Published:Updated:

2 ரெட் கார்டு, 2 ஓன் கோல், 2 பெனால்டி… செல்சீ, அயாக்ஸ் ஆடிய ‘ஃபவுல்’ கேம்! #ChampionsLeague

Chelsea vs Ajax
Chelsea vs Ajax ( AP )

களத்தில் 9 வீரர்கள். போதாக்குறைக்கு பெனால்டி வேறு. மீண்டும் பெனால்டி பாயின்டில் ஜார்ஜினியோ. தற்போதைய கால்பந்து உலகில் இவர்தான் கூல் பெனால்டி டேக்கராக இருப்பார். அந்த அளவுக்குக் கூலாக அந்த பெனால்டியையும் கோலாக்கினார் ஜார்ஜினியோ.

இந்த கால்பந்து சீசன் தொடங்கியபோது, செல்சீ அணி மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அந்த அணியின் முன்னணி வீரர் ஈடன் ஹசார்ட் ரியல் மாட்ரிட்டுக்குச் செல்ல, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வீரர்களை ஒப்பந்தம் செய்ய ஓராண்டு தடை விதிக்க, பெரிதும் பாதிக்கப்பட்டது அந்த அணி. கிட்டத்தட்ட அயாக்ஸ் அணியின் நிலமையும் அதுவாகத்தான் இருந்தது. கேப்டன் டி லைட் யுவன்டஸில் இணைந்துவிட்டார். நட்சத்திர நடுகள வீரர் டி ஹாங், பார்சிலோனாவுக்கு நகர்ந்துவிட்டார். இப்படி பலம் குறைந்திருந்தாலும், இரு அணிகளின் செயல்பாடும் சிறப்பாகவே இருந்தது. அதனால், குறைந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய அந்த அணிகளின் சீசன், நேற்று சாம்பியன்ஸ் லீகில் மோதியபோது உச்சத்தை எட்டியிருந்தது.

அத்தனை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சாம்பியன்ஸ் லீகுக்கே உரிய பரபரப்பை முதல் நிமிடத்திலிருந்தே அள்ளித் தெளித்தது ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானம். இந்த 3 மாத காலத்தில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் கண்ட செல்சீ, ஒரு ஏரியாவில் மட்டும் தொடர்ந்து சொதப்பிக்கொண்டே இருந்தது - செட் பீஸ்! செட் பீஸ்களில், அதில் வரும் கிராஸ்களில் தொடர்ச்சியாக கோல் விட்டுக்கொண்டிருக்கும் அந்த அணி, நேற்றும் அதையே தொடர்ந்தது. அதுவும் 2-வது நிமிடத்திலேயே.

கேப்டன் ஆஸ்பிலிக்யூடா வலது விங்கில் பாக்சுக்கு வெளியே ஃபவுல் செய்ய, அயாக்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் கொடுக்கப்பட்டது. பாக்ஸ் நோக்கி வந்த கிராஸை கிளியர் செய்ய நினைத்த, செல்சீ ஸ்டிரைக்கர் டேமி ஆப்ரஹாமின்மேல் பட்டு பந்து கோலானது. இந்த சீசனில் ஆப்ரஹாம் போடும் இரண்டாவது ‘ஓன் கோல்’ இது! இரண்டாவது நிமிடத்திலேயே கோல் வாங்கியதால் துவண்டு போயிருந்த செல்சீ ரசிகர்களுக்கு அடுத்த சில நொடிகளிலேயே பதில் கிடைத்தது. அயாக்ஸ் டிஃபண்டர் வெல்ட்மேன், பாக்சுக்குள் புலிசிச்சை ஃபவுல் செய்ய, கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் ஜார்ஜினியோ.

இரு அணிகளும் முழு உத்வேகத்தோடு ஆட, இரண்டு கோல்கீப்பர்களுக்கும் சுவாசிக்கவே நேரம் கிடைக்கவில்லை. 14-வது நிமிடத்தில் ஆப்ரஹாம் கோலடித்தார். ஆனால், அவர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததால், கோல் மறுக்கப்பட்டது. அடுத்த நிமிடமே மறுபக்கம் படையெடுத்தது அயாக்ஸ். ஆனால், கிடைத்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிட்டார் டுசான் டேடிச். ஆனால், 20-வது நிமிடத்திலேயே இரண்டாவது கோலடித்து முன்னிலை பெற்றது அயாக்ஸ். இடது விங்கிலிருந்து ஜியெச் கொடுத்த அற்புதமான கிராஸ், செல்சீ பெனால்டி ஏரியாவுக்குச் செல்ல, புளூஸ் டிஃபண்டர்களால் சரியாக மார்க் செய்யப்படாத குவின்சி பிராம்ஸ் அற்புதமாக ஹெடர் செய்து கோலடித்தார்.

Chelsea vs Ajax
Chelsea vs Ajax
AP

எப்படியாவது செல்சீ ஈக்வலைசர் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, மீண்டும் ஒரு ஃபவுல்… மீண்டும் ஒரு செட்பீஸ்… மீண்டும் ஒரு அயாக்ஸ் கோல்! இம்முறை இடது விங்கில், அலோன்சோ தேவையில்லாத ஃபவுல் செய்ய, அந்த ஃப்ரீ கிக் எடுக்கத் தயாரானார் ஜியெச். அயாக்ஸ் வீரர்களை டார்கெட் செய்வார் என்று எல்லோரும் நினைத்திருக்க, அவர் அடித்த ஷாட், நேரே ஃபார் போஸ்டை டார்கெட் செய்தது. போஸ்டில் பட்டு ரீபௌண்ட் ஆன பந்தைத் தடுக்கப் பாய்ந்த கோல்கீப்பர் அரிஸபலாகாவின் முகத்தில் பட்டு கோல் போஸ்டுக்குள் விழுந்தது பந்து. இந்தப் போட்டியின் இரண்டாவது ஓன் கோல். அயாக்ஸின் மூன்றாவது கோல்!

4 கோல்கள் (3-1) , 4 மஞ்சள் அட்டைகளோடு (தலா 2) முடிவுக்கு வந்தது முதல் பாதி. செல்சீ ரசிகர்கள் மொத்தமாக உடைந்துபோயிருக்க, முதல் பாதியில் சொதப்பிய அலோன்சோவுக்குப் பதில் இளம் வீரர் ரீஸ் ஜேம்ஸைக் களமிறக்கினார் செல்சீ மேனேஜர் லாம்பார்ட். இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே செல்சீயின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஜூமா, புலிசிச், ஆப்ரஹாம் ஆகியோரின் ஆட்டம் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தியது. செல்சீ அட்டாக் செய்துகொண்டிருந்த வேகத்திலேயே அட்டகாசமான கவுன்டர் அட்டாக் மூலம், அயாக்ஸின் 4-வது கோலை அடித்தார் வான் டி பீக்.

Chelsea vs Ajax
Chelsea vs Ajax
AP

அந்த கோலுக்குப் பிறகு, ஹட்சன் ஒடோய் களமிறக்கப்பட, செல்சீயின் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடித்தது. 62-வது நிமிடத்தில், வலது விங்கிலிருந்து ஆபிரஹாம் கொடுத்த கிராஸை விங்கிலிருந்து, டேப் இன் செய்து கோலாக்கினார் கேப்டன் ஆஸ்பிலிக்யூடா. அடுத்த 5-வது நிமிடம் மிகப்பெரிய டிராமா அரங்கேறியது. டிரிபிள் செய்து முன்னேறிக்கொண்டிருந்த டேமி ஆபிரஹாமை, டேலி பிளைண்ட் தள்ளிவிட்டார். இருந்தாலும், ரெஃப்ரீ அட்வான்டேஜ் சொல்ல, அந்தப் பந்தை ஹட்சன் ஒடோய் ஷூட் செய்தார். அது மற்றொரு அயாக்ஸ் சென்டர் பேக் வெல்ட்மேன் கையில் பட்டது. ஒரு டிஃபண்டர் ஃபவுல் செய்துவிட்டார். மற்றொருவர் ஹேண்ட் பால் செய்துவிட்டார். இதில் என்ன கொடுமையெனில், முதல் பாதியில் இரண்டு நிமிட இடைவெளியில் இவர்கள் இருவருமே யெல்லோ கார்டு பெற்றிருந்தனர். இப்போது இருவரும் இரண்டாவது யெல்லோ கார்டு வாங்கி வெளியேறினர்.

களத்தில் 9 வீரர்கள். போதாக்குறைக்கு பெனால்டி வேறு. மீண்டும் பெனால்டி பாயின்டில் ஜார்ஜினியோ. தற்போதைய கால்பந்து உலகில் இவர்தான் கூல் பெனால்டி டேக்கராக இருப்பார். அந்த அளவுக்குக் கூலாக அந்த பெனால்டியையும் கோலாக்கினார் ஜார்ஜினியோ. 4-3. அடுத்த 20 நிமிடங்களுக்கு செல்சீயின் ஆதிக்கம் ஓங்கும், செல்சீ வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. மூன்றாவது கோல் அடித்த அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே 4-வது கோலும் அடித்தது செல்சீ. செல்சீ அடித்த கார்னர் ரீபௌண்ட் ஆக, அதை அற்புதமாக கோலாக்கினார் ஜேம்ஸ். செல்சீயின் வெற்றி ஓரளவு உறுதியானது.

Reece James
Reece James
AP

78-வது நிமிடம்… செல்சீயின் 5-வது கோலை கேப்டன் ஆஸ்பி அடிக்க, ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் கோலாகலமானது. ஆனால், அந்த சந்தோஷத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்தது VAR. கோலுக்கு முன்பு, ஜார்ஜினியோ அடித்த கோல் ஆபிரஹாம் கையில் பட்டதால் கோல் மறுக்கப்பட்டது. இதன்பிறகு, அயாக்ஸ் அணி தங்களின் தடுப்பாட்டத்தை பலப்படுத்தியது. ஹட்சன் ஒடோய், பாட்ஷுவாயி இருவரும் கோல் வாய்ப்புகளைத் தவறவிட, வெற்றிக்கான கோலை அடிக்க முடியாமல் போட்டியை டிரா செய்தது செல்சீ.

அடிக்கப்பட்ட 8 கோல்களில், 4 கோல்கள் ஃபவுல்களின் காரணமாக அடிக்கப்பட்டவை. இரண்டு அனிகளும் அந்த அளவுக்கு தடுப்பாட்டத்தில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. மொத்தம் 22 ஃபவுல்கள். சொல்லப்போனால், இதை ஃபவுல்களால் நிர்ணயிக்கப்பட்ட போட்டி என்றே சொல்லலாம்.

மற்ற போட்டிகளில், பார்சிலோனா 0-0 என ஸ்லாவியா பிராக் அணியோடு டிரா செய்தது. லிவர்பூல் 2-1 என ஜெங்க் அணியை வீழ்த்தியது. 2 கோல்கள் முன்னிலையில் இருந்த, இன்டர் மிலன், அதன்பின் 3 கோல்கள் வாங்கி பொருஷியா டார்ட்மண்ட் அணியிடம் தோல்வியடைந்தது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு