Published:Updated:

ரஃபேல் நடால் எனும் தளபதி! ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆன கதை #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரஃபேல் நடால் எனும் தளபதி! ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆன கதை #VikatanExclusive
ரஃபேல் நடால் எனும் தளபதி! ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆன கதை #VikatanExclusive

ரஃபேல் நடால் எனும் தளபதி! ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆன கதை #VikatanExclusive

சிந்தெடிக் டிராக்கில் உசைன் போல்ட்

நீச்சல் குளத்தில் மைக்கேல் பெல்ப்ஸ்

22 யார்டு பிட்ச்சில் சச்சின் டெண்டுல்கர்

பாக்ஸிங் ரிங்கில் முகமது அலி...

எவர் கிரீன் சாம்பியன்கள் எனில், ரஃபேல் நடால் களிமண் தரையின் ஈடுஇணையற்ற நாயகன். சந்தேகமே இல்லை. ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடரில் பத்து முறை சாம்பியன் என்பது அசாதாரணம். அந்த வகையில் ரஃபேல் நடால் அசாதாரணன். ஏன், எப்படி?

ஸ்பெயினில் உள்ள மஜோர்கா தீவைச் சேர்ந்த நடாலின் சிறுவயது கனவு, ஒருமுறையாவது ஃபிரெஞ்ச் ஓபன் வெல்ல வேண்டும் என்பதே... 2005-ல் அந்தக் கனவு நனவானது. 2005 ஃபிரெஞ்ச் ஓபன் ஃபைனலில் அர்ஜென்டினாவின் மரியனோ பியோர்டாவை வீழ்த்தி நடால் சாம்பியன் ஆனபோது அவர் வயது 19. இன்று 31. இடைப்பட்ட காலத்தில் 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். அதில் பத்து ஃபிரெஞ்ச் ஓபனில் வென்றவை.  ‘‘முதன்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் வென்றதும், 2017-ல் மஜோர்கா தீவில் ஒரு படகில் மீன் பிடித்துக்கொண்டிருப்பேன் என நினைத்தேன்.  நிச்சயமாக, இங்கு (ஃபிரெஞ்ச்) பத்து பட்டங்கள் வெல்வேன் என நினைத்துப் பார்த்ததே இல்லை.’’ என்றார் நடால். காலத்தின் விநோதம் இது.

நேற்றிரவு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்த நேரத்தில் வாவ்ரிங்காவை திணறடித்துக்கொண்டிருந்தார் ரஃபேல் நடால். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முக்கியமான மேட்ச். கிட்டத்தட்ட காலிறுதி. டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடால் - வாவ்ரிங்கா மோதும் ஃபிரெஞ்ச் ஓபன் ஃபைனல். விராட் கோலியின் கவர் ட்ரைவ், ரஃபேல் நடாலின் ஃபோர்ஹேண்ட் ஷாட் இரண்டில் எதை ரசிப்பது, எதைத் தவிர்ப்பது என குழப்பம். இந்தியாவில் டென்னிஸுக்கு மார்க்கெட் இல்லைதான், ஆனாலும் நடால் ஆடுகிறார்; கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் ஆடுகிறார்; அதுவும் பாரிஸில், அவருக்கு இஷ்டமான களிமண் தரையில் ஆடுகிறார்... மிஸ் செய்ய முடியுமா? எதிர்த்து ஆடுபவர் வாவ்ரிங்கா. 

2014 ஆஸ்திரேலிய ஓபனில் நடாலை வென்றவர். மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்குச் சொந்தக்காரர். 2014 ஆஸ்திரேலிய ஓபன் ஃபைனல், 2015 ஃபிரெஞ்ச் ஓபன் ஃபைனல், 2016 அமெரிக்க ஓபன் ஃபைனல் என விளையாடிய மூன்று கிராண்ட் ஸ்லாம் ஃபைனல்களிலும் வாகை சூடியவர். அந்தவரிசையில் நடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா இரண்டாவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் வென்று விடுவாரா? எதிர்பார்ப்பு எகிறியது.

வாய்ப்பே இல்லை. களிமண் தரையில் நடால், பாகுபலி. இதுவரை ஃபிரெஞ்ச் ஓபனில், களிமண் தரையில் அவர் விளையாடிய 81 போட்டிகளில் 79-ல் வெற்றி. இருமுறை மட்டுமே தோல்வி.  2009-ல் ராபின் சோடர்லிங், 2015 காலிறுதியில் ஜோகோவிச் ஆகியோர் மட்டுமே ஃபிரெஞ்ச் ஓபனில் நடாலை வீழ்த்தியுள்ளனர். மற்றபடி, King of Clay என்பதை ஒவ்வொருமுறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் நடால். நேற்றும் நிரூபித்தார். இன்னமும் நிரூபிப்பார். இன்னும் 5 முறை பாரிஸில் பட்டம் வெல்வார் என்கிறார் மூன்றுமுறை ஃபிரெஞ்ச் ஓபன் வென்ற கஸ்டவோ கியூர்டன். 

இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் ஃபைனலில் நடால் - ரோஜர் ஃபெடரர் மோதினர்.  அடங்காத இரு காளைகளின் கிளாசிக் மோதல் அது. டென்னிஸ் வரலாற்றில் அழுந்தப் பதிந்த மேட்ச் அது. கிராண்ட் ஸ்லாம் ஃபைனல் என்றால் இப்படி இருக்க வேண்டும் எனும்படியான போட்டி அது. ஆனால், நேற்று நடந்த நடால் - வாவ்ரிங்கா மேட்ச் உப்புச்சப்பில்லாமல் இருந்தது. ஒன்சைட் மேட்ச். நடால் வெல்வார்தான்... இப்படி வென்றிருக்க வேண்டாம். வாவ்ரிங்கா தோற்பார்தான்... இப்படி தோற்றிருக்க வேண்டாம். முதல் சர்வில் இருந்து, முதல் செட்டில் இருந்து எந்த இடத்திலும் வாவ்ரிங்கா பிடியை இறுக்கவில்லை. நடால் எந்த இடத்திலும் பிடியைத் தளர்த்தவில்லை.

வாவ்ரிங்கா, பேக் ஹேண்ட் ஷாட்டுகளின் பிதாமாகன். குறிப்பாக ஒன் ஹேண்ட் ஷாட்கள் அவரது பிரம்மாஸ்திரம். பேஸ் லைனில் நின்று அவர் அடிக்கும் ஒன் ஹேண்ட் ஷாட்கள் கிளாசிக் ரகம். ஆனால், நேற்று அந்த பிரம்மாஸ்திரம் புஸ்வானமானது. மாறாக, தன் பிரத்யேக ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் மூலம் மிரள வைத்தார் நடால். இரண்டாவது செட்டில் ஒருமுறை நடால் அப்படி அடித்த ஷாட்டைப் பார்த்து வாவ்ரிங்காவே கைதட்டி ஆமோதித்தார். கடைசியில் ரன்னர் அப் கோப்பையை கையில் ஏந்தியபடி, நடால் களிமண் தரையின் நாயகன் என்பதையும்...

வாவ்ரிங்காவின் இன்னொரு பலம் அவரது சர்வ். 200 கி.மீ. வேகத்தில் அனல் பறக்கும். எதிரி பேஸ்லைனில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நின்றாலும் அந்த சர்வை எடுக்க முடியாது. ஏஸ் சர்வ்கள் அவருக்கு அசால்ட். முதல் சர்வில் புள்ளிகள் குவியும். நேற்று நடாலிடம் அது பலிக்கவில்லை. பொதுவாக கிராண்ட் ஸ்லாம் ஃபைனல் 3 - 5 மணி நேரம் நடக்கும். இருவரும் இரண்டு செட்களை வசப்படுத்தி, ஐந்தாவது செட் வரை நீடித்தால் மட்டுமே ஃபைனல் சூடு பிடிக்கும். 15 கோடி ரூபாய் பரிசுக்கு மதிப்பிருக்கும். நேற்று அப்படி இல்லை. நேற்று வாவ்ரிங்காவின் நாள் அல்ல. நடால் நாள். அதுவும் மறக்க முடியாத நாள். 

'La Decima’ என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு பத்தாவது முறையாக என்று அர்த்தம். 2014-ல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி பத்தாவது முறையாக சாம்பியன் ஆனதும் ஸ்பெயினை அலங்கரித்தது இந்த வார்த்தை. இன்று நடால் புண்ணியத்தில் மீண்டும் ஸ்பெயினில் உள்ள பத்திரிகைகள்  'La Decima’ வார்த்தையை கொட்ட எழுத்துகளில் வரிந்து கட்டிஎழுதுகின்றன. 

பத்தாவது முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது அவ்வளவு கொண்டாட்டத்துக்குரிய விஷயமா? கண்டிப்பாக. இதற்கு முன் மார்க்ரெட் கோர்ட் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை பட்டம் வென்றிருக்கிறார். தற்போது நடால் ஃபிரெஞ்ச் ஓபனில் 10 பட்டங்களை வென்று முத்திரை பதித்திருக்கிறார். 

கால்பந்தில் ரியல் மாட்ரிட் க்ளப், 12 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளது. 1993 முதல் 2003 வரை, பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி  பத்து முறை பிரீமியர் லீக் பட்டம் வென்றது. 1947 முதல் 1962 வரையிலான காலத்தில்  நியூயார்க் யங்கீஸ் பேஸ்பால் அணி பத்து முறை வேர்ல்ட் சீரீஸ் பட்டம் வென்றது. 1957 -1969 வரையிலான 13 ஆண்டுகளில் பாஸ்டன் செல்டிக்ஸ் க்ளப் பத்துமுறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் வென்றது. இவை அனைத்தும் விளையாட்டு உலகில் அசாதாரணமான சாதனை. ஆனால், அனைத்தும் குழு விளையாட்டு.

எல்லா சாதனைகளும் குழு விளையாட்டில்தானா? நிச்சயம் இல்லை. தனி நபர் சாதனையும்  இருக்கிறது. 1996 முதல் 2005 வரை பிரிட்டனில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் AP McCoy தொடர்ந்து ஜாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால்... இதில் குதிரையின் பங்கு பாதி உள்ளது என்பதால், தனிநபரின் பாராட்டுக்குரிய சாதனையாக அங்கீகரிக்கப்படமாட்டாது. அதேபோல, பில் டெய்லர் 12 முறை வேர்ல்ட் டர்ட்ஸ் (ஒருவகை அம்பெறிதல் போட்டி) பட்டம் வென்றுள்ளார். அவர் பாராட்டுக்குரியவர்தான். அதையெல்லாம் விட நடால் ஒரு படி மேல். எதனால்...?

மெஸ்சி, கால்பந்து உலகின் ஜாம்பவான். அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரை மிஞ்சி நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்று விட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதனால்தான் ரொனால்டோவை கொண்டாடுகிறது கால்பந்து உலகம். போலவே, டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னன் ரோஜர் ஃபெடரர். 35 வயதில் இன்னும் இளம் வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனம். அவருக்கு அடுத்ததாக ஜோகோவிச் மிரட்டுகிறார். இவர்களுக்கிடையே  நடால், 15 கிராண்ட் ஸ்லாம் வென்று, அதுவும் ஒரே மண்ணில் தனி முத்திரை பதித்து வருகிறார் எனும்போது பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன? இத்தனைக்கும் நடால் அடிக்கடி காயத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்துக் கிடப்பார்.

நடால் மட்டும் களிமண் தரையில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தவில்லையெனில் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர் இன்னும் சில ஃபிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்றிருப்பர். ஒரு பட்டத்தோடு நின்றிருக்க மாட்டார்கள். இப்போது சொல்லுங்கள் நடால் களிமண் தரையின் எவர்கிரீன் நாயகன்தானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு