Published:Updated:

பார்சிலோனாவைப் பதம் பார்த்த பைசிக்கிள் கிக்... மீண்டும் சிட்டியைச் சீண்டிய VAR #FootballRoundUp

பொஸ்கிட்ஸ் இடத்தில் டி ஜாங், ரகிடிச் இடத்தில் அலேனா என இளம் வீரர்களோடு களமிறங்கிய பார்சிலோனா, வழக்கம்போல் 70 சதவிகித பொஷசன், 550+ பாஸஸ் என நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

#FootballRoundUp
#FootballRoundUp

பார்சிலோனாவின் சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. கிரீஸ்மேனின் முதல் லா லிகா போட்டி எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. ராபன், ரிபரி இல்லாத பேயர்ன் மூனிச் அணியால் வெற்றியோடு இந்த சீசனைத் தொடங்கமுடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிறிஸ்துமஸுக்கு முன்னால் எதிஹாடில் புள்ளிகள் இழக்காத மான்செஸ்டர் சிட்டியால், இம்முறை 3 புள்ளிகளையும் தக்கவைக்க முடியவில்லை.

Vikatan

நெய்மர் இல்லாமல் பி.எஸ்.ஜி அணியால் அதே அதிரடி ஆட்டத்தை ஆடமுடியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பின் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்துக்குத் திரும்பிய ஃபிராங்க் லாம்பார்டாஅல் வெற்றியைச் சுவைக்க முடியவில்லை. முன்னணி அணிகள் பலவும் இந்த வாரம் புள்ளிகளை இழந்துள்ளன. இதன் ரவுண்ட் அப்...

பெப் கார்டியாலோ இதுவரை கையாண்டுள்ள 3 டாப் அணிகளான பார்சிலோனா, பேயர்ன் மூனிச், மான்செஸ்டர் சிட்டி அனைத்தும் இந்த வாரம் வெற்றி பெறத் தவறியுள்ளன. மெஸ்ஸி காயத்தால் விளையாடமுடியாமல் போக, சுவாரஸ், டெம்பெளே ஆகியோருடன் தன் முதல் லா லிகா போட்டியில் களமிறங்கினார் கிரீஸ்மேன். ஆனால், முதல் பாதியில் சுவாரஸும் காயத்தால் வெளியேற அந்த அணியால் அத்லெடிக் கிளப்பின் டிஃபன்ஸை உடைக்க முடியவில்லை. பொஸ்கிட்ஸ் இடத்தில் டி ஜாங், ரகிடிச் இடத்தில் அலேனா என இளம் வீரர்களோடு களமிறங்கிய பார்சிலோனா, வழக்கம்போல் 70 சதவிகித பொஷசன், 550+ பாஸஸ் என நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

Aritz Aduriz
Aritz Aduriz

88 நிமிடங்கள் கோல் ஏதும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருந்த ஆட்டத்தை, களத்தில் இறங்கிய முதல் நிமிடமே மாற்றினார் அரிட்ஸ் அடுரிஸ். வலது விங்கிலிருந்து ஆண்டர் கபா கிராஸ் செய்ய, யாராலும் மார்க் செய்யப்படாது அடுரிஸ் பெனால்டி ஏரியாவுக்கு அருகில் வந்தார். கொஞ்சம் தன் இடது புறம் திரும்பி, பந்தை அப்படியே வாலியாக 'பைசிக்கிள் கிக்' அடிக்க... கோல்..! புதிய லா லிகா சீசனை தோல்வியோடு தொடங்கியது நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

பேயர்ன் மூனிச் - கடந்த 10 ஆண்டுகளாக அந்த அணியின் விங்கில் ஆதிக்கம் செலுத்திய ராபன், ரிபரி இருவரும் இல்லாமல் களமிறங்கியது. ஆனால், லெவண்டோஸ்கி, கோமன், செர்ஜ் நேப்ரி ஆகியோர் கடந்த சில சீசன்களாக இணைந்து ஆடிக்கொண்டிருப்பதால் அது ஒரு பெரிய மாற்றமாகத் தெரியவில்லை. ஆனால், டிஃபன்ஸில் ஒரு ஆளுமை இல்லாதது பிரதிபலித்தது. ஹம்மல்ஸ் மீண்டும் டார்ட்மண்ட் கூடாரத்துக்கு ஒதுங்கிவிட்டார். ஜாவி மார்டினசுக்குக் காயம். பயிற்சியாளர் கோவக், தான் சொன்னதுபோல், ரைட் பேக் பெஞ்சமின் பவார்டை சென்டர் பேக்கில் இறக்கினார். நிகலஸ் ஷூல், பவார்ட் கூட்டணி பல நேரங்களில் தங்களின் டிஃபன்ஸிவ் வடிவத்தை இழந்தது. ஹெர்தா பெர்லினின் இரண்டாவது கோலுக்குக் காரணமானது அந்தக் கூட்டணி.

Robert Lewandowski
Robert Lewandowski

2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து பேயர்னைப் பதம் பார்த்தது ஹெர்தா பெர்லின். ஒருவழியாக கோல் மெஷின் லெவண்டோஸ்கி வழக்கம்போல் அனைத்தையும் ஈடுகட்டிவிட்டார். தடுப்பாட்ட வீரர்களைச் சரியாக வழிநடத்தும் வகையில் ஓர் அனுபவசாலி அங்கு ஆடுவது அவசியம். பவார்ட் செட்டில் ஆகும் வரை, போடங்கை அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. கடந்த சீசனைப் போல் சென்டர் பேக் வீரர்களை ரொடேட் செய்துகொண்டே இருக்காமல், சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்று தொடங்குவதற்குள் சரியான சென்டர் பேக் கூட்டணியை அடையாளம் கண்டால், ஐரோப்பியக் கோப்பையைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

கார்டியோலாவின் முந்தைய இரு அணிகளும் புள்ளிகளை இழக்க, அவரது 'இன் ஃபார்ம்' மான்செஸ்டர் சிட்டியும் சனிக்கிழமை புள்ளிகளை இழந்தது. கடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் அவர்களை வெளியேற்றிய VAR (அதுவும் இதே டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிராகத்தான்!) இந்த முறையும் அவர்களுக்கு எமனாக அமைந்தது. அதே இஞ்சுரி டைம்... அதே சிட்டி வின்னர்... அதே VAR... அப்போது ஸ்டெர்லிங், இப்போது கேப்ரியல் ஜீசுஸ். அன்று ஆஃப் சைட். இன்று ஹேண்ட் பால். அவ்வளவுதான் வித்தியாசம். 93-வது நிமிடத்தில் ஜீசுஸ் கோலடிக்க, VAR செக் செய்ய, கோல் அடிக்கப்படுவதற்கு முன், லபோர்ட் ஹேண்ட்பால் செய்ததாகச் சொல்லி, கோல் மறுக்கப்பட்டது. ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது!

Kevin deBruyne
Kevin deBruyne

VAR-க்கு முன் இந்த ஆட்டத்தை ஆட்கொண்டது டி புருய்ன்தான். கடந்த ஆண்டு காயத்துக்குப் பின் கொஞ்சம் சோடை போனவர், அதற்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியே வந்திருக்கிறார். பாக்சுக்குள் அவுட் ஃபூட் பாஸ் போடுவது, த்ரூ பால்களால் மிரட்டுவது, ஃபேக் ஷாட்களால் குழப்புவது என நடுகளத்தைக் கட்டியாண்டார். டேவிட் சில்வாவின் இடத்தை நிரந்தரமாக நிரப்பத் தயாராகிவிட்டார் கெவின்! அதிலும் ஸ்டெர்லிங்கின் கோலுக்கு அவர் கொடுத்த கிராஸெல்லாம்... 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் 10.9 புள்ளிகள் எடுப்பதைப்போல். பின் பாயின்ட்..! அகுவேரோவின் இரண்டாவது கோலுக்கு கிராஸ் கொடுத்ததும் இவரேதான்.

முன்களத்தில் எப்போதும்போல் சிட்டி பட்டையைக் கிளப்பினாலும், பின்களம் சோடைபோன இரண்டு தருணங்கள், 2 புள்ளிகளை அவர்களிடமிருந்து பறித்துவிட்டன. அதிலும் குறிப்பாக அந்த இரண்டாவது கோல். களத்தில் இறங்கிய 27-வது நொடியில், கார்னரை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் லூகாஸ் மௌரா. வெயிட்... கார்னரை ஹெட்டர் செய்தது லூகாஸ் மௌராவா? ஆம்..! இதுதான் சிட்டி டிஃபன்ஸின் மிகப்பெரிய தோல்வி. சிசோகோ, கேன் போன்ற உயரமான வீரரை கார்னரின்போது தடுக்கமுடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாம். மௌராவின் உயரத்துக்கு..? அங்கு அது சாத்தியப்படக் காரணம் - கைல் வால்கர்.

Kyle Walker & Lucas Moura
Kyle Walker & Lucas Moura

முன்களத்தில் தீயாய் இருப்பதால், கார்டியோலா அவரை மிகவும் விரும்புவார். ஆனால், முக்கியமான நேரத்தில் முக்காடு போடும் வால்கரின் அந்த 'சில நொடி தவறுகள்' சரிசெய்யப்பட்டதாய்த் தெரியவேயில்லை. உலகக் கோப்பை காலிறுதியில் பெரிசிச்சை எப்படி ஃப்ரீயாக விட்டாரோ... அப்படி. பேயர்னுக்குச் சொன்ன அதே விஷயம்தான் - சாம்பியன்ஸ் லீக் வெல்லவேண்டுமானால், இதைச் சரிசெய்தே ஆகவேண்டும். `Attack is the best defense' என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. தடுப்பாட்டம் பலமாக இருந்த அணிகள் மட்டுமே ஐரோப்பாவில் முடிசூடியிருக்கின்றன. ரசிகர்களைக் கவரவேண்டுமானால் அட்டாக்கை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், கோப்பை வெல்ல பழைய கால்பந்து ஸ்டைலும் முக்கியம்!

அப்படியே மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குப் போனால்... செல்சீ மேனேஜராக ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் லாம்பார்டின் முதல் போட்டி. தங்கள் அணியின் மகத்தான ஜாம்பவானை வெறித்தனமாக வரவேற்ற செல்சீ ரசிகர்களுக்கு மிகவிரைவிலேயே புன்னகையைப் பரிசளித்தார் மேசன் மவுன்ட். 7-வது நிமிடத்திலேயே கோல். அதே வேகத்தில் முதல் 15 நிமிடம் செல்சீ அட, சிலிர்த்துப்போனார்கள் புளூஸ் ரசிகர்கள். நேரம் போகப் போக வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அதிலும் இரண்டாவது பாதியில் வார்டி - மேடிசன் கூட்டணியைச் சமாளிக்கத் திணறியதைப் பார்த்தபோது.. ``டெர்ரி, கார்வாலோ, கோல், இவானோவிச்னு அப்படியொரு டிஃபன்ஸுக்கு முன்னாடி நான் ஆடிட்டி இருந்தேன்" என லாம்பார்டே நினைத்துப் பார்த்திருப்பார். அப்படியொரு சொதப்பல்.

Frank Lampard
Frank Lampard

அதிலும் குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளாக 'மிஸ்டர் கனிஸ்டென்ட்' என்று அழைக்கப்பட்ட இன்றைய கிளப் கேப்டன் ஆஸ்பிலிக்யூடா ஆடிய ஆட்டம்தான் செல்சீக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது. சொல்லப்போனால் மான்செஸ்டர் சிட்டிக்கு நிகழ்ந்த அதேபோல் சம்பவம்தான், இவர்களுக்கும்! கார்னர்... எண்டிடியை நோக்கி பந்து வருகிறது. மிகவும் தாமதமாகக் குதிக்குறார் ஆஸ்பி... எண்டிடி முட்டுகிறார்... கோல். 1-1. லாம்பார்ட் தன் முதல் வெற்றிக்கு இன்னும் காத்திருக்கவேண்டியிருக்கிறது. ஆனால், இந்த இளம் அணியிடம் முன்பைப் போலவே உடனே பதில் எதிர்பார்க்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். செல்சீ போர்டு வழக்கம்போல் முட்டாள்தனமாக ஏதும் செய்யாமல், 12,13-வது இடத்திலேயே இருந்தாலும் லாம்பார்டுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். அந்த அணிக்கு அது முக்கியம்.

மற்ற முன்னணி பிரீமியர் லீக் அணிகளான லிவர்பூல் (சவுதாம்ப்டனுக்கு எதிராக), அர்செனல் (பர்ன்லிக்கு எதிராக) இரண்டும், 2-1 என்ற கோல் கணக்கில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தன. கோலீப்பர் ஆலிசன் இல்லாமல், தொடர்ந்து இரண்டு போட்டிகளாக கோல் விட்டுக்கொண்டிருக்கிறது லிவர்பூல். அவர் சீக்கிரம் திரும்பவில்லையெனில், பெரிய அணிகளுக்கு எதிராக அடிவாங்க நேரிடலாம். இந்த சீசன் பிரீமியர் லீகுக்கு ப்ரமோர் ஆன ஷெஃபில்டு யுனைடட், மீண்டும் ஒரு அசத்தல் பர்ஃபாமன்ஸைக் கொடுத்துள்ளது. முதல் வாரம் போர்ன்மவுத்துடன் டிரா செய்தவர்கள், இந்த வாரம் கிறிஸ்டல் பேலஸை வீழ்த்தினர்!

Borussia Dortmund
Borussia Dortmund

இந்தப் போட்டிகளைத் தவிர்த்து, லீக்-1 தொடரில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, ரெனஸ் கிளப்பிடம் 2-1 எனத் தோல்வியடைந்தது. ஆக்ஸ்பெர்க் அணியை 5-1 என வீழ்த்தி அதிரடியாக புண்டஸ்லிகா சீசனைத் தொடங்கியது பொரிஷியா டார்ட்மண்ட். மேட் ஹம்மல்ஸ், தோர்கன் ஹசார்ட் ஆகியோரின் வருகை, இந்த முறை அவர்களுக்கு புண்டஸ்லிகா பட்டத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால், கடந்த சீசனைப் போல் முக்கியமான கட்டத்தில் புள்ளிகளை இழக்காமல் இருக்கவேண்டும். பெரும் எதிர்பார்ப்போடு சீசனைத் தொடங்கிய ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவை வீழ்த்தி லா லிகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது(!)