Published:Updated:

பார்சிலோனாவுக்கு அடுத்த அடி! சாம்பியன்ஸ் லீக் முதல் சுற்றைத் தாண்டுமா? #UCL #Barcelona

66% நேரம் அவர்கள்தான் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். 644 பாஸ்களில் 547 பாஸ்களை கம்ப்ளீட் செய்திருந்தனர். 14 ஷாட்கள் அடித்திருந்தனர். ஆனால், அதில் 7 ஷாட்கள் போஸ்ட்டுக்கு வெளியே சென்றன. இலக்கை நோக்கிச் சென்ற 3 ஷாட்களையும் பென்ஃபிகா கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து லீக் சுற்றிலேயே வெளியேறும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பார்சிலோனா. ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஒரு மகத்தான அணி இப்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது. புதிய மேனேஜர் ஜாவி பதவியேற்றபிறகு விளையாடிய முதல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பென்ஃபிகாவுடன் டிரா செய்திருக்கிறது அந்த அணி.

சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றின் ஐந்தாவது ரவுண்ட் நேற்று நடந்தது. இதில் பென்ஃபிகா அணியுடன் மோதியது பார்சிலோனா. பயிற்சியாளராக பதவியேற்றபின் தன் முதல் லா லிகா போட்டியில் வென்ற ஜாவிக்கு, இதுதான் முதல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டம். ஆனால், அவரின் இந்த முதல் போட்டியே கடும் நெருக்கடிக்கு மத்தியில்தான் தொடங்கியது.

இதற்கு முன் விளையாடியிருந்த 4 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. அதிலும் அவர்கள் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்தது. அதுவே பயிற்சியாளர் ரொனால்ட் கூமன் பதவி பறிபோக ஒரு காரணமாக இருந்தது. பேயர்ன் மூனிச், பென்ஃபிகா அணிகளோடு மோதிய இரண்டு போட்டிகளிலும் 3 கோல்கல் வாங்கி தோற்ற அணி, டைனமோ கியவ் அணியை மட்டும் 1-0 என இரண்டு முறை வென்றது. அதனால், பார்சிலோனா 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசி சுற்றில் பார்சிலோனா பேயர் மூனிச் அணியுடன் விளையாடவேண்டும். 4 புள்ளிகள் பெற்றிருந்த பென்ஃபிகாவோ, டைனமோவுடன் மோதும். அந்தப் போட்டியில் பென்ஃபிகா ஜெயித்துவிட்டால் 7 புள்ளிகள் பெற்றுவிடும். பென்ஃபிகா வென்று, பேய்ர்னிடம் பார்சா வீழ்ந்துவிட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. மூன்றாவது இடம் பெற்று யூரோப்பா லீகில் ஆடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதனால், பென்ஃபிகாவுடனான போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் ஜாவியின் அணிக்கு இருந்தது. ஆனால், அவர்களால் ஒரு புள்ளி மட்டுமே எடுக்க முடிந்தது. 90 நிமிடங்கள் போராடியும், பென்ஃபிகாவின் கோல் போஸ்ட்டை துளைக்க முடியவில்லை.

Barcelona vs Benfica
Barcelona vs Benfica
AP

தங்கள் டிரேட் மார்க் கேமை அவர்கள் காட்டினாலும், பால் பொசஷன் அதிகம் வைத்திருந்தாலும், கோல் தான் அடிக்க முடியவில்லை. 66% நேரம் அவர்கள்தான் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். 644 பாஸ்களில் 547 பாஸ்களை கம்ப்ளீட் செய்திருந்தனர். 14 ஷாட்கள் அடித்திருந்தனர். ஆனால், அங்குதான் அவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டது. அந்த 14 ஷாட்களில் 4 பிளாக் செய்யப்பட, 7 ஷாட்கள் போஸ்ட்டுக்கு வெளியே சென்றன. இலக்கை நோக்கிச் சென்ற 3 ஷாட்களையும் பென்ஃபிகா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். சில எளிய வாய்ப்புகளையும் தவறவிட்ட அவர்களால் இந்தப் போட்டியில் 1 புள்ளி மட்டுமே எடுக்க முடிந்தது.

ஏற்கெனவே 5 போட்டிகளிலும் வென்று பேயர்ன் மூனிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், இப்போது பார்சிலோனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்த அணி 7 புள்ளிகளும், பென்ஃபிகா 5 புள்ளிகளும் பெற்றிருக்கின்றன. ஏற்கெனவே சொன்னதுபோல், பார்சா பேயர்னை எதிர்கொள்ளவேண்டும். அந்தப் போட்டியில் இந்த பார்சிலோனா ஜெயிப்பது எளிதான விஷயமில்லை. அதேபோல், தங்கள் சொந்த மைதானத்தில் டைனமோ கியவை எதிர்கொள்கிறது பென்ஃபிகா. அது அவர்களுக்குக் கூடுதல் சாதகம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், முதல் சுற்றோடு பார்சிலோனா வெளியேறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது.

இந்த சூழ்நிலை ஒன்றும் திடீரென்று ஏற்பட்டது அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்சிலோனாவுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. கொரோனாவால் அந்த அணியின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பே சரியான வீரர்களை வாங்காமல், டிரான்ஸ்ஃபர் விண்டோவில் பல குளறுபடிகள் செய்திருந்தனர். பொருளாதார பின்னடைவால், பல்வேறு வீரர்களை இழக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஓராண்டு தள்ளிப்போயிருந்த மெஸ்ஸியின் வெளியேற்றத்துக்கு அதுவே காரணமாகவும் சொல்லப்பட்டது. செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்ட் பீக்கே போன்றவர்கள் தங்கள் ஊதியத்தைக் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. காசு கொடுத்து புதிய வீரர்களை வாங்க முடியவில்லை. அதனால், ஒப்பந்தம் முடிந்த ஒருசில வீரர்களை 'போஸ்மேன்' கான்டிராக்ட் மூலம் தங்கள் வசம் இழுத்திருந்தனர். சரி, இனியாவது ஒரு புதிய அணி உருவாகும் என்று எதிர்பார்த்தால், பயிற்சியாளர் கூமன் தன் யுக்திகளில் சொதப்பினார்.

Barcelona vs Benfica
Barcelona vs Benfica
AP

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே வீரர்களின் காயம் பெருமளவு அந்த அணியை பாதித்தது. டிரெய்னிங் கிரவுண்டை விட மருத்துவமனையில்தான் அதிக நேரம் இருக்கிறார் ஓஸ்மான் டெம்பளே. அடுத்த மெஸ்ஸியாக கருதப்பட்ட இளம் வீரர் அன்சு ஃபடிக்கும் சீசன் தொடக்கத்திலேயே எதிர்பாராத காயம். இப்போது சீனியர் அகுவேரோவோ இருதய பிரச்னையால் ஓய்வில் இருக்கிறார். பெட்ரி, எரிக் கார்சியா, பீக்கே, செர்ஜி ராபர்டோ என எல்லோரும் ஒவ்வொரு கட்டத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டுவிட்டனர். இப்படி அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருக்கும் அணியால் எப்படித்தான் களத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இதையெல்லாம் மாற்றுவதற்காக, கத்தாரில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தங்கள் ஜாம்பவான் ஜாவியை மீண்டும் கேம்ப் நூ மைதானத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். உடனடியாக பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், சில முன்னேற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.

Can the Old band save Barca?
Can the Old band save Barca?
AP

3 at the back ஃபார்மேஷனிலிருந்து, பார்சாவின் டிரேட் மார்க் 4-3-3 சிஸ்டத்துக்கு மாறி அந்த நம்பிக்கை விதைக்கு நீரூற்றத் தொடங்கியிருக்கிறார் ஜாவி. ஆனால், சாம்பியன்ஸ் லீகிலிருந்து வெளியேறினால் அது உளவியல் ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே பின்னடைவை சந்தித்திருக்கும் அணிக்கு, மேலும் பொருளாதார சிக்கலில் தள்ளும். அந்த பேயர்ன் மூனிச் போட்டி பார்சிலோனாவுக்கு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலைப் போன்றது. எல் கிளாசிகோவை விட முக்கியமானது. ஜாவியின் மாஸ்டர் கிளாஸ் அங்கு அரங்கேறுமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு