Published:Updated:

செல்சீ, பேயர்ன், யுனைட்ட், பி.எஸ்.ஜி - கோப்பை யாருக்கு? தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக் சீசன்!

சாம்பியன்ஸ் லீக் | Who will lift the trophy?

கிளப் கால்பந்தின் மிகப்பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீக் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் செல்சீ, பார்சிலோனா, பி.எஸ்.ஜி, மான்செஸ்டர் சிட்டி போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 கிளப்கள் இந்தத் தொடரில் மோதவுள்ளன.

செல்சீ, பேயர்ன், யுனைட்ட், பி.எஸ்.ஜி - கோப்பை யாருக்கு? தொடங்குகிறது சாம்பியன்ஸ் லீக் சீசன்!

கிளப் கால்பந்தின் மிகப்பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீக் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் செல்சீ, பார்சிலோனா, பி.எஸ்.ஜி, மான்செஸ்டர் சிட்டி போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 கிளப்கள் இந்தத் தொடரில் மோதவுள்ளன.

Published:Updated:
சாம்பியன்ஸ் லீக் | Who will lift the trophy?

இந்த சீசனின் இறுதிப் போட்டி மே 18, 2022-ல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடக்கவிருக்கிறது. இந்த சீசன் மிகமுக்கிய மாற்றமாக, 'அவே கோல்' விதி நீக்கப்பட்டிருக்கிறது.

மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தமாகியிருப்பது, ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்திருப்பது, பார்சிலோனா பல முன்னணி வீரர்களை இழந்திருப்பது போன்ற விஷயங்கள் இந்த சீசன் மீது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சீசனில் கீழ்க்காணும் இந்த முன்னணி அணிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

செல்சீ

நடப்பு சாம்பியன் செல்சீ, கோப்பையைத் தக்கவைப்பதற்குத் தேவையான முழு பலத்துடன் களமிறங்குகிறது. கோப்பை வென்ற அணியோடு லுகாகு என்ற கோல் மெஷின் இணைந்திருக்கும்போது, அவர்களின் பலத்தை சொல்லவா வேண்டும். பயிற்சியாளர் தாமஸ் டுகல், பாதியிலிருந்து பொறுப்பெடுத்தபோதே அணியை வேறு லெவலுக்கு உயர்த்தியிருந்தார். இப்போது தொடக்கத்திலிருந்தே தன் தாக்கத்தை அணியில் ஏற்படுத்தியிருக்கிறார். லிவர்பூல் அணிக்கெதிரான பிரீமியர் லீக் போட்டியின் இரண்டாம் பாதியில் 10 வீரர்கள் மட்டுமே இருந்தபோதும், அந்த அணி ஆடிய ஆட்டம் நிச்சயம் இந்த சீசன் அவர்களுக்குப் பல கோப்பைகளை பெற்றுக் கொடுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது. டிஃபன்ஸ், நடுகளம், அட்டாக் என எல்லா ஏரியாவும் பயங்கர ஃபார்மில் இருக்கிறது.

Romelu Lukaku
Romelu Lukaku
AP

மான்செஸ்டர் சிட்டி

கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்தும் வாய்ப்பை நழுவவிட்ட மான்செஸ்டர் சிட்டி இம்முறையாவது தங்கள் முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும். ஜேக் கிரீலிஷை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கி தங்களை பலப்படுத்தியிருக்கிறது அந்த அணி. இருந்தாலும், அணியிலிருந்து வெளியேறியிருக்கும் டீம் ஜாம்பவான் அகுவேரோவுக்கு மாற்று வீரரை வாங்காதது பிரச்னையாக அமையலாம். கடந்த ஃபைனலிலும் ஸ்டிரைக்கர் இல்லாமல் களமிறங்கியது சிக்கலானது. ஃபெரன் டாரஸ், டி புருய்னா ஆகியோரைக் கொண்டு எந்த அளவுக்கான தாக்கத்தை கார்டியோலா ஏற்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். குரூப் பிரிவில் பி.எஸ்.ஜி இருப்பதால், கார்டியோலா vs மெஸ்ஸி போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பேயர்ன் மூனிச்

துடிப்பான இளம் பயிற்சியளர் ஜூலியன் நகில்ஸ்மேன் தலைமையில் இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் களம் காண்கிறது பேயர்ன் மூனிச். ஹான்ஸி ஃபிளிக் இருந்தபோது 2019-20 சீசனில் அனைத்து அணிகளையும் புரட்டி எடுத்தது பேயர்ன். அப்படியான ஒரு செயல்பாட்டை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம். வழக்கம்போல் புண்டஸ்லிகா தொடரின் நல்ல பெர்ஃபாமர்களையெல்லாம் வளைத்துப் போட்டிருக்கிறார்கள். உபமகானோ, சபிட்சர் ஆகியோரின் வருகை ஏற்கெனவே பலமாக இருக்கும் அணியை இன்னும் பலமாக்கியிருக்கிறது. ராபர்ட் லெவண்டோஸ்கி சற்றும் ஓய்வதாக இல்லை. இதுவரை இந்த சீசனில் ஆடிய 4 போட்டிகளில் 6 கோல்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். நாக் அவுட் சுற்று தொடங்குவதற்குள் டிஃபன்ஸிவ் யூனிட்டுக்கு நல்ல கெமிஸ்ட்ரி அமைந்துவிட்டால், மீண்டும் கோப்பையை வெல்லக்கூடும். இன்று முதல் போட்டியே பேயர்ன் vs பார்சா என்பதால், முந்தைய 8-2 போன்ற சரவெடியை எதிர்பார்க்கலாம்.

Messi
Messi

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்

லயோனல் மெஸ்ஸி, செர்ஜியோ ரமோஸ், ஜார்ஜினியோ வைனால்டம், கியான்லூயி டொன்னரும்மா, அச்ரஃப் ஹகிமி - இது இந்த சீசனில் பி.எஸ்.ஜி அணியில் இணைந்திருக்கும் வீரர்களின் பட்டியல். இவர்கள் போக, நெய்மர், எம்பாப்பே, வெரட்டி, டி மரியா, கிம்பெம்பே - இல்லை, இது நீங்கள் ஃபிஃபா கரியர் மோடில் வாங்கி வைத்திருக்கும் அணி இல்லை. ஒரு கிளப் ஸ்குவாட் தான். பி.எஸ்.ஜி - டாப் டூ பாட்டம் நட்சத்திரங்கள் நிறைந்த அணியாக உருவெடுத்து நிற்கிறது. பி.எஸ்.ஜி-கு முதல் சாம்பியன்ஸ் லீக், மரிஷியோ பொசடினோவுக்கு முதல் மேஜர் டிராபி என அனைத்திற்கும் இந்த சீசன் நல்ல வாய்ப்பு இருக்கிறது. வீரர்கள் ஃபிட்னஸை மட்டும் சரியாக மேனேஜ் செய்தால், எதிர்பார்த்தது நிறைவேறும்.

அத்லெடிகோ மாட்ரிட்

புல் கொடுத்தாலே சண்டை செய்யும் டியாகோ சிமியோனி, வேல் கொடுத்தால் செய்யாமல் இருப்பாரா என்ன! லா லிகா பட்டம் வென்ற சூட்டோடு இந்த சீசனை நல்லபடியாகவே தொடங்கியிருக்கிறது அத்லெடிகோ மாட்ரிட். நடுகளத்தில் ராட்ரிகோ டி பால் இணைந்திருப்பது அணியை இன்னும் பலப்படுத்துகிறது. மாத்தியஸ் குன்ஹாவின் வருகை, சுவாரஸின் அனுபவம் கோல்களுக்குப் பஞ்சம் வைக்காது. அதுமட்டுமல்லாமல், ஆன்டுவான் கிரீஸ்மேன் மீண்டும் திரும்பிவிட்டார். பார்சிலோனாவுக்குப் போவதற்கு முன் இருந்த கிரீஸ்மேனை மீட்டு எடுத்துவிட்டால், சிமியோனின் அணி பலமடங்கு பலமாகிவிடும். இரண்டு முறை ஃபைனலில் தவறியதை இந்த முறை சிமியோன் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo
AP

மான்செஸ்டர் யுனைடட்

ஆம், மான்செஸ்டர் யுனைடட் இந்த முறை சாம்பியன்ஸ் லீக் வெல்ல வாய்ப்பிருக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ வந்துவிட்டாரே! சென்டர்பேக், டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்ட், விங், ஃபார்வேர்ட் என 4 பொசிஷன்களில் அந்த அணிக்குப் பஞ்சாயத்து இருந்தது. டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்ட் தவிர்த்து அனைத்து ஏரியாவையும் பலப்படுத்தியிருக்கிறார்கள். 4 அட்டாகிங் பொசிஷன்களுக்கு, ரொனால்டோ, கவானி, சான்சோ, புரூனோ, கிரீன்வுட், ரேஷ்ஃபோர்ட், லின்கார்ட் என 7 நல்ல ஆப்ஷன்கள் (மார்ஷியலும் இருக்கிறார்) இருக்கின்றன. ரஃபேல் வரேன் வருகை டிஃபன்ஸை பலப்படுத்தியிருக்கிறது. போக்பா இருக்கும் ஃபார்மைப் பார்த்தால், டி புருய்னாவுக்கே சவால்விடுவார் போல! இருக்கும் ஒரே பிரச்னை, அந்த ஒரு டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் ரோல்தான். அந்த ஒரு ரோலுக்கு சரியான பதிலை ஷோல்ஸ்கர் கண்டுகொண்டால், ஓல்ட் டிராஃபோர்டுக்கு மீண்டும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வரலாம்.

இந்த கிளப்கள் தவிர்த்து ரியல் மாட்ரிட், லிவர்பூல் ஆகிய அணிகள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கடுமையான போட்டியளிக்கலாம். பார்சிலோனா, யுவன்டஸ் ஆகிய அணிகள் காலிறுதியைத் தாண்டுவதே பெரிய விஷயமாகத்தான் இருக்கும். ஆனால், சாம்பியன்ஸ் லீகைப் பொறுத்தவரை எதிர்பாராத அணிகள் திடீரென்று அமர்க்களப்படுத்தும். மொனாகோ, அயாக்ஸ், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ், லயான் என்று சமீபத்திலேயே பல உதாரணங்கள் பார்த்திருக்கிறோம். அதனால், எந்த அணியையும் குறைவாக மதிப்பிடவும் முடியாது.