Published:Updated:

கால்பந்தின் லிட்டில் மாஸ்டர், பிளேஸ்டேஷன்... எல்லாமே மெஸ்சிதான்! #HBDMessi

கால்பந்தின் லிட்டில் மாஸ்டர், பிளேஸ்டேஷன்... எல்லாமே மெஸ்சிதான்!  #HBDMessi
News
கால்பந்தின் லிட்டில் மாஸ்டர், பிளேஸ்டேஷன்... எல்லாமே மெஸ்சிதான்! #HBDMessi

கால்பந்தின் லிட்டில் மாஸ்டர், பிளேஸ்டேஷன்... எல்லாமே மெஸ்சிதான்! #HBDMessi

2015 கோபா டெல் ரே ஃபைனல். பார்சிலோனா அணி, அத்லெட்டிக் க்ளப் அணியை தன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது. இடம், பார்சிலோனாவின் ஹோம் ஸ்டேடியமான கேம்ப் நூ. 98,000 பார்வையாளர்கள் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டத்தின் 20-வது நிமிடம். டேனி ஆல்வ்ஸ் நடுகளத்தில் கடத்திக்கொடுத்த பந்தை பெறுகிறார் மெஸ்சி. வெறும் 2.73 செகண்ட் கால அளவில் 19.5 மைல் (எம்.பி.எச் ) வேகமெடுக்கிறது மெஸ்சியின் கால்கள். மூன்று டிஃபெண்டர்கள் தலா ஆறு அடி தூரத்தில் மெஸ்சியை சுற்றிவளைக்கிறார்கள். வெறும் 1.2 செகண்டில் மூன்றே மூன்று சிறிய டச்கள் மூலம் அவர்களை ஓரம் கட்டிவிட்டு எதிரணியின் கோல் பாக்சுக்குள் நுழைகிறார்.

பாக்சுக்குள் நுழைந்ததும் ஒரு இன்ஸைடுஅவுட் (உள்ளே வெளியே) மூவ் தான், ஷாட்டுக்குத் தயாராகிறார். பாக்சுக்குள் உள்ள டிஃபெண்டர்களுக்கும் மெஸ்சிக்குமான தூரம் வெறும் 5 அடி தான். இருந்தாலும் 48 மைல் (எம்.பி.எச் ) திசைவேகத்தில் பந்து கோல்கீப்பரின் நீண்ட இடதுகையை 6 இன்ச் தொலைவில் ஏமாற்றிவிட்டு  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வலைக்குள் பந்து சென்றது. பந்தை வாங்கியதிலிருந்து கோல் அடிக்கும்வரை 60 யார்ட்ஸ் தொலைவை கடக்க (டிராவல்) மெஸ்சி எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 11.4 செகண்டுகள்தான். இதைவிட ஆச்சர்யமான விஷயம் மெஸ்சியின் ஷாட்தான்.  14 யார்டு தொலைவிலிருந்து மெஸ்சி உதைத்த பந்து எப்படி வலைக்குள் சென்றது என்பதுதான். மெஸ்சி சரியாக பந்தின் மையப்பகுதியை உதைக்காமல் வெறும் 1.5 மி.மீ அளவு பந்தை இடதுபுறமோ இல்லை வலதுபுறமோ தள்ளி உதைத்திருந்தால் பந்து கீப்பரின் கைகளில் பட்டு வெளியேறி இருக்கும். இல்லை, கோல்கம்பத்தை விட்டே வெளியேறியிருக்கும்.

இத்தனை விவரங்களும் அறிவியல் பூர்வமாக வல்லுநர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்தின் இந்த முதல் கோலை மெஸ்சி அடித்தபோது கிளம்பிய ரசிகர்கள் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு அடங்க வெகுநேரமானது; பார்வையாளர்களும் சரி, சக வீரர்களும் சரி சிறிது நேரம் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துப் போயினர். அந்த திகைக்க வைக்கும் வேகமும் எதிரணி வீரர்களை திணறவைக்கும் விவேகமும் தான் மெஸ்சியின் சிறப்பம்சங்கள். மெஸ்சியின் இந்த ஒற்றை கோலுக்கே இத்தனை ஆச்சர்யங்கள் என்றால் இதுபோன்ற பல கோல்களை ஜஸ்ட் லைக் தட் என தனது கால்பந்து வாழ்க்கையில் பதிவு செய்திருக்கிறார் இந்த லிட்டில் மாஸ்டர். உலகின் நம்பர் ஒன் வீரராக வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கும் மெஸ்சி இன்று தனது 30-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் லியோனல் மெஸ்சி. இவரது உயரம் வெறும் 5 அடி 7 அங்குலம்தான். கால்பந்து உலகைக் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வரும் சூப்பர்ஸ்டாரான இவர் அசாத்தியமான பல சாதனைகளுக்குச் சொந்தகாரர். மெஸ்சியின் தொழில்முனை போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தவிர ஏறக்குறைய கால்பந்து உலகின் லெஜண்டுகள், சிறந்த வீரர்கள், சக போட்டியாளர்கள் என அனைவருமே கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் என கை காட்டுவது இவரைத்தான். இவர்  படைத்த சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே இருக்குமே தவிர அதற்கு முடிவு என்பதே இருக்காது. தன் 17 வயதில் பார்சிலோனா அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய மெஸ்சி இன்றுவரை வெற்றிமேல் வெற்றிகளை வாங்கி பார்சிலோனா அணிக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். அர்ஜெண்டினா தேசிய அணிக்காகவும் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். 

ஆரம்பத்தில் அடுத்த மாரடோனா என்று புகழ்ப்பட்ட மெஸ்சி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே விளங்குகிறார். 2008-ம் ஆண்டிலிருந்தே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெஸ்சிக்கு இன்றுவரையில் தேய்வு என்பதே இல்லை.

மெஸ்சி, அர்ஜெண்டினாவின் ரோசாரியோ நகரில் 1987-ம் ஆண்டு பிறந்தவர். சோதனையை சாதனையாக மாற்றியவர் என்ற சொல்லுக்கு தாராளமாக இவரை உதாரணம் சொல்லலாம். ஆம், சிறு வயதிலேயே குரோத் ஹார்மோன் டெஃபீசியன்சி எனக்கூடிய ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் மெஸ்சி. பார்சிலோனா அணி நிர்வாகம் இவரது மருத்துவ செலவை பார்த்துக்கொள்வதாக உறுதியளிக்கவே அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெயினுக்கு குடி வந்தது மெஸ்சியின் குடும்பம். 

பார்சிலோனா யூத் அகாடமியான லா மசியாவில் பால பாடம் பயின்ற மெஸ்சி, பார்சிலோனா சி, பார்சிலோனா பி என தன் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சினால் முன்னேறி இறுதியாக 2005-ல் பார்சிலோனா சீனியர் அணியில் இடம் பிடித்தார். மே 1, 2005-ல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக  தன் முதல் கோலை பதிவுசெய்தார். மெஸ்சியின் முதல் கோலுக்கான அசிஸ்டை அளித்தவர் பார்சிலோனா லெஜண்ட் பிரேசில் நாட்டு வீரரான ரொனால்டினோ. மெஸ்சியின் திறமைகளைக் கண்டறிந்து சீனியர் அணியில் அவரைச்  சேர்க்க பார்சிலோனா நிர்வாகத்தை வலியுறுத்தியவர்களில் ரொனால்டினோ முதன்மையானர். ‘கால்பந்து வாழ்க்கையில் எனக்குக் கிடைக்காத பெருமை மெஸ்சியுடன் பல சீஸன்கள் சேர்ந்து விளையாடாமல் போனதுதான்’ என்று  பல வருடங்கள் கழித்து ரொனால்டினோ  சொன்னார். முதல் கோல் அடித்தவுடன் மகிழ்ச்சியில் ரொனால்டினோ தன் முதுகில் மெஸ்சியை சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை மெஸ்சியின் புகழ் கிராப் இறங்கவே இல்லை.

மெஸ்சி  ஆக்ரோஷமான வீரர் இல்லை, ஆஜானுபாகுவான உடல்வாகும் இல்லை. ஆனாலும், மெஸ்சி அளவுக்கு யாரும் அதிக கோல்கள் அடிப்பதில்லை. மெஸ்சி, பலத்தை நம்புவதில்லை.  திறமையை நம்பக்கூடியவர். எத்தனையோ வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் அடிக்க வேண்டும் என்று துடிக்கும் நிலையில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட சக வீரர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் கோல் அடிக்க வைத்து சந்தோஷப்படுவது மெஸ்சிக்கு விருப்பமான ஒன்று. 170 செ.மீ உயரம், 72 கிலோ எடை கொண்ட மெஸ்சி, பிரதானமாக பயன்படுத்துவது தன் இடது காலைத்தான். ஃபினிஷிங், பாஸிங் என எதிலும் துல்லியம் பிசகாது. பந்து காலுக்கு வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்  டிரிபிளிங், நட்மெஜ், பாடி ஃபெயிண்ட் என பல மேஜிக்குகளை செய்து எதிரணி வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எதிரணியின் கோல் போஸ்ட்டிற்கு கடத்திச் சென்று விடுவார்.

எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இவரிடமிருந்து பந்தை பறிப்பதென்பது எந்தஒரு டிஃபெண்டருக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது. வேகம் இவரது அசாத்திய பலம். திடீரென்று வேகமெடுத்து ஓடக்கூடிய கால்கள் இவரின் பிரதான பலம். தொலை தூரத்திலிருந்தாலும் கூட துல்லியமக பாஸ் செய்வது, அத்தனை டிஃபெண்டர்களையும் ஓரங்கட்டி சக வீரர்களை கோல் அடிக்கச் செய்வது, கோல் கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் திணிப்பது என அனைத்து ஏரியாக்களிலும் திறமையான ஆல்ரவுண்டர். பார்சிலோனா அணிக்காக எட்டு லீக் டைட்டில்கள், 29 டிராபிக்களை வென்றுள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக ஒலிம்பிக்கில்  தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறார். ஆனால், 2014 பிரசேில் உலகக் கோப்பை ஃபைனலில், அர்ஜெண்டினாவை தனி ஆளாக உலகச் சாம்பியனாக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. கோபா அமெரிக்க தொடரிலும் அடுத்தடுத்து தோல்வி.

 க்ளப்புக்காக விளையாடுவதைப் போல, தேசிய அணிக்கு விளையாடும்போது அக்கறை காட்டுவதில்லை என விமர்சனங்கள் வந்தன. ‘தேசிய அணிக்கு இனி விளையாட மாட்டேன்’ என, ஓய்வை அறிவித்தார். பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீண்டும் அர்ஜெண்டினாவின் ஜெர்ஸி அணிய சம்மதித்தார். ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பையில் ஜொலித்து, அர்ஜெண்டினாவை வேர்ல்ட் சாம்பியனாக மாற்றுவார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். 

பிஃபா வின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்து முறை வென்றிருக்கிறார். நான்கு முறை யூரோப்பியன் கோல்டன் ஷூ விருதை பெற்றிருக்கிறார். ஒரு வருடத்தில் அதிக கோல்கள் அடித்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார் (2012 ம் ஆண்டு 91 கோல்கள்). இதுவரை ஒட்டுமொத்தமாக தன் கால்பந்து வாழ்க்கையில் 701 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி 565 கோல்கள் அடித்துளார். 231 கோல்கள் விழ துணைபுரிந்துள்ளார் (அசிஸ்ட்).

சமீபத்தில் நடைபெற்ற பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையேயான லா லிகா ஆட்டத்தில் மெஸ்சி அடித்த இரண்டாவது கோல் பார்சிலோனா அணிக்காக அவர் பதிவு செய்த 500-வது கோல். ஆட்டத்தின்போது முன்னதாக ரியல் மாட்ரிட் அணி டிஃபெண்டர்களால் வாயில் இரத்தம் வருமளவுக்கு காயம்பட்டார் மெஸ்சி. ஆனாலும் சோர்ந்து விடாமல் தனது அற்புதமான கோல்களால் ரியல் மாட்ரிட் அணியைத் தோற்கடித்து ரியல் மாட்ரிட் வீரர்களை புலம்ப வைத்து வெற்றிகரமாக ரிவெஞ்ச் எடுத்தார். தன் 500-வது கோலை அடித்ததும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப்போல, ரியல் மாட்ரிட் ரசிகர்கள் முன் தன் ஜெர்சியை கழற்றி மெஸ்சி என்ற தன் பெயர் தெரியுமாறு கெத்தாக அவர்களை நோக்கி காட்டிவிட்டு, வித்தியாசமான முறையில் அதைக் கொண்டாடினார். 

களத்தில் பம்பரமாகச் சுழலும் மெஸ்சியின் கால்களை வரி ஏய்ப்பு என்னும் பாம்பு சுற்றி வதைத்தது. வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம் என ஒரு கட்டத்தில் மெஸ்சிக்கு போதாத காலம். ஆனாலும் அது எதுவும் களத்தில் பிரதிபலிக்காதபடி பார்த்துக்கொண்டார்.  இப்போது மீண்டும் புது உற்சாகத்துடன் வலம் வருகிறார். காதலி மற்றும் இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் மெஸ்சிக்கும் அவரது காதலி அண்டோனெல்லாவுக்கும் அடுத்த வாரம் திருமணம். 

இப்போது போல எப்போதும் மெஸ்சி, கால்பந்து உலகை ஆள்வார் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. எட்டு வயதில் ஹார்மோன் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்சியால் உயரமாய் வளர முடியவில்லை; ஆனால் இப்போது மெஸ்சியின் சாதனைகளின் எண்ணிக்கை உயர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. விடாமுயற்சி இருந்தால், திறமையை வளர்த்துக்கொள்ளும் வெறி இருந்தால் இந்த உலகத்தில் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என உலகிற்கு உணர்த்தியவர் லியோனல் மெஸ்சி. 

உலகின்  தலைசிறந்த  கால்பந்து பயிற்சியாளர்களுள் ஒருவரான பெப் கார்டியோலா ஒரு முறை மெஸ்சியைப் பற்றி இப்படிக் கூறினார் “அவரைப் பற்றி எழுத வேண்டாம். அவரை விவரிக்க வேண்டாம்; அவரைக் கவனியுங்கள்.”. ஆம், அவர் சொல்வது அத்தனை உண்மை. ஒருமுறை மெஸ்சி விளையாடுவதை பாருங்கள்.  உங்களையே நீங்கள் மறந்து மெஸ்சியை ரசிக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

மெஸ்சி பற்றி பிரபலங்கள் சொன்னது

டீகோ மரடோனா: அர்ஜெண்டினா கால்பந்தில் என் இடத்திற்கு வாரிசான வீரரை பார்த்திருக்கிறேன். அவர் பெயர் மெஸ்சி.

லூயிஸ் ஃபிகோ : மெஸ்சி விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு ஒரு இன்பம். அது உச்சகட்டத்தை பெறுவதைப் போன்றது. அது ஒரு நம்பமுடியாத இன்பம்.

ரால் : மற்றொரு நாள் நான் அவரது ஆட்டங்களில் ஒன்றை பார்த்தேன். அவர் பந்துடன் ஒரு நூறு சதவீதம் முழுவேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தார். எத்தனை தொடுதல்களை எடுத்துக்கொண்டார் என தெரியவில்லை. ஐந்து அல்லது ஆறாக இருக்கலாம். ஆனால் பந்து அவரது காலில் பசையிடப்பட்டிருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது.

பாலோ மால்டினி : அவர் மாரடோனாவின் நிலையை அடைந்து விட்டார்; அதையும் மிஞ்சிவிட்டார். 

பெப் கார்டியோலா : அவரைப்பற்றி எழுதாதீர்கள்,அவரை விவரிக்க முயற்சிக்காதீர்கள். வெறுமனே அவரைக் கவனியுங்கள்.

ஃப்ராங்க் ரிஜ்கார்ட்: லியோவின் கோல்கள் கலையில் படைப்புகள்.

அர்சீன் வெங்கர்: மெஸ்சி ஒரு பிளேஸ்டேஷன்.

ராடமெல் ஃபால்கேயோ: மெஸ்சி ஒரு உண்மையான வீரரா அல்லது பிளேஸ்டேஷன் கதாபாத்திரமா?

ஜவி ஹெர்னாண்டஸ் : மற்ற எல்லாரையும்விட மெஸ்சி ஒருபடி மேலே இருக்கிறார். இதை எவரால் பார்க்கமுடியவில்லையோ அவர்கள் குருடர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆண்டர் ஹெரேரா : அவர் ஒரு மனிதன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை.

ஜியான்லுய்ஜி புஃபோன் : அவர் நம்மைப்போல மனிதனாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்பினேன்.

கார்லோஸ் பிலார்டோ : மெஸ்சி உடற்கூறியல் சட்டங்களை மீறுகிறார். நிச்சயமாக அவருடைய கணுக்காலில் ஒரு கூடுதல் எலும்பு இருக்க வேண்டும்.

ஃக்ரிஸ்டோ ஸ்டாய்க்கோவ் : ஒருகாலத்தில் என்னை பிஸ்டல் மூலம் மட்டுமே நிறுத்த முடியும் என்றார்கள். இன்று மெஸ்சியை தடுக்க உங்களுக்கு ஒரு மெஷின்கன் தேவைப்படும்.

ராடோமிர் அண்டிக் : மெஸ்சி கால்பந்தின் மொசார்ட்.

மேக்சி் ரோட்ரிகுவெஸ் : சந்தேகமேயில்லை, நீங்கள் வேறு கேலக்சியிலிருந்து வந்தவர். நன்றி லியோ.

லூயிஸ் என்ரிக்கே : உண்மையில் அவரைப்பார்த்தால் எனக்கு மனிதனாகவே தெரியவில்லை.

டேனி ஆல்வ்ஸ் : மெஸ்சி ஒரு தெய்வீகப் பரிசை கூடவே வைத்திருக்கிறார்.

ஸ்லடான் இப்ராஹிமோவிச் : மெஸ்சிக்கு அவரது வலதுகால் தேவையில்லை. அவர் பெரும்பாலும் இடது காலை மட்டுமே உபயோகிக்கிறார். இப்போதும் உலகின் தலைசிறந்த வீரராக இருக்கிறார். கற்பனைசெய்து பாருங்கள், ஒருவேளை அவர் தனது வலது காலையும் உபயோகப்படுத்தினால் நாம் தீவிரமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ : நாங்கள் நல்ல நண்பர்கள். நாங்கள் ஒன்றாக சாப்பிட்டதில்லை. ஆனாலும் அவரை நான் மதிக்கிறேன். அவர் என்னுடைய போட்டியாளர்தானே தவிர எதிரி இல்லை.