Published:Updated:

போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

“ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது.

ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்!

கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்தி பெறாத தேசம் போர்ச்சுக்கல், கால்பந்