இந்தியன் சூப்பர் லீகின் நேற்றைய போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் அணியும் பெங்களூரு FC அணியும் மோதியிருந்தன. இந்த போட்டியில் பெங்களூரு அணி 4-2 என வெற்றி பெற்றது.
கடந்த சீசனில் பெங்களூருவை விட நார்த் ஈஸ்ட்டே சிறப்பாக ஆடியிருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியன் சூப்பர் லீகில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன் 10 முறை மோதியிருக்கின்றனர். அதில் 5 முறை பெங்களூரு அணியே வென்றிருக்கிறது. நார்த் ஈஸ்ட் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த சீசனில் இரண்டு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளுமே டிராவில் முடிந்திருந்தது. ரெக்கார்டுகள் எல்லாமே பெங்களூருவிற்கு சாதகமாக இருப்பதை போல நேற்றைய போட்டியுமே பெங்களூருவுக்கு சாதகமாகத்தான் அமைந்திருந்தது.
4-5-1 என்ற ஃபார்மேஷனோடு பெங்களூருவும் 4-3-3 ஃபார்மேஷனோடு நார்த் ஈஸ்ட்டும் களமிறங்கின. போட்டியின் முதல் 13 நிமிடங்களில் பெங்களூரு பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. பின்னால் செய்யப்போகும் சம்பவங்களுக்கு வார்ம் அப் செய்வதற்காக இந்த 13 நிமிடங்களை பயன்படுத்திக் கொண்டார்கள் போல.
ஆனால், நார்த் ஈஸ்ட் யுனைட்டட் இந்த 13 நிமிடங்களில் சிலபல கோல் வாய்ப்புகளை உருவாக்கி பயங்கரமான அட்டாக்குகளை செய்திருந்தது. முதல் நிமிடத்திலேயே ஒரு பை சைக்கிள் கிக் போஸ்ட்டைக் குறிவைத்த தெஷான் ப்ரவுன், தொடர்ச்சியாக பாக்ஸுக்குள் அட்டாக் செய்து கொண்டே இருந்தார். ஆனால், எதுவுமே சரியாக ஃபினிஷ் ஆகி கோலாக மாறவில்லை. இந்த 13 நிமிடங்களுமே பந்தை முழுமையாக பெங்களூருவின் பகுதியில் வைத்திருந்ததை நார்த் ஈஸ்ட்டின் வெற்றியாக கருதலாம்.
13 நிமிடங்களாக அஜித், முசாவு கிங், ஆலன் கோஸ்டா, ஆஷிக் என பெங்களூருவின் டிஃபண்டர்களே பந்தை பாஸ் செய்து கொண்டு தற்காப்பாக ஆடிவந்தனர். இந்த முதல் 13 நிமிடங்கள் முடிந்தபிறகே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

முதல்முறையாக பெங்களூரு மூர்க்கமான அட்டாக்கை தொடங்கியது. டிஃபண்டர்களிடையேயே பாஸ் செய்து கபடி ஆடிக்கொண்டிருந்த அந்த அணி முன்னால் நகர ஆரம்பித்தது. அஜித், உதாண்டாவுக்கு ஒரு பாஸை செய்ய அதை அவர் சிறப்பாக ட்ரிபிள் செய்து நார்த் ஈஸ்ட்டின் மிட் ஃபீல்டர்களை ஏமாற்றி க்ளெய்ட்டனுக்கு பாஸ் செய்தார். க்ளெய்ட்டன் நார்த் ஈஸ்ட்டின் தற்காப்பு அரணை உடைத்து 14 வது நிமிடத்தில் அட்டகாசமாக ஒரு கோலை அடித்தார். 1-0 என பெங்களூரு முன்னிலை பெற்றது.
ஆனால், அது ரொம்ப நேரம் நிலைக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே விபி சுஹைர் கொடுத்த ஒரு க்ராஸை சரியாக வாங்கி தெஷான் ப்ரவுன் கோலாக்கினார். போட்டி 1-1 என சமநிலைக்கு வந்தது. ஆனால், இதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை
23-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் மூலம் 2-1 என பெங்களூரு லீட் எடுத்தது. ஆனால், இந்த கோலை பெங்களூரு வீரர்கள் அடிக்கவில்லை. நார்த் ஈஸ்ட்டின் மசூரே அடித்துக் கொடுத்தார். லெஃப்ட் பேக்கிலிருந்து ட்ரிப்பிள் செய்து வந்து ஆஷீக் போட்ட ஒரு க்ராஸ் கோல் போஸ்ட்டின் மேல் பகுதியில் பட்டு தெறிக்க, அதை உதாண்டா மீண்டும் கோலாக்க முற்பட்டார். இதை கோல் கீப்பர் சுபஷிஸ் ராய் தடுத்தார். ஆனால், பந்து அவர் கைகளுக்குள் சிக்காமல் திமிறி வெளியே வந்தது. அதை க்ளியர் செய்ய முற்பட்ட மசூர் தவறுதலாக வலைக்குள் அடித்துவிடுவார். பெங்களூரு 2-1 என முன்னிலை பெற்றது. இதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 25-வது நிமிடத்திலேயே சுஹைர் அடித்த இன்னொரு க்ராஸை கூரியேர் கோலாக மாற்ற போட்டி 2-2 என் சமநிலைக்கு வந்தது.

14-25 இந்த 11 நிமிடத்தில் மட்டும் மொத்தம் 4 கோல்கள். அடைமழையோடு கோல் மழையும் பொழிந்திருந்தது.
முதல் பாதி இறுதிக்கட்டத்தை எட்டும் வரை 2-2 என்றே நிலைமை இருந்தது. 42 வது நிமிடத்தில் ஆலன் கோஸ்டா கொடுத்த ஒரு லாங் பாஸை ஜெயேஷ் ராணே ட்ரிப்பிள் செய்து கோலாக்கினார். பெங்களூரு FC க்காக முதல் போட்டியிலேயே தனது முதல் கோலையும் ராணே அடித்தார். 3-2.
முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஏறக்குறைய சம அளவிலேயே ஆதிக்கம் செலுத்தின. ஆனால், இரண்டாம் பாதியில் பெரும்பாலும் பெங்களூரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே சுனில் சேத்ரி ஒன்றிரண்டு வாய்ப்புகளை உருவாக்கி கோலாக்க முயன்றார். ஆனால், எதுவும் சரியாக ஃபினிஷ் ஆகவில்லை.

நார்த் ஈஸ்ட்டும் கடுமையாக முயன்றது. சில 'செட் பீஸ்' வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்தது. ஆனாலும், அவர்களால் போட்டி சமன் செய்ய தேவைப்பட்ட ஒரு கோலை அடிக்கவே முடியவில்லை.
சப்ஸ்டிட்யுட்டாக உள்ளே வந்த ப்ரின்சிபாரா 82 நிமிடத்தில் ஆலன் கோஸ்டா கொடுத்த லாங் பாஸை சரியாக வாங்கி நார்த் ஈஸ்ட்டின் டிஃபண்டர்களை ஃபுட் ஒர்க்கில் வீழ்த்தி லாவகமாக கோலாக்கினார். 4-2. இந்த இரண்டு கோல் வித்தியாசம் நார்த் ஈஸ்ட்டின் நம்பிக்கையை குலைத்தது.
ஜஸ்டின், மசூர், குர்ஜிந்தர், லக்ரா என நார்த் ஈஸ்ட்டின் டிஃபண்டர்கள் நால்வருமே ரொம்பவே சுமாராகத்தான் ஆடியிருந்தனர். ப்ரவுன், கூரியேர் போன்றவர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்து கோலுக்கு முயன்று கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் Own Goal எல்லாம் போட்டு பெங்களூருவுக்கு முன்னிலை கொடுத்துக் கொண்டே இருந்தனர். இதுதான் நார்த் ஈஸ்ட்டின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2 கோல் வித்தியாசத்தில் பெங்களூரு வென்ற போதும் அணியின் பயிற்சியாளரான மார்கோ முகத்தை உர்ரென்றே வைத்திருந்தார். போட்டிக்கு பிறகு பேசும்போது, 'இது நல்ல வெற்றிதான். ஆனால், முழுமையான வெற்றி கிடையாது. இன்னும் எங்களின் டிஃபன்ஸ் நிறையவே முன்னேற வேண்டியிருக்கிறது' என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.