Published:Updated:

ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசில் கால்பந்து அணிக்கு முதல் தங்கம்!

ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசில் கால்பந்து அணிக்கு முதல் தங்கம்!
ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசில் கால்பந்து அணிக்கு முதல் தங்கம்!

லிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. ஒலிம்பிக் தொடங்கி 120 ஆண்டுகளுக்கு பிறகே உலகச் சாம்பியன் அணியால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வெல்ல முடிந்துள்ளது.

உலகக் கோப்பையை 5 முறை கைப்பற்றியுள்ள பிரேசில் அணி இதுவரை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதில்லை. இதற்கு முன், 1984,88,2012ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தங்கப்பதக்கத்தை பிரேசில் கோட்டை விட்டுள்ளது. சொந்த மண்ணில் இந்த முறை ஒலிம்பிக் போட்டி நடந்ததால், பிரேசில் அணி தங்கம் வெல்லும் முனைப்பில் இருந்தது. ரியோவின் மரக்கானா மைதானத்தில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரேசில் மோதியது. போட்டியை காண 78 ஆயிரம் ரசிகர்கள் அரங்கத்தில் திரண்டிருந்தனர்.

ஆட்டம் தொடங்கிய 26வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு ஒரு ஃபிரீகிக் கிடைத்தது. அதனை நெய்மர் நேர்த்தியாக கோலாக்கினார். இந்த கோலுக்கு பிற்பாதியில்  ஜெர்மனி அணி பதிலடி கொடுத்தது. 59வது நிமிடத்தில்  பெனால்டி பாக்சுக்குள் கிடைத்த கிராஸ் பந்தை ஜெர்மனி அணியின் கேப்டன் மாக்ஸ் மேயர் எளிதாக கோலுக்குள் அடித்தார். மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரேசில் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தையும் வென்றது.

கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இதே மைதானத்தில் பிரேசில் அணியை ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்திருந்தது. அந்த தோல்விக்கு  சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பிரேசில் அணிக்கு இந்த வெற்றி அமைந்தது. ஆனால் ஒலிம்பிக் கால்பந்தை பொறுத்த வரை 23 வயதுக்குட்பட்ட வீரர்கள்தான் அணியில் இடம் பெற வேண்டும். ஒலிம்பிக் தேசிய அணியில் சீனியர் வீரர்கள் 3 பேருக்குதான் ஃபிஃபா அனுமதி அளிக்கும்.

மகளிர் கால்பந்து இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி ஸ்வீடன் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.