் அந்த இரண்டு கோல்களையும் அடித்து அட்டகாசமாக இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரைத் தொடங்கியுள்ளது நெபோலி. 82-வது நிமிடத்தில் நோபோலிக்கு வழங்கப்பட்ட பெனால்ட்டிதான் இந்தப் போட்டியின் முடிவையும் மாற்றி எழுதியது. VAR டெக்னாலஜியும், பெனால்ட்டிகளும் போட்டிகளின் முடிவில், முன்பை விட அதிகமாகவே ஆதிக்கம் செலுத்தத்தொடங்கிவிட்டன! 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு நடப்பு சாம்பியன் சீசனின் முதல் போட்டியில் தோற்பது இதுவே முதல் முறை.

Napoli vs Liverpool
Napoli vs Liverpool
AP

மற்ற போட்டிகளில், ஆர்.பி.லீப்சிக் அணி 2-1 என பென்ஃபிகாவையும், அயாக்ஸ் 3-0 என லீல் அணியையும் வீழ்த்தின. இன்டர் மிலன், ஸ்லாவியா பிராக் அணிகள் மோதிய ஆட்டமும், லயான், ஜெனித் அணிகள் மோதிய ஆட்டமும் 1-1 என டிரா ஆகின. சால்ஸ்பெர்க், 6-2 என்ற கோல் கணக்கில் ஜென்க் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் 19 வயது இளம் நார்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இன்று நள்ளிரவு சில பெரிய போட்டிகள் நடக்கவுள்ளன. ரியல் மாட்ரிட், பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியையும், யுவன்டஸ் அத்லெடிகோ மாட்ரிட் அணியையும் எதிர்த்து ஆடுகின்றன.

இன்னிக்கி என்ன சம்பவமோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism