Election bannerElection banner
Published:Updated:

தாமஸ் முல்லரின் மாஸ்... அல்போன்ஸா டேவிஸின் மிரட்டல்... அலறவிடும் பேயர்ன் மூனிச்! #Bundesliga

Thomas Muller
Thomas Muller ( AP )

புண்டஸ்லிகா மேட்ச்டே - 27 ரிப்போர்ட்!

புண்டஸ்லிகா தொடரில் தங்களின் ஆதிக்கத்தை அசராமல் தொடர்ந்துகொண்டிருக்கும் பேயர்ன் மூனிச், இந்த வாரம் எய்ன்ட்ராக்ட் ஃப்ராங்ஃபர்ட் அணியை 5-2 எனப் பந்தாடியது. புள்ளிப்பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் பொருஷியா டார்ட்மண்ட், ஆர்.பி.லெய்ப்சிக் அணிகளும் இந்த வாரம் வெற்றி பெற்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருஷியா மொன்சன்கிளாட்பேச், பேயர் லெவர்குசான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 3-1 என லெவர்குசான் வெற்றி பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியதால், கடந்த வாரம் அனைத்துப் போட்டிகளிலுமே சற்று தொய்வு காணப்பட்டது. இந்த வாரம் வீரர்கள் தங்கள் உத்வேகத்தை ஓரளவு திரும்பப் பெற்றுவிட்டனர். யுனியோன் பெர்லின் அணிக்கெதிரான போட்டியில் கோலடிக்க மிகவும் சிரமப்பட்ட பேயர்ன், இந்த வாரம் கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது ஜெர்மனியின் நடப்பு சாம்பியன். சென்டர் பேக் அலாபா கொடுத்த ஓர் அற்புத கிரவுண்ட் பாஸ், அந்த அணியின் இடது விங் பேக், விங்கர், எதிரணி வீரர்கள் அனைவரையும் துளைத்துக்கொண்டு ஃபைனல் தேர்டுக்குள் நுழைந்தது. அதை அற்புதமாக கன்ட்ரோல் செய்து, பாக்ஸுக்குள் நுழைந்ததும் கிராஸ் போட்டார் தாமஸ் முல்லர். பெனால்ட்டி ஏரியாவுக்குள் பௌன்ஸ் ஆகி நுழைந்த பந்தை மிட்ஃபீல்டிலிருந்து வேகமாக வந்து அட்டகாசமான கோலாக மாற்றினார் லியோன் கொரேட்ஸ்கா. 1-0!

Thomas Muller
Thomas Muller
AP

இரண்டாவது கோல் அதைவிட அட்டகாசமானது. இந்த சீசன் முழுக்க அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் அல்ஃபோன்ஸா டேவிஸ், நேற்றும் தன் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இடது விங்கில் மிகச் சிறப்பாக சேஸ் செய்து பந்தை மீட்டெடுத்தவர் (41-வது நிமிடம்), பெனால்ட்டி பாக்ஸுக்குள் அசத்தலான கிராஸ் ஒன்றை அனுப்பினார். பாக்ஸின் ஓரத்தில் நின்றிருந்த ஃபராங்ஃபர்ட் வீரர்கள் அனைவரையும் தாண்டி பெனால்ட்டி ஸ்பாட்டில் விழுந்தது. ஆஃப் சைட் டிராப்பைத் தாண்டி மிகச் சிறப்பாக பெனால்ட்டி ஸ்பாட்டுக்குள் நுழைந்தார் தாமஸ் முல்லர். அழகாகப் பந்தை கன்ட்ரோல் செய்து, சிறப்பாக ஃபினிஷ் செய்தார். 2-0!

இரண்டாவது பாதி தொடங்கிய 45 நொடிகளில் மூன்றாவது கோலை அடித்தது மூனிச். நடுகளத்திலிருந்து பெரிசிச் கொடுத்த ஏரியல் பாஸை தன் அசாத்திய டச் மூலம் பாக்ஸுக்குள் அனுப்பினார், வலது விங்கில் நின்றிருந்த முல்லர். அந்தப் பந்தை அதே வேகத்தில் கோமன் பெனால்ட்டி ஏரியாவுக்குள் அனுப்ப, அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் போலந்து கோல் மெஷின் லெவண்டோஸ்கி!

Alphonso Davies
Alphonso Davies
AP

52 நிமிடங்கள் கோலடிக்க முடியாமல் தடுமாறிய ஃப்ராங்ஃபர்ட், அடுத்த 4 நிமிடங்களில் இரண்டு கோல்கள் திருப்பின. இரண்டு கார்னர்கள்… இரண்டு கோல்கள் அடித்தார் ஃப்ராங்ஃபர்ட் டிஃபண்டர் மார்டின் ஹின்டெரகர். சரியாக கிளியர் செய்யப்படாத முதல் கார்னரை, இடது கால் மூலம் half volley-யில் கோலாக்கியவர், அடுத்த கார்னரை ஹெட்டர் மூலம் கோலாக்கினார். 3-2. ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால், அடுத்த ஆறே நிமிடங்களில் மூனிச்சின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் அல்ஃபோன்ஸா டேவிஸ்.

61-வது நிமிடம்… பெரிசிச்சிடம் 1-2 ஆடி எதிரணியின் பாக்ஸுக்குள் வேகமாக நுழைந்தார் அந்த இளம் கனடா வீரர். அவரிடமிருந்து பந்தைப் பறித்த ஜெல்சன் ஃபெர்னாண்டஸ், மோசமாக பாஸ் செய்து டேவிஸின் கால்களுக்கே பந்தைத் தாரை வார்த்துக்கொடுத்தார். அந்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி கோலடித்தார் டேவிஸ். இரண்டு முறை நூயரின் போஸ்ட்டில் கோலடித்த ஹின்டெரகர், மூன்றாவது கோலை, தன்னுடைய போஸ்ட்டிலேயே அடித்து பேயர்னின் முன்னிலையை மூன்றாக்கினார். டிஃபன்ஸிலிருந்து வந்த லாங் பாஸோடு ஃப்ராங்ஃபர்ட் பாக்ஸுக்குள் நுழைந்தார் செர்ஜ் நாப்ரி. பாக்ஸின் இன்னொரு பக்கம் வந்த முல்லருக்கு அவர் போட்ட பாஸில் வேகமில்லாமல் ஹிண்டெரகரிடம் வந்தது. அதை அவர் கிளியர் செய்ய முயற்சி செய்ய, அவரின் இன்னொரு காலில் பட்டு பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது . 5-2!

Robert Lewandowski & Leon Goretzka
Robert Lewandowski & Leon Goretzka
AP

தொடர்ந்து எட்டாவது புண்டஸ்லிகா பட்டத்தைக் குறிவைத்திருக்கும் பேயர்ன் மூனிச், இந்த சீசனின் 19-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்திலிருக்கும் பொருஷியா டார்ட்மண்ட், 2-0 என வோல்ஸ்பெர்க் அணியை வீழ்த்தியது. ஷால்கேவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த ரஃபேல் குரேரோ இந்தப் போட்டியிலும் கோலடித்தார். இன்னொரு கோலை, மற்றொரு விங் பேக் அச்ரஃப் ஹகிமி ஸ்கோர் செய்தார். லெய்ப்சிக் 5-0 என மெய்ன்ஸ் அணியைப் பந்தாடியது. அந்த அணியின் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் டிமோ வெர்னர் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.

பேயர்ன், டார்ட்மண்ட் அணிகளுக்கிடையிலான 4 புள்ளி இடைவெளி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டியின் முடிவு, இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால், இதுதான் இப்போது இந்த சீசனின் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் பி.வி.பி வென்றால் இடைவெளி குறையும். பேயர்னுக்கு, லெவர்குசான், மொன்சன்கிளாட்பாச் அணிகளுடன் போட்டி இருப்பதால், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். அதேசமயம், பேயர்ன் வென்றுவிட்டால், இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்துவிடும். பேயர்ன் படையை, இளம் டார்ட்மண்ட் பட்டாளம் தடுக்குமா?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு