Published:Updated:

ரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே! #ElClasico

ரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே! #ElClasico
ரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே! #ElClasico

ரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே! #ElClasico

ஸ்பெயின் நாட்டின் சிறந்த கால்பந்து கிளப்புகளும் பரம எதிரிகளுமான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய  சூப்பர் கோப்பைக்கான இறுதிப்போட்டியின் முதல் லெக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அபார வெற்றிபெற்றது. பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட் கேம்ப் நூ வில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரொனால்டோ மற்றும் அசென்சியோ பட்டையைக் கிளப்ப, 3-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி கோப்பையை பெற முன்னிலையில் உள்ளது ரியல் மாட்ரிட்.

பரபரப்புக்கும் மோதல்களுக்கும் பஞ்சமே இல்லாத இந்த ஆட்டத்தில், எல் கிளாசிகோவுக்கான இலக்கணம் முதல் பாதியில் மிஸ்ஸானாலும் இரண்டாம் பாதி அக்மார்க் சரவெடி. ஆட்டம் முழுவதுமே நெய்மார் விட்டுச் சென்ற வெற்றிடத்தால் பாதிக்கப்பட்டு, இறுதியில் ரியல் மாட்ரிட் அணியிடம் சரணடைந்தது பார்சிலோனா.

ஆட்டத்தை பார்சிலோனா ஆரம்பித்தாலும், பரபரப்பாக இருந்ததென்னவோ ரியல் மாட்ரிட்தான். கவுன்ட்டர் அட்டாக் மூலம் பார்சிலோனா எல்லையில் அடிக்கடி நுழைந்தனர் ரியல் மாட்ரிட் வீரர்கள். பார்சிலோனா வீரர்களும் பதிலடி கொடுக்கும்விதமாக எத்தனையோ முறை எதிரி எல்லைக்குள் சென்றாலும் மாட்ரிட் டிஃபென்ஸ் சுவரை அவர்களால் உடைக்கவே முடியவில்லை. நெய்மாரின் இடத்தில் இறக்கப்பட்ட ஜெரார்டு டெலோஃபு தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். பார்சிலோனாவின் ராகிடிச், சுவாரஸ், பஸ்கட்ஸ்  என யாருடைய ஆட்டமுமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மெஸ்சியையுமே எதுவும் செய்யவிடாமல் அருமையாக மார்க் செய்து விளையாடினர் ரியல் மாட்ரிட் டிஃபெண்டர்கள். கிடைத்த ஒன்றிரண்டு ஃபிரீ  கிக் வாய்ப்புகளையும் மெஸ்சி வீணடித்தார். 

நெய்மர் இல்லாததால் பார்சிலோனாவின் அட்டாக்கும் சோரம்போனது அப்பட்டமாகத் தெரிந்தது. காஸ்மிரோ மற்றும் கெராத் பேல் ஆகியோரின் ஷாட்டுகளை பார்சிலோனா கீப்பர் டெர் ஸ்டேகன் தடுத்துவிட, வேலையே இல்லாமல் இருந்தார் ரியல் மாட்ரிட் கீப்பர் நவாஸ். ஐந்து மஞ்சள் அட்டைகள் மட்டுமே வந்த நிலையில், முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிவடைந்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே எழுச்சி கண்டு, தாக்குதல் பாணியில் இறங்கின. இரு கோல் கம்பங்களுக்கும் பந்து மாறி மாறி வருவதும் செல்வதுமாக இருந்தது. ஆட்டத்தின் முதல் கோல் 50 வது நிமிடத்தில் விழுந்தது. இஸ்கோ கடத்திக் கொடுத்த பந்தை மார்செலோ தாழ்வாக க்ராஸ் செய்ய அதை க்ளியர் செய்ய சறுக்கிய ஜெரார்டு பிக்கேவின் காலில் பட்டு சேம் சைடு கோல் (ஓன் கோல்)மாறி பார்சிலோனாவின் வலைக்குள்ளேயே புகுந்தது. கோல் அடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் கவுன்ட்டர் அட்டாக் தொடங்கிய பார்சிலோனா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 58-வது நிமிடத்தில் கரிம் பென்சிமாவுக்கு மாற்றாக இறங்கிய ரொனால்டோவும் தன் பங்குக்கு கவுன்ட்டர் அட்டாக்கால் பார்சிலோனா அணி டிஃபென்ஸைத் திணறச் செய்தார்.

