கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் கால்பந்தை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ஆயினும் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து நமக்கு பரிச்சயமானதில்லை. கால்பந்தின் பல விதிமுறைகள் புரிந்துக்கொள்ள கடினமானதாகவே இருக்கிறது. அவற்றை எளிமைப்படுத்தி விளக்கவே 'Basics Of Football' என்ற இந்தப் பகுதி..
Warning : மெஸ்சி - ரொனால்டோ என்ற பெயரளவுக்கு மட்டுமே கால்பந்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களுக்கானதே இந்தப் பகுதி. மேற்படி விவரம் தெரிந்தவர்கள் நேர விரயம் செய்யாமல் போட்டிகளை காண செல்லலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் கால்பந்து ஆட்டங்களில் வீரர்கள் செய்யும் விதிமீறல்களை நடுவர்கள் வாய் மொழியாகவே கண்டித்து வந்தனர். 1970 ம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் முதல் முதலில் விதிமீறல்களுக்கு வண்ணக் குறியீடு கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. வீரர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதத்தில் மஞ்சள் கார்டு கொடுக்கப்படும். அதேசமயம் சிவப்பு கார்டு என்றால் வீரர் உடனடியாக களத்தை விட்டு வெளியேற வேண்டும். எந்தெந்த காரணங்களுக்காக மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டு தரப்படுகிறது என்று பார்ப்போம்.
மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை உருவான கதை:
1966 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. மோசமான நடத்தை காரணமாக அன்டோனியோ உபால்டோ ராட்டின் எனும் வீரரை நடுவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் வெளியேறாமல் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். கொஞ்ச நேரம் கழித்துத் தான் அவர் வெளியேறினார். இதே போலப் பல சம்பவங்கள் இந்த தொடரில் அரங்கேறியது.
இதை ஒழுங்குப்படுத்த, 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடுவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்த கென் அஸ்டன் என்பவரால் ஒரு புதிய திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களால் பலவிதமான மொழிகள் பேசப்பட்டதால், ஆட்டத்தின் போது நடுவர் என்ன சொல்ல வருகிறார் என்பது வீரர்களுக்கு சரியாக புரியவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலேயே சிவப்பு அட்டை மற்றும் மஞ்சள் அட்டை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தபட்டது. முதன்முதலில் 1970 உலகக் கோப்பையில் சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது.
மஞ்சள் அட்டை :

களத்தில் வீரர்களின் மோசமான விதிமீறல் நடத்தைக்கு எச்சரிக்கை கொடுக்க மஞ்சள் அட்டை பயன்படுத்தப்படுகிறது. கோல் அடித்த பின் ஜெர்ஸியை கழற்றி சுற்றுவது. நடுவர் கொடுக்கும் முடிவுக்கு எதிராக அவர் முன் கத்துவது. ஃப்ரீ கிக் அல்லது பெனால்டி ஷாட்டில் காலதாமதம் செய்தல்.
அதேபோல ஃப்ரீ கிகின்போது எதிரணி வீரர் 10 யார்ட்ஸ் இடைவெளியில் இல்லாமல் இருத்தல் ஆட்டம் தொடங்கிய பின் நடுவர் அனுமதி இல்லாமல் வீரர்கள் களத்தில் உள்ளே வெளியே செல்லுதல் போன்ற தருணங்களில் மஞ்சள் கார்டு வழங்கப்படும்.
சிவப்பு அட்டை :

களத்தில் மிக மோசமான விதிமீறல் நடந்தால் ரெட் கார்டு கொடுக்கப்படும். உடனே அந்த வீரர் களத்தை விட்டு வெளியேற வேண்டும். இரண்டு முறை மோசமாக பவுல் நடந்தால்,
உதைத்தல், குத்துதல், முழங்கையால் அடித்தல், முழங்காலில் அடித்தல் அல்லது எதிராளியைத் தாக்குதல் போன்ற வன்முறையான சம்பவங்களுக்கு ரெட் கார்டு தரப்படும்.
வன்முறையாகப் பேசிக் கொள்வது , மனதை புண்படுத்தி பேசுவது போன்ற தருணங்களில் அந்த செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும். இதேபோல வேண்டுமென்றே எதிரணி கோல் இலக்கை தடுக்க கைகளைப் பயன்படுத்துவதற்கு நிச்சயமாக ரெட் கார்டு தரப்படும். ரெட் கார்டு கிடைக்கும் வீரருக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடையாது.
சில நேரங்களில் கோல் கீப்பருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் மற்ற வீரர்களில் ஒருவர் சப்ஸ்டியூடாகி வேறொரு கோல்கீப்பர் சப்ஸ்டியூட் செய்யப்படுவார்.
பச்சை அட்டை :
மஞ்சள் சிவப்பு அட்டைக்கள் போல பச்சை அட்டையும் கால்பந்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது வீரர்களுக்கு களத்தில் அடிபட்டால் மருத்துவ உதவிகளைக் கூப்பிட நடுவர்கள் பச்சை அட்டையை பயன்படுத்தினர். 2004 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த பச்சை அட்டை பயன்படுத்தப்படவில்லை.
ஜெர்மனியில் நடந்த 2006 உலகக்கோப்பையில் போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து இடையேயான ஆட்டத்தில் 4 சிவப்பு அட்டைகளும் 16 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டது. உலகக்கோப்பையில் அதிக அட்டைகளை வாங்கிய ஒரு போட்டி இதுதான்.