Published:Updated:

கதறவிட்ட கத்துக்குட்டிகள்... பார்கா, பேயர்ன், பி.எஸ்.ஜி என மூன்று ஜாம்பவான்களுமே தோல்வி!

Messi ( AP )

கடந்த லா லிகா சீசனின் 38 போட்டிகளிலும் சேர்த்தே 3 போட்டிகளில்தான் தோற்றிருந்தது பார்சிலோனா. இந்த சீசனில், இதுவரை ஆடிய 11 போட்டிகளிலேயே, மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

Published:Updated:

கதறவிட்ட கத்துக்குட்டிகள்... பார்கா, பேயர்ன், பி.எஸ்.ஜி என மூன்று ஜாம்பவான்களுமே தோல்வி!

கடந்த லா லிகா சீசனின் 38 போட்டிகளிலும் சேர்த்தே 3 போட்டிகளில்தான் தோற்றிருந்தது பார்சிலோனா. இந்த சீசனில், இதுவரை ஆடிய 11 போட்டிகளிலேயே, மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

Messi ( AP )

கால்பந்து உலகம் அதிர்ச்சியில் உரைந்துகிடக்கிறது. அந்த அளவுக்கு இந்த வாரம் அதிர்ச்சிகரமான முடிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவ்வப்போது ஒரே நாளில் ஒன்றிரண்டு முன்னணி அணிகள் சிறிய அணிகளிடம் தோற்பது வழக்கம். சில சமயங்களில் ஒரே லீகில் அப்படியான அதிர்ச்சிகள் ஒன்றுக்கும் அதிகமான முறை நடக்கும். ஆனால், இந்த வாரம், ஒவ்வொரு லீகும் இப்படி அதிர்ச்சிகளைக் கண்டுள்ளது. பெரிய அணிகள்… சாம்பியன் அணிகள் பெரும் அடிவாங்கியிருக்கின்றன.

லா லிகாவின் மோசமான சீசன்?!

உண்மையிலேயே இந்த லா லிகா சீசன் மிக மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. எப்போதுமே பார்சிலோனா - ரியல் மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் என மும்முனைப் போட்டியாக மட்டுமே இருக்கும். அவ்வப்போது மட்டும் செவியா, வெலன்சியா போன்ற அணிகள் கொஞ்சம் டஃப் கொடுக்கும். ஆனால், இம்முறை அந்த டாப் 3 அணிகளுமே கொடுமையாக சொதப்பிக்கொண்டிருக்கின்றன. சொதப்பல் என்றால் மான்செஸ்டர் யுனைடட் போல் அல்ல. இன்னும் புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தில்தான் இருக்கின்றன. ஆனால், அந்த அணிகளின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

நேற்று அதிகாலை ரியல் மாட்ரிட், ரியல் பெடிஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வென்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்குப் போக முடியும். ஆனால், நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டது ஜிடேனின் அணி. எத்தனை நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், கோல் அடிக்கவேண்டுமெனில் ஒரு சீனியர் வீரர்தான் அந்த அணிக்கு உதவவேண்டியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்புவரை ரொனால்டோ அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார். அதன்பின் வினிசியஸ், பேல், இஸ்கோ, ஹசார்ட், ராட்ரிகோ என எத்தனையோ பேரை நம்பியிருக்க, முடிந்துபோய்விட்டதாக நினைக்கப்பட்ட பென்சிமாதான் இரண்டு ஆண்டுகளாக அணியைக் கரைசேர்த்துக்கொண்டிருக்கிறார். நேற்று அவரும் கையை விரிக்க, கோலே அடிக்கமுடியாமல் போட்டியை டிரா செய்தது மாட்ரிட்.

Benzema
Benzema
AP

ரியல் மாட்ரிட் டிரா செய்ததால், அந்த அணியின் ரசிகர்கள் ஒருபக்கம் புலம்பிக்கொண்டிருந்தால், பார்சிலோனா ரசிகர்களும் அந்த போட்டிக்குப் பிறகு புலம்பத்தொடங்கிவிட்டார்கள். “நீங்க ஜெயிச்சாலாவது எங்க டீம் மேனேஜர மாத்துவாங்கனு நினைச்சோம். உங்க மேனேஜரத்தான் முதல்ல மாத்துவாங்க போல” என்று மாட்ரிட்டை கலாய்த்துக்கொண்டே புலம்புகிறார்கள் பார்கா ரசிகர்கள். ஏனெனில், பார்சிலோனாவின் ஆட்டமும் படுமோசமாகத்தான் இருக்கிறது.

கடந்த லா லிகா சீசனின் 38 போட்டிகளிலும் சேர்த்தே 3 போட்டிகளில்தான் தோற்றிருந்தது பார்சிலோனா. இந்த சீசனில், இதுவரை ஆடிய 11 போட்டிகளிலேயே, மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. சனிக்கிழமை லெவன்டேவுடன் மோதிய பார்சிலோனா மெஸ்ஸி, கிரீஸ்மேன் என முழு பலத்துடன் இறங்கியும் 3-1 என தோல்வியடைந்தது. 60-வது நிமிடம் வரை 1-0 என முன்னிலையில் இருந்த பார்சிலோனா, அடுத்த 8 நிமிடங்களில் 3 கோல்கள் வாங்கியது. சில பல மாதங்களாகவே பயிற்சியாளர் வெல்வெர்டே மீது அதிருப்தி நிலவி வரும் நிலையில், அந்த அணியின் இந்தத் தோல்வி காடலோனியாவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ரகிடிச் இருவருமே தங்களின் பழைய திறனை இழந்துவிட்ட நிலையில், ஆர்துர், டி ஜோங் போன்றவர்களால் இன்னும் அந்த பழைய பார்சிலோனாவின் ஆட்டத்தைக் காட்ட முடியவில்லை.

இந்த இரு அணிகளும் வெற்றிக்குப் போராடிக்கொண்டிருக்க, போட்டிக்கு ஒரு கோல் அடிக்கவே தடுமாறிக்கொண்டிருக்கிறது சிமியோனின் மாட்ரிட். கிட்டத்தட்ட 200 மில்லியன் யூரோக்களுக்கு மேல் செலவழித்த அந்த அணி, 12 லா லிகா போட்டிகளில் இதுவரை 12 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. 123 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்ட ஜோ ஃபீலிக்ஸ், ப்ரீ சீசனில் அட்டகாசமாகச் செயல்பட்டாலும் சமீப காலமாக கோலடிக்க தடுமாறிக்கொண்டிருக்கிறார். ஏதோ தங்களின் வழக்கமான திடமான டிஃபன்ஸை வைத்து தப்பித்துக்கொண்டிருக்கிறது அந்த அணி. ஆக, 3 முக்கிய அணிகளுமே மோசமாக ஆடிக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் பார்சிலோனா முதலிடத்திலும், ரியல் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. இதுதான் லா லிகாவின் நிலமை!

பேயர்ன், பி.எஸ்.ஜி ஆல் அவுட்!

புண்டஸ்லிகாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பேயர்ன் மூனிச்சின் ஆதிக்கம், இந்த சீசனில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. தடுப்பாட்டத்தில் சொதப்பி ஒவ்வொரு போட்டியிலும் கோல் வாங்கிக்கொண்டிருக்கும் அந்த அணி, இந்த வாரம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. எய்ன்ராச்ட் ஃபிராங்ஃபர்ட் அணிக்கெதிராக 5-1 எனத் தோற்றிருக்கிறது நடப்பு சாம்பியன். 9-வது நிமிடத்திலேயே போடங் ரெட் கார்டு வாங்கி வெளியேற, அதிலிருந்து மீள முடியாத அந்த அணி படுதோல்வியடைந்தது. கடந்த சில சீசன்களாக சாம்பியன்ஸ் லீகிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாத நிலையில், இந்தத் தோல்விக்குப் பிறகு அந்த அணியின் பயிற்சியாளர் நிகோ கோவக் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Niko Kovac
Niko Kovac
AP

லீக் 1 தொடரிலும் இதே நிலைதான். முக்கிய வீரர்களின் காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் பி.எஸ்.ஜி, டிஜோன் அணிக்கெதிராக 2-1 எனத் தோல்வியடைந்தது. பிரீமியர் லீகிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அர்செனல், வோல்வெர்ஹாம்ப்டன் அணிக்கெதிராக 1-1 என டிரா செய்தது. போர்ன்மெளத்துக்கு எதிராக 0-1 எனத் தோல்வியடைந்தது மான்செஸ்டர் யுனைடட். அந்த அணிகள் தோற்பது பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, செல்சீ ஆகிய அணிகளுக்கும் அதே முடிவு ஏற்பட்டிருக்கும். 86 நிமிடங்கள் ஆஸ்டன் விலாவுக்கு எதிராக 0-1 எனப் பின்தங்கியிருந்த லிவர்பூல், கடைசி 8 நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த பிரீமியர் லீக் சீசனில், முதல் தோல்வியை ருசித்திருக்கவேண்டிய அணி, ராபர்ட்சன், மனே ஆகியோரின் கோல்களால் தப்பித்துக்கொண்டது.

அதேபோல், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியும் 70 நிமிடங்களுக்கு 0-1 எனப் பிந்தங்கித்தான் இருந்தது. ஒருவழியாக அந்த அணியின் டாப் ஸ்கோரர் அகுவேரோவும், கைல் வாக்கரும் கோலடித்து வெற்றி பெறச் செய்தனர். செல்சீயின் கதையோ நேரெதிர். 80 நிமிடங்கள் 2-0 என முன்னிலையில் இருந்த அந்த அணி, கடைசி 10 நிமிடங்களில் பதற்றத்தைக் கிளப்பியது. 80-வது நிமிடத்தில் பெனால்டியில் கோல் வாங்க, போட்டி 2-1 என்றானது. கடைசி நிமிடங்களில் வாட்ஃபோர்டு முழு அட்டாக்கில் இறங்க, ஆட்டம் சூடு பிடித்தது. கடைசி நிமிடம் கோல்கீப்பர் பென் ஃபாஸ்டரே செல்சீ பாக்சுக்குள் வந்து ஹெடர் செய்தார். செல்சீ கீப்பர் கெபா அதை அட்டகாசமாகத் தடுத்ததால் செல்சீ தப்பித்தது.

Liverpool
Liverpool
AP

இப்படி முன்னணி அணிகள் எல்லாமே இந்த வாரம் தடுமாறவே செய்தன. யுவன்டஸ் வெற்றி பெற்றிருந்தாலும், (1-0) அதற்கும் அந்த அணி போராடவேண்டியிருந்தது. ஆக, இந்த வாரம் அனைத்து முன்னணி அணிகளுக்குமே பெரும் போராட்டம்தான்! இந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடக்கவிருப்பதால், அந்த அணிகள் இன்னும் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.