Published:Updated:

யூத்ஃபுல் யுனைடெட்... பண்டிட் மொரினியோ... ஸ்டெர்லிங் ஹாட்ரிக்! #PremierLeague

Sterling ( AP )

கோல் கீப்பர் ஆலிசன் பெக்கர் காயமடைந்திருப்பது லிவர்பூல் அணிக்குப் பின்னடைவே. ஏனெனில், கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் அட்டகாசமாக இரண்டு கோல்களைத் தடுத்தார்.

யூத்ஃபுல் யுனைடெட்... பண்டிட் மொரினியோ... ஸ்டெர்லிங் ஹாட்ரிக்! #PremierLeague

கோல் கீப்பர் ஆலிசன் பெக்கர் காயமடைந்திருப்பது லிவர்பூல் அணிக்குப் பின்னடைவே. ஏனெனில், கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் அட்டகாசமாக இரண்டு கோல்களைத் தடுத்தார்.

Published:Updated:
Sterling ( AP )

பிரிமியர் லீக் சீசன் தொடங்கிவிட்டது. முதன்முறையாக பிரிமியர் லீக்கில் VAR (Video Assistant Referee) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை உள்ளிட்ட மற்ற தொடர்களைவிட, பிரிமியர் லீக்கில் VAR கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருக்கிறது. அஸ்டன் விலா, ஷெபீல்டு யுனைடெட், நார்விச் சிட்டி ஆகிய மூன்று அணிகள் ப்ரமோட் ஆகியுள்ளது. அர்சனல் கிளப் பெப்பேயை 72 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறது. யுனைடட் மகுவரை வாங்கியது வேர்ல்டு ரெக்கார்டு.

டிரான்ஸ்ஃபர் விண்டோவில் பல சிறிய கிளப்கள் தங்களது கிளப் ரெக்கார்டுகளை விஞ்சியிருக்கின்றன. இந்தமுறை பல வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். பெபே, ராட்ரி போன்ற வீரர்கள் வேறு கிளப்பிலிருந்து பிரிமியர் லீக் வந்துள்ளனர். செல்சீக்கு டிரான்ஸ்பர் தடை இருப்பதால், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்த புலிசிச், கேவாசிச் ஆகிய இருவரின் லோனை நிரந்தரமாக்கியுள்ளது.

மொரினியோ ஸ்கை ஸ்போர்ட்ஸில் பண்டிட்டாக புது அவதாரம் எடுத்துள்ளார். அர்சனலுக்கு டிஃபன்ஸ் கிடையாது; செல்சி அவுட்; யுனைடெட் இப்போதுதான் அணியை பில்ட் செய்து வருகிறது. ஸ்பர்ஸ் கடைசி நேரத்தில் போராடும். ஆக, இந்தமுறையும் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் இரு அணிகளுக்கு இடையில்தான், சாம்பியன்ஷிப்புக்கான போட்டி இருக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.

முதல் வாரத்தில் நடந்த சில முக்கிய போட்டிகளைப் பற்றிய அலசல்.

லிவர்பூல் Vs நார்விச்

இந்த சீசனின் முதல் மேட்ச். பிரிமியர் லீக்குக்கு ப்ரமோட் செய்யப்பட்ட நார்விச், முதல் போட்டியிலேயே வலுவான அணியைச் சந்தித்ததால், ரொம்பவே திணறியது. லிவர்பூல் 4–1 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்றுவிட்டது. முதல் பாதியிலேயே நான்கு கோல்கள் வாங்கியது நார்விச். சீசனை இதைவிட மோசமாகத் தொடங்க முடியாது. இருந்தாலும், எதிரணி லிவர்பூல் என்பதால் அடுத்த போட்டியை அவர்கள் நம்பிக்கையுடன் தொடங்கலாம்.

Firmino Celebrates
Firmino Celebrates
AP

லிவர்பூல் அணியில் மனே ஆடவில்லை. எதிர்பார்த்தது போல ஆர்கி ஒரு கோல் அடித்துவிட்டார். சலா எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார். வழக்கம்போல டிஃபன்ஸ் ஸ்ட்ராங். ஒரு சின்ன தவறால் ஒரு கோல் வாங்கிவிட்டது. அதேநேரத்தில், லிவர்பூல் இந்த முடிவில் 100 சதவிகிதம் சந்தோஷம் அடைந்திருக்காது. ப்ரமோட் செய்யப்பட்ட அணிக்கு எதிராக, இரண்டாவது பாதியில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை, அதேநேரத்தில் ஒரு கோல் வாங்கிவிட்டது. இது நல்ல விஷயமல்ல. இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கோல் கீப்பர் ஆலிசன் பெக்கர் காயமடைந்திருப்பது லிவர்பூல் அணிக்குப் பின்னடைவே. ஏனெனில், கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் அட்டகாசமாக இரண்டு கோல்களைத் தடுத்தார். லிவர்பூல் சாம்பியன்ஸ் லீக் வென்றதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். என்னதான் சலா, வேன்டைக் இருந்தாலும் ஆலிசன் இல்லையெனில் லிவர்பூல் அவுட்தான்!

மான்செஸ்டர் சிட்டி Vs வெஸ்ட்ஹாம்

கடந்தமுறை ஒரு புள்ளிதான் சாம்பியன்ஷிப்பை முடிவுசெய்தது. ஒருவேளை இந்தமுறை கோல்கள் வித்தியாசம் கூட, சாம்பியன் யார் என்பதை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கலாம். லிவர்பூல் 4 கோல்கள் அடித்து சீசனைத் தொடங்கியிருக்கிறது என்பதால், சிட்டியும் அதேபோல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. சீசன் தொடங்குவதற்கு முன்பே சிட்டிக்கு அந்த நெருக்கடி இருந்தது.

Sterling
Sterling
AP

முதல்பாதியில் வெஸ்ட்ஹாம் நன்றாகவே விளையாடியது. அட்டாக் பிரமாதமாக இல்லையென்றாலும் மிட்ஃபீல்ட் நன்றாக இருந்தது. அந்த ஒரு மூவ் தவிர்த்து, டிஃபன்ஸ் வலுவாக இருந்தது. ஆனால், இரண்டாவது பாதியில் மொத்தமாகச் சொதப்பிவிட்டது.

இன்னொரு விஷயம், சிட்டி வலுவான அணியை இறக்கவில்லை. அந்தவகையில் அவர்களுக்கு இந்த முடிவில் 200 சதவிகிதம் திருப்தி இருக்கும். அகுவேரா, பெர்னாண்டோ ஸ்டார்டிங் லெவனில் இல்லை. அப்படி இருந்தும் 5–0 என வென்றுவிட்டது. ஸ்டெர்லிங்கிடம் அதே வேகம், அதே வெறித்தனம். முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்துவிட்டார். வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். இந்த ஃபார்ம் நீடித்தால் சீசன் முடிவில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெயர் பெறலாம்.

முதன்முறையாக பிரிமியர் லீக்கில் VAR மூலம், கேப்ரியல் ஜீசஸ் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மான்செஸ்டர் யுனைடெட் Vs செல்சி

இது எதிர்பார்த்த முடிவுதான். செல்சீ திணறும் என்று அந்த கிளப் ரசிகர்களே எதிர்பார்த்தார்கள். ஆனால், 4–0 என்பதைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடியாமல் இருந்திருக்கும். கவுன்ட்டர் அட்டாக்கில் பெரிய அடி. ஃபுல்பேக் கிறிஸ்டென்சன், ஜுமா இருவராலும் டிராக் பண்ணவே முடியவில்லை. ஆஸ்பிலிகியூடா ரைட் விங்கில் ப்ரீ சீசனில் இருந்தே சொதப்பிக் கொண்டிருக்கிறார். செல்சி வீரர்கள் இரண்டு முறை போஸ்ட்டில் அடித்தார்கள். அதில் ஒன்று கோலாக மாறியிருந்தாலும் கேம் மாறியிருக்கும்.

Rashford
Rashford
AP

மிட்ஃபீல்டில் சர்ரியின் ஒன் டச் பாஸ், நல்ல மூவ் கொடுத்தாலும், அதை கோலாக மாற்றமுடியவில்லை. புலிசிச், கான்டே களமிறங்கவில்லை. மூன்று வீரர்கள் காயத்தில் இருக்கிறார்கள். முதல் போட்டி முடிவைப் பார்த்தால் செல்சீ, யூரோப்பா லீக் தகுதிபெறுவதே குதிரைக்கொம்புதான்.

எதிர்த்து ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் முழுக்க முழுக்க இளம் வீரர்களால் நிரம்பியிருக்கிறது. ரேஷ்ஃபோர்டு முதன்முறையாக பிரதான ஸ்ட்ரைக்கராக அவதாரம் எடுத்திருக்கிறார். தன் பொறுப்புணர்ந்து முதல் போட்டியிலேயே, இரண்டு கோல்கள் அடித்து, ஒரு பெனால்டி வாய்ப்பை உருவாக்கி அற்புதமான தொடக்கம் கொடுத்துவிட்டார்.

ஸ்பர்ஸ் Vs அஸ்டன் விலா

ஸ்பர்ஸ் இப்படியோர் ஆரம்பத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ப்ரமோட் ஆன ஓர் அணிக்கு எதிராக 70–வது நிமிடம் வரை 1–0 என சாம்பியன்ஸ் லீக் ஃபைனலிஸ்ட் பின்தங்கியிருப்பது என்பது ஆரோக்கியமான விஷயமல்ல. ஆனால், அஸ்டன் விலாவுக்கு இது கனவு மாதிரி இருந்திருக்கும்.

Harry Kane
Harry Kane
AP

எரிக்சன் இறங்கியபின், கடைசி 20 நிமிடத்தில் ஆட்டம் மாறிவிட்டது. மிட்ஃபீல்டில் நல்ல மூவ் இருந்தது. அட்டாக்கிங் தேர்வில் நல்ல முன்னேற்றம். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வாங்கப்பட்ட என்டோம்லே முதல் போட்டியிலேயே கோல் அடித்திருப்பது நல்ல விஷயம். கடைசியில் வழக்கம் போல கேன், ஃபினிஷிங் டச் கொடுத்தார். 3–1 என ஸ்பர்ஸ் வென்றுவிட்டது. ஆனால், ஸ்பர்ஸ் இன்னும் ஆட்டத்தை மெருகேற்றினால் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் பொசிஷனுக்கு சேலஞ்ச் பண்ண முடியும். ஏனெனில், யுனைடெட், அர்சனல் கொஞ்சம் முன்னேறி வந்துவிட்டால் ஸ்பர்ஸுக்குச் சிக்கல்தான்.

கிறிஸ்டல் பேலஸ் – எவர்டன், லீஸ்டர் சிட்டி– உல்வ்ஸ் போட்டிகள் கோல் ஏதுமில்லாமல் டிராவில் முடிந்தது. வாட்ஃபோர்டை 3–0 எனத் தோற்கடித்தது பிரைடன். அர்சனல் 1–0 என நியூ கேஸ்ட்லை வீழ்த்தியது. போன்மெளத் – ஷெபீல்டு யுனைட்டெட் போட்டி 1–1 என டிராவில் முடிந்தது.