சுவாரஸ், மெஸ்சி, டெனிஸ் சுவாரஸ் என பார்சிலோனாவின் அட்டாக் சுத்தமாக எடுபடாமல்போக, பார்சிலோனா அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. மெஸ்சி சுவாரஸ் ஆகியோரின் ஷாட்டுகள் கோல்களாக மாறவில்லை. ரொனால்டோவும் ஒரு பைசைக்கிள் கிக் கோலை மிஸ் செய்தார். அதிர்ஷ்டவசமாக 77 -வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு சுவாரஸ் மூலம் ஒரு பெனால்டி கிடைக்க, பதற்றத்திலும் பந்தை பத்திரமாக வலைக்குள் அனுப்பி, கோல் கணக்கைச் சமன் செய்தார் மெஸ்சி. அந்த மகிழ்ச்சியும் மூன்று நிமிடத்துக்குமேல் நீடிக்கவில்லை. இஸ்கோ பாஸ் செய்த பந்தை அருமையாக டாப் ரைட் கார்னரில் திணித்து கோலாக மாற்றி, வெடி வெடித்தார் ரொனால்டோ. 

கடந்த மேட்சில் மெஸ்சி செய்ததற்குப் பதிலாக இந்த முறை சட்டையைக் கழற்றி சிக்ஸ் பேக்கைக் காட்டி ரொனால்டோ வெறித்தனமாக கொண்டாட, பரிசாக வந்தது மஞ்சள் அட்டை. ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில், அந்த செலிபிரேஷனே ரொனால்டோவுக்கு எமனாக அமைந்தது. ரொனால்டோ வேண்டுமென்றே டைவ் அடித்தார் என இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட, களத்தைவிட்டு விரக்தியோடு வெளியேறினார். 

பத்து பேருடன் இருந்த மாட்ரிட் தொடர்ந்து அட்டாக்கிங் மோடிலேயே இருக்க, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வழக்கம்போல் நழுவவிட்டனர் பார்சிலோனா வீரர்கள். கோல் கம்பங்கள் பிஸியாகவே இருந்தபோதும், பார்சிலோனாவுக்குக் கடைசி வரை அதிர்ஷ்டம் அடிக்கவேயில்லை. அதுவரை மிஸ்ஸான மோதல்கள் கடைசிக் கட்டத்தில் அதிகமாக வரத் தொடங்கின. டேனி கார்வஹால் செர்ஜியோ புஸ்கட்ஸுடன் மல்லுக்கட்ட, காஸ்மிரோவுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார் அலேசர். பார்சிலோனாவின் தாக்குதல்கள் எல்லாம் ரியல் மாட்ரிட்  டிஃபென்ஸ் முன் மண்டியிட, எதிர்பாரா திருப்பமாக 90-வது நிமிடத்தில் ஒரு லாங் ஸ்டன்னர் கோல் அடித்து மிரட்டினார்  இளம் வீரர் அசென்சியோ. ரியல் மாட்ரிட் 3-1 என்று முன்னிலை பெற்ற நிலையில் கூடுதலாகக் கிடைத்த மூன்று நிமிடமும் பார்சிலோனாவால் வீணடிக்கப்பட, ஆட்டம் ரியல் மாட்ரிட் வசமானது.

சூப்பர் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி லெக் ஆட்டம், வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையாக பார்சிலோனா மீண்டு வருமா  அல்லது ரியல் மாட்ரிட்  எளிதாக வாகை சூடுமா என்பது அடுத்த ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு