அன்வர் அலி கோலடித்திருக்கிறார் என்பதுதான் இந்திய கால்பந்து வட்டாரத்தில் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. ஹாங் காங் அணிக்கெதிரான போட்டியின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து அசத்தினார் அன்வர் அலி. ஆனால், அதுவல்ல இங்கு பேசுபொருள். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அன்வர் அலி, இந்திய அணிக்குத் திரும்பிய சில நாள்களிலேயே கோலடித்திருக்கிறார். அதைத்தான் இந்திய கால்பந்து ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலமாக பல கால்பந்து வீரர்கள் இதயப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த யூரோ 2020 தொடரின்போது கால்பந்துக் களத்திலேயே இதயப் பிரச்னையால் கீழே விருந்தார் கிறிஸ்டியன் எரிக்சன். கடந்த சீசன் தொடக்கத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து பார்சிலோனாவுக்கு மாறிய செர்ஜியோ அகுவேரோ, சில நாள்களிலேயே இதயப் பிரச்னையால் ஓய்வு பெற்றார். எரிக்சன் எப்படி மீண்டு வந்து முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறாரோ, அதைப் போலவே இந்திய கால்பந்தில் தடம் பதித்துக்கொண்டிருக்கிறார் அன்வர் அலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
21 வயதான அன்வர் அலி பஞ்சாப்பின் ஆதம்பூர் நகரில் பிறந்தவர். ஏழு வயதில் கால்பந்து ஆடத் தொடங்கியவர், ஆரம்பத்தில் ஸ்டிரைக்கராக இருந்தார். இவருடைய உயரம், இவரை டிஃபண்டராக மாற்றியது. மினெர்வா பஞ்சாப் அணியின் அகாடெமியில் இணைந்து தன் புரொஃபஷனல் கரியரைத் தொடங்கினார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அண்டர் 17 உலகக் கோப்பை தொடர் நடந்தபோது அன்வர் அலியின் பெயர் வெகுவேகப் பேசப்பட்டது. அந்த இளம் இந்திய அணியின் முக்கிய அங்கமாய் இருந்தவர் அன்வர் அலி. தன் டிஃபன்ஸிவ் திறமைகளால் அப்போதே பலராலும் பாராட்டப்பட்டார் அவர். அவருடைய வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்ததால், ஐ.எஸ்.எல் தொடரின் மிகப்பெரிய அணிகளுள் ஒன்றான மும்பை சிட்டி எஃப்.சி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்திய கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், காலம் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைப் பரிசளித்தது.
2018-19 சீசனில் இந்தியன் ஏரோஸ் அணிக்கு லோனில் அனுப்பப்பட்டார் அன்வர் அலி. ஆனால் 2019-20 சீசனில் அவருக்கான இடம் காத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், ஓமன், கத்தார், வங்கதேச அணிகளுக்கு எதிராக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடவிருந்த இந்திய அணியின் preliminary ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தார் அவர். அவர் கரியர் அடுத்த கட்டத்தை அடையும் நிலையில் இருக்க, இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார் அவர்.

ஹைபர்டிராபிக் மயோகார்டியாபதி (Hypertrophic Myocardiopathy) என்னும் சிக்கலால் பாதிக்கப்பட்டார் அன்வர் அலி. இதன் காரணமாக இதயத் தசைகள் இறுகிவிடும். அப்படியாகும்போது ரத்தத்தை செலுத்தும் இதயத்தின் திறன் குறையும். இந்தப் பிரச்னை அவருக்கு ஏற்பட்டதால் இந்திய கால்பந்து சங்கமும், மும்பை சிட்டி அணியும் சிகிச்சைக்காக அவரை பிரான்ஸுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தன.
இந்த சிக்கலால் அவருக்கு பெரிய பிரசசனைகள் ஏற்பட்டுவிடும் என்பதால், அவர் இனி கால்பந்து விளையாடுவது சரியானது அல்ல என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதனால், அவர் விளையாடவோ, ஏன் கால்பந்து பயிற்சி செய்யவோ கூடாது என்று அறிவித்தது இந்திய கால்பந்து சங்கம். ஒரு பிரகாசமான கால்பந்து கரியருக்கு ஒரு சோகமான முடிவு எழுதப்பட்டது. அப்போது அன்வர் அலிக்கு வயது 19 தான்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால், சிறு வயதிலிருந்து போராடிப் பழகியவர் அவ்வளவு எளிதாக வாழ்க்கையிடம் தோற்றுப்போக விரும்பவில்லை. தன் பிரச்னையில் இருந்து மீண்டு வந்தவர், மீண்டும் கால்பந்து களத்துக்குள் புகுந்தார். ஆகஸ்ட் 2020ல் முகமதன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இணைய முடிவு செய்தார். இப்போது இன்னொரு பிரச்சனை அவரை பின்தொடர்ந்தது. அவருடைய இதயத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று முகமதன் கிளப்புக்கு கடிதம் அனுப்பியது இந்திய கால்பந்து சங்கம். ஆனால், டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டு, கால்பந்துக் களத்துக்குள் நுழைந்தார் அன்வர் அலி. அதன் பிறகு அவர் எழுச்சியை எதுவும் தடுக்கவில்லை.
நவம்பர் 2020ல் ஹிமாச்சல் பிரதேச கால்பந்து லீகின் டெக்ட்ரோ ஸ்வேட்ஸ் யுனைடட் அணியில் இணைந்தார் அவர். அவர் மீண்டும் தொழில்முறை போட்டிகளில் கலந்துகொள்ள இந்திய கால்பந்து சங்கம் அனுமதித்ததால், டெல்லி எஃப்.சி அணியோடு ஐந்து வருடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார் அன்வர் அலி. ஐ-லீக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், ஐ.எஸ்.எல் அணியான கோவா எஃப்.சி அவரை லோனில் வாங்கியது. ஜனவரியில் அந்த அணிக்குச் சென்றவர், 10 போட்டிகளில் விளையாடினார்.
கிளப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பியதால், அவரை இந்திய அணிக்கு மீண்டும் அழைத்தார் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக். கம்போடியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தன்னுடைய பழைய ஆட்டத்தைக் காட்டினார் அன்வர் அலி. பந்தை சிறப்பாக பாஸ் செய்யக்கூடிய டிஃபண்டரான அவர், மீண்டும் முழு ஃபார்முக்குத் திரும்பியது இந்திய பயிற்சியாளருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கையை தன் கோல் மூலம், மொத்த இந்தியாவுக்கும் கொடுத்திருக்கிறார் அன்வர் அலி. இப்போது ஒட்டுமொத்த இந்திய கால்பந்து ரசிகர்களின் இதயங்களும் அன்வர் அலியின் பெயரைச் சொல்லித்தான் துடித்துக்கொண்டிருக்கின்றன.