Published:Updated:

ஹாவர்ட்ஸ் to வெர்னர் to ஜியச்: செல்சீயின் ஆச்சர்ய கோலும் அட்டகாச வெற்றியும்!

செல்சீ
News
செல்சீ ( Matt Dunham )

மாட்ரிட்டில் நடந்த முதல் லெக் போட்டியில், ஒலிவியர் ஜிரூட் அடித்த மெர்சல் கோலால் 1-0 என வெற்றி பெற்று அசத்தியது செல்சீ. அதனால், இரண்டாவது லெக் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது செல்சீ. நேற்று ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்தச் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் 2-0 என செல்சீ வெற்றிபெற்றது. இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

இரண்டு பெரிய அணிகள் ஆடும் ஒரு முக்கியமான போட்டியின்போது எப்போதுமே நம்பர்கள் அதிகம் உலாவத் தொடங்கும். எண்களின் மூலம் வரலாறு ரீவைண்ட் செய்யப்படும். அந்த எண் ஏதாவதொரு அணிக்குச் சாதகமாக இருக்கும்போது, அதுவுமே அந்த ஆட்டத்தில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்சீ vs அத்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் போட்டியைப் பற்றியும் அப்படிப் பல நம்பர்கள் உலாவத் தொடங்கின.

இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப்களுக்கு எதிராக, கடந்த 11 ஆண்டுகளில், கடைசியாக மோதிய 12 போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே தோற்றிருந்தது. அதுவும்கூட லீக் சுற்றில்தான். நாக் அவுட் என்று வந்துவிட்டால், இங்கிலாந்து கிளப்களை வெளியேற்றுவது அவர்களின் ஹாபியாகவே இருந்துவந்தது. இந்த வரலாறு ஒருபக்கமெனில், அவர்களின் சமீபத்திய ஃபார்ம் இன்னும் மிரட்டலா இருந்தது. லா லிகா தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என இரு பெரும் தலைகளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் இருந்தது. அப்படிப்பட்ட நிலையில்தான் சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் நாக் அவுட் சுற்றில் அவர்களிடம் சிக்கியது செல்சீ.

பயிற்சியார் தாமஸ் துகல்
பயிற்சியார் தாமஸ் துகல்
Matt Dunham

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேசமயம் செல்சீயின் சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் ரெக்கார்ட் கவலை தரும் வகையில்தான் இருந்தது. 7 ஆண்டுகளாக அவர்கள் காலிறுதிக்குள் கூட நுழையவில்லை. கடைசியாக 2014-ம் ஆண்டு இதே அத்லெடிகோவின் கையில் அரையிறுதியில் அடிவாங்கியதுதான். அதன்பின் பி.எஸ்.ஜி, பார்சிலோனா, பேயர் மூனிச் என பெரும் தலைகளோடு போட்டியிட்டு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு வெளியேறிக்கொண்டே இருந்தது. வரலாறு அவர்களுக்கு எதிராக இருக்க, பயிற்சியாளர் மாற்றம், அட்டாக்கர்களின் தடுமாற்றம் என நிகழ்காலமும் அவர்களுக்கு எதிராகத்தான் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படி இரு வேறு துருவத்தில் இருந்த இரண்டு அணிகள் சந்திக்கிறது எனும்போது, ஒவ்வொருவரின் கணிப்புமே, அத்லெடிகோ காலிறுதிக்கு முன்னேறும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால், செல்சீ, அதன் இளம் படை, புதிய மேனேஜர் தாமஸ் துகல்… அதை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

மாட்ரிட்டில் நடந்த முதல் லெக் போட்டியில், ஒலிவியர் ஜிரூட் அடித்த மெர்சல் கோலால் 1-0 என வெற்றி பெற்று அசத்தியது செல்சீ. அதனால், இரண்டாவது லெக் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அந்த 2014 அரையிறுதியில் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் வைத்து 3-1 என செல்சீயை வீழ்த்தியிருந்தது அத்லெடிகோ. மீண்டும் அப்படியொரு நிகழ்வு நடந்துவிடக்கூடாது என்று செல்சீ ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருந்தனர். போதாக்குறைக்கு, மேசன் மௌன்ட், ஜார்ஜினியோ என இரு முக்கிய வீரர்கள் இந்தப் போட்டிக்கு சஸ்பெண்ட் ஆகியிருந்ததால், அந்த பயம் கொஞ்சம் துளிர்விடத் தொடங்கியிருந்தது.

ஹகிம் ஜியச்
ஹகிம் ஜியச்
Matt Dunham

இந்த சீசன் தொடக்கத்தில் தங்கள் அணியில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருந்தது செல்சீ. ஆனாலும், அந்த அணியின் ரசிகர்களுக்கு பயம். காரணம், அப்படி மில்லியன்களைக் கொட்டி வாங்கப்பட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. டிமோ வெர்னர், ஹகிம் ஜியச், கை ஹாவர்ட்ஸ் என புதிய வீரர்கள் ஒவ்வொருவருமே இந்த சீசன் பெரிதும் ஏமாற்றினார்கள். போதாதற்கு கடந்த சீசனில் பட்டையைக் கிளப்பிய கிறிஸ்டியன் புலிசிச்சும் காயம், ஃபார்ம் அவுட் என சரிவைச் சந்தித்தார். விளைவு, கிளம் ஜாம்பவான் லாம்பார்ட் பதவி இழக்கவேண்டியதாக இருந்தது.

இந்த அணியை வைத்துத்தான் நேற்று அத்லெடிகோவை அடித்திருக்கிறார் தாமஸ் துகல். மௌன்ட், ஜார்ஜினியோ, தியாகோ சில்வா யாரும் இல்லாமல்… பெரிதும் சோபிக்காத அட்டாகிங் யூனிட்டை வைத்து, லா லிகா லீடர்களை வெளியேற்றியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெர்னர் - 10, ஹாவர்ட்ஸ் - 5, ஜியச் - 2, புலிசிச் - 2

அந்த அணியின் முக்கிய வீரர்கள் இந்த சீசனில் அடித்த கோல்கள் இவ்வளவே! இளம் நடுகள வீரர் மேசன் மௌன்டின் அட்டகாச செயல்பாடும், டிஃபண்டர்கள் கொடுத்த கோல்களும்தான், அந்த அணியை ஓரளவு காப்பாற்றிக்கொண்டிருந்தது. அந்த நால்வரில் வெர்னர் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ஒரு முன்னேற்றம் காட்டிக்கொண்டிருந்தார். மற்றவர்களின் செயல்பாடு ஒவ்வொருவருக்கும் அதிருப்தியாகவே இருந்தது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் தன் அட்டாகிங் யூனிட்டை மாற்றிக்கொண்டே இருந்தார் துகல்.

ஆனால், நேற்றைய போட்டியில் இந்த நால்வருமே கோல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். செல்சீ அடித்த முதல் கோலில், வெர்னர், ஹாவர்ட்ஸ், ஜியச் என மூன்று பேரின் பங்களிப்பும் இருந்தது செல்சீ ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

ஹாவர்ட்ஸ்
ஹாவர்ட்ஸ்
Matt Dunham

கான்டே, கோவசிச் அடங்கிய நடுகளமும், ருடிகர் - ஜூமா - ஆஸ்பிளிகியூட்டா அடங்கிய டிஃபன்ஸும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்ததால், அத்லெடிகோ கோலடிக்க முடியாமல் தடுமாறியது. அவற்றுக்கு மத்தியில், ஒரு அட்டகாசமான கவுன்ட்டர் அட்டாக் மூலம் கோலடித்தது செல்சீ.

அட்டாகிங் தேர்டில் டிரிப்பியர் கிராஸ் செய்ய முற்பட, ஸ்லைட் டேக்கிள் மூலம் மீட்டார் டிமோ வெர்னர். அந்தப் பந்து ஹாவர்ட்ஸ் கால்களில் மாட்ட, அதை அட்டகாசமாக டிரிபிள் செய்து, இடது விங்கில் வேகமாக முன்னேறிய வெர்னருக்கு மீண்டும் அனுப்பினார் அவர். அத்லெடிகோ மாட்ரிட் டிஃபண்டர்களுக்குத் தன் வேகத்தால் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்த வெர்னர், இப்போதும் வேகமாக பாக்சுக்குள் நுழைந்த வெர்னர், வலதுபக்கம் இருந்து ஜியச்சுக்கு பாஸ் கொடுத்தார். வந்த பந்தை அப்படியே தன் வலது காலால் கோலாக்கினார் ஜியச். 1-0. ஒட்டுமொத்தமாக 2-0 என முன்னிலை பெற்றது செல்சீ.

களத்தில் இருந்த அவர்கள் மூவரும் ஒருவழியாக இணைந்து ஒரு கோலை அடிக்க, மாற்று வீரராக வந்த புலிசிச்சும் தன் பங்கிற்கு ஒரு அசிஸ்ட் செய்தார். ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் டைமில், செல்சீ இன்னொரு கவுன்ட்டர் தொடுக்க, அதை வேகமாக அத்லெடி பாக்சுக்குள் எடுத்துச் சென்று எமர்சனுக்குப் பாஸ் செய்தார் அந்த இளம் அமெரிக்க வீரர். ஆட்டத்தில் தன்னுடைய முதல் டச்சையே கோலாக்கினார் எமர்சன்! 3-0. ஆட்டத்தை மொத்தமாக முடிவுக்குக்குக் கொண்டுவந்தது செல்சீ.

வெர்னர்
வெர்னர்
Matt Dunham

இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் லீகின் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி. இந்த வெற்றி ஒருபக்கம் மிகப்பெரிய சந்தோஷம் எனில், டிஃபண்டர்களின் கிளீன் ஷீட், இதுவரை சொதப்பிய அட்டாக்கர்களின் காம்பினேஷன் கோல், செல்சீ ரசிகர்கள் கொண்டாடுவதற்கு எண்ணற்ற காரணங்களைக் கொடுத்திருக்கிறது இந்தப் போட்டி.

போக, இன்னும் இரண்டு நம்பர்களையும் ஞாபகப்படுத்திச் சென்றிருக்கிறது.

புதிய பயிற்சியார் தாமஸ் துகல் இன்னும் தோற்கவில்லை.

இன்னொன்று, அத்லெடிகோ மாட்ரிட்டை கடைசியாக வீழ்த்திய அந்த இங்கிலாந்து கிளப்பும் செல்சீதான்!