நேற்று லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவுக்கும், லூகா மாட்ரிச் தலைமையிலான குரோஷியாவுக்கும் இடையேயான உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது.
கோலடிக்க அதிக வாய்ப்புள்ள முன்கள வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் ஆகிய பெயர்களை அறிந்த அளவுக்கு இங்கே நடுக்கள வீரரான மாட்ரிச்சின் பெயர் அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் ஒரு ஆட்டம் செல்லும் திசையைத் தீர்மானிப்பவர்கள் நடுக்கள ஆட்டக்காரர்கள்தான் என்பது தெரிந்த கால்பந்து ரசிகர்களுக்கு, லூகா மாட்ரிச்சின் முக்கியத்துவம் புரியும்.

வெறும் நாற்பது லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சின்ன நாட்டின் கால்பந்து அணி, தொடர்ந்து பல உலகக் கோப்பைத் தொடர்களாக அரையிறுதிக்கும், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு லூகா மாட்ரிச் மிக முக்கியமான ஒரு காரணம்.
குரோஷிய கிளப்புகள், ஸ்பர்ஸ், ரியல் மேட்ரிட், குரோஷிய தேசிய அணி என்று தான் சென்று சேர்ந்த அணிகளையெல்லாம் அவற்றின் உச்சத்தில் நிறுத்தியதில் பங்காற்றிய பெரும் திறமைசாலி மாட்ரிச். மேலும், கடந்த பல வருடங்களாக உலகின் சிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸியும், ரொனால்டோவுமே பங்கிட்டுக்கொண்டிருக்க அவர்களிடமிருந்து லூகா மாட்ரிச்சால் மட்டுமே அதைத் தட்டிப் பறிக்க முடிந்திருக்கிறது.

மெஸ்ஸிக்கும் லூகா மாட்ரிச்சுக்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமை உண்டு. இருவரும் தங்களது முதல் போணியை, அதாவது மெஸ்ஸி தனது முதல் சர்வதேச கோலை குரோஷியாவுக்கு எதிராகவும், லூகா மாட்ரிச் அர்ஜெண்டினாவுக்கு எதிராகவும் அடித்திருக்கிறார்கள். அதேபோல பரம்பரை எதிரிகளான பார்சிலோனாவுக்காக விளையாடியவர் மெஸ்ஸி, ரியல் மேட்ரிடுக்காக விளையாடுபவர் மாட்ரிச். அதனால்தான் தான் விளையாடும் ஸ்பெயின் தேசிய அணி தோற்று வெளியேறிய பிறகும் கூட, ஸ்பெயின் / பார்சிலோனா அணிகளின் இளம் ஸ்ட்ரைக்கர் பாப்லோ காவி தனது இன்ஸ்டா பக்கத்தில், 'மெஸ்ஸி, மெஸ்ஸி' என்றும், 'மெஸ்ஸி உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்றும் உருகிக்கொண்டிருக்கிறான் பாருங்கள், அதற்குக் காரணமும் அதே பார்சிலோனா, ரியல் மேட்ரிட் பாசம் / பகைதான்.
இந்த உலகக்கோப்பை எப்படி ரொனால்டோவுக்கும், மெஸ்ஸிக்கும் அவர்கள் விளையாடும் இறுதித் தொடரோ அப்படித்தான் லூகா மாட்ரிச்சுக்கும். ரொனால்டோ அழுதுகொண்டே வெளியேறியதை வைரலாக்கிய உலகம், லூகா மாட்ரிச்சுக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுக்காதுதான். ஆனால், உண்மையான கால்பந்து ரசிகர்களின் மனதில் மார்டிச்சுக்கு என்றும் நீங்காத இடமொன்று உண்டு.
நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினாவின் அகுன்யா காலிறுதியில் வாங்கிய மஞ்சளட்டை காரணமாக விளையாடவில்லை. ஆனால் ஒரு முக்கியமான போட்டியில் அனுபவம் மிக்க ஏஞ்சல் டி மரியாவும் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆட்டத்தின் முதல் அரை மணி நேரத்தில், வழக்கம்போல குரோஷியாவின் தடுப்பாட்டம் மிகச்சிறப்பாக இருக்க, அர்ஜெண்டினா அதற்கு ஈடுகொடுக்கத் திணறுவது போலத் தோன்றியது. பந்து பெரும்பாலும் குரோஷியர்களின் துல்லியமான பாஸ்கள் காரணமாக அவர்கள் வசமே இருந்தது. தளர்வாகத் தோற்றமளித்த 35 வயது மெஸ்ஸி அங்குமிங்கும் நடை போட்டுக்கொண்டிருக்க, 37 வயது லூகா மாட்ரிச் களத்தில் சுழன்று, சுழன்று விளையாடினார். ஆனால் அவர் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத படிக்கு அர்ஜெண்டினா எப்பொழுதும் மூன்று வீரர்களை வைத்து மாட்ரிச்சுக்கு'செக்’ வைத்திருந்தது.

நேற்று அர்ஜெண்டினாவின் வியூகம் பந்தைக் கைவசப்படுத்துவதில் இல்லாமல் “கவுண்ட்டர் அட்டாக்” எனப்படும் எதிர்த்தாக்குதலில் இருந்தது.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பக்கத்திலிருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை ஒற்றை ஆளாக குரோஷியாவின் பெனால்டிக்குள் கடத்திச் சென்ற ஆல்வெரெஸ்ஸின் பாதையை, நேருக்கு நேராக மறித்து, தடுத்து வீழ்த்தியதற்காக குரோஷிய கோல்கீப்பர் டொமினிக் லிவகோவிச்சுக்கு மஞ்சள் அட்டை கொடுத்து, அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி கிக் கொடுத்தார் நடுவர். பெனால்டி கிக்கைத் துல்லியமாக உள்ளே தள்ளினார் மெஸ்ஸி. ஆறே நிமிடங்கள் கழித்து அர்ஜெண்டினாவின் பெனால்டி ஏரியாவுக்குள்ளிருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை மீண்டும் ஒற்றை ஆளாக, நான்கைந்து குரோஷிய வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்ற ஆல்வெரெஸ் அதை இம்முறை தவறவிடாமல் கோலாக மாற்றினார். இது போன்ற காண்பதற்கினிய தனிநபர்களின் சாகசமான “சோலோ” கோல்கள் இப்போதெல்லாம் காணக்கிடைப்பதில்லை என்கிற குறையை நேற்று ஆல்வெரெஸ் தீர்த்து வைத்தார்.
மைதானத்தில் விருந்தினராக வந்து அமர்ந்திருந்த பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டின்ஹோ, ஆல்வெரேஸின் இந்த கோலை கைதட்டி ரசித்ததைப் பார்க்க முடிந்தது. பார்சிலோனா அணியில் ஒன்றாக விளையாடிய மெஸ்ஸிக்கும், ரொனால்டின்ஹோவுக்குமான, கிட்டத்தட்ட மெண்ட்டார் / மாணவன் போன்ற கால்பந்தாட்ட உறவைப் பற்றி தனியாகப் பெரியதொரு கட்டுரை எழுதுமளவுக்கு ஆச்சரியமான தகவல்கள் உண்டு.
போட்டியின் இரண்டாம் பாதியில் மைதானத்தின் நடுவிலிருந்து பந்தைக் கடத்திச்சென்ற மெஸ்ஸி, அவரைத் தடுக்கப்பார்த்த குரோஷிய முகமூடி வீரன் ஜோஸ்கோ வார்டியோலிடமிருந்து லாவகமாகத் தப்பி, கடைசி நொடிகளில் சரியான நேரத்துக்கு அங்கு வந்து சேர்ந்த ஆல்வெரஸுக்கு பாஸ் செய்ய, ஆல்வெரஸ் மெதுவாகத் தொட்டதும், வெளியூர்க்காரன் தொண்டைக்குள் இருட்டுக்கடை அல்வா இறங்குவது போல பந்து வழுக்கிக்கொண்டு குரோஷிய கோல்போஸ்டுக்குள் நுழைந்தது. அத்தோடு இம்முறை குரோஷியாவின் உலகக்கோப்பை கனவும் கைநழுவிப் போனது.

இந்த கோலில், மெஸ்ஸி பந்தை மைதானத்தின் நடுவிலிருந்து எடுத்துக்கொண்டு போய், கடைசியில் ஆல்வெரெஸுக்கு பாஸ் செய்தது வரை நிகழ்ந்த அற்புதத்துக்குப் பெயர்தான் “மெஸ்ஸி மேஜிக்”. அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்த மெஸ்சி, தன்னை விடப் பதினைந்து வயது சிறியவரும், உடல் அமைப்பில் வலுவானவரும், இன்றைய தேதியில் உலகின் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவருமான ஜோஸ்கோ வார்டியோலின் தொடர்ந்த போராட்டத்தையும், தடுப்பையும் மீறி பந்தைத் தனி ஒருவனாக எடுத்துச் சென்றது, பந்தை அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது, கணிக்க முடியாதபடி தன் திசையை மாற்றி, கடைசியில் ஜோஸ்கோ வாடியோலின் கால்களுக்கு இடையே சிறிய இடைவெளியில் துல்லியமாக பந்தை ஆல்வெரெஸுக்கு பாஸ் செய்தது என்று மொத்தத்தில் ஒரு நீண்டகால ரசிகனாக நான் பார்த்துத் திளைத்த ஒரு கிளாஸிக்கல் மெஸ்ஸியை மீண்டும் பார்க்க முடிந்தது. கேமராவில் ரொனால்டின்ஹோவைக் காட்டினார்கள். ஒரு ஜென் துறவியைப் போல மந்தகாசமான புன்னகையோடு அமர்ந்திருந்தார்.
மெஸ்ஸியின் மீது ஏன் இத்தனை கோடி மக்கள் மையலில் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த ஒரு கோல் நல்ல உதாரணம். அதுவும் அந்த கோல் உலக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டது மேலும் சிறப்பு. கூடுதல் நேரத்துக்கும், பெனால்டி ஷூட் அவுட்டுக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலேயே 3 – 0 என்ற கணக்கில் முடிவடைந்தது ஆச்சரியமே.

காலிறுதியில் ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு கலைந்தது போல, அரையிறுதியில் லூகா மாட்ரிச்சின் கனவும் கலைந்து போய்விட்டது. ஆனால் கடந்த இருபது வருட லயனல் மெஸ்ஸியின் கனவு மட்டும் இன்னும் உயிரோடிருக்கிறது. உலகக் கோப்பைக்கும் தனக்குமிடையே இருக்கும் இன்னும் மிச்சமிருக்கும் ஒரே ஒரு வெற்றிக்காக அது தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது. அந்தத் தீ அர்ஜெண்டினா வீரர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எரிகிறது என்பதுதான் அரையிறுதியில் பொறிபறக்க அவர்கள் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்குச் சொல்லும் செய்தி.