Published:Updated:

கோப்பையை உருக்கி ரசிகர்களுக்குக் கொடுத்த கால்பந்து அணி... அயாக்ஸ் அமர்க்களம்!

Eredivisie Trophy
Eredivisie Trophy

தாங்கள் வென்ற சாம்பியன்ஷிப் கோப்பையை உருக்கி சிறிய நட்சத்திரங்களாக மாற்றி, அதைத் தங்கள் ரசிகர்களுக்குக் கொடுக்கவிருக்கிறது அயாக்ஸ் கால்பந்து அணி. இந்த சீசன் தாங்கள் வென்ற 'எரடிவிஸே' கோப்பையை உருக்கி சிறிதாக சுமார் 40,000 நட்சத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறது அந்த அணி.

நெதர்லாந்தின் மிகவும் பிரசித்திபெற்ற கால்பந்து கிளப் அயாக்ஸ். ஆம்ஸ்டர்டாம் நகரை மையமாகக் கொண்டுள்ள அந்த அணி, பல்வேறு முன்னணி வீரர்களை உருவாக்கியது. யோஹன் கிரயூஃப், ஃபிராங்க் ரிஜிகார்ட் போன்ற ஜாம்பவான்களும், ஸ்லாடன் இப்ராஹிமோவிச், லூயிஸ் சுவாரஸ் போன்ற சமகால நட்சத்திரங்கள் பலரும் இந்த அணிக்காக ஆடியிருக்கிறார்கள். 4 முறை ஐரோப்பாவின் சாம்பியன் ஆகியிருக்கும் அயாக்ஸ், எரடிவிஸே கோப்பையை 35 முறை கைப்பற்றியிருக்கிறது. இப்படிப் பழம்பெருமை வாய்ந்த அணி அது!

கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாகவே கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல்தான் நடந்துகொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அணியும் அதனால் பெரும் இழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அதைத் தாண்டி களத்தில் ரசிகர்களின் ஆதரவு இல்லாதது ஒவ்வொரு அணியையுமே பெரிதாக பாதித்துள்ளது. அதனால், ஜூம் மூலம் ரசிகர்களைக் களத்துக்குள் கொண்டுவருவது, ரசிகர்கள் போன்ற பேனர்கள் வைப்பது எனப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோப்பையை உருக்கி ரசிகர்களுக்குக் கொடுத்த கால்பந்து அணி... அயாக்ஸ் அமர்க்களம்!

களத்துக்கு வரமுடியாவிட்டாலும், தொடர்ந்து தங்கள் அணிக்கு ஆதரவளித்துவந்த ரசிகர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்ட அயாக்ஸ் இந்த அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறது. சீசன் டிக்கெட் வாங்கியிருக்கும் தங்கள் அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும், அந்தக் கோப்பையை உருக்கி உருவாக்கப்பட்ட சிறிய நட்சத்திரங்களை அனுப்பிவிடப்போகிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய அந்த கிளப்பின் தலைமை இயக்குநர் எட்வின் வான் டெர் சார், "இந்த சீசனின் பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல்தான் ஆடவேண்டியிருந்தது. இருந்தாலும், ஸ்டேடியத்துக்கு வரும் வழியில், சமூக வலைதளங்களில், ஏன் நேரடியாகக்கூட ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தங்கள் ஆதரவை அவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். 'இந்தக் கோப்பை' உங்களுக்காக என்று அவர்களிடம் சொல்வோம். இப்போது அதை அவர்களிடமே கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம். ஒரு மோசமான ஆண்டுக்குப் பிறகு, இந்த வெற்றியில் ரசிகர்களும் எங்களோடு இருப்பார்கள் என்பதை உறுதிசெய்துகொள்கிறோம்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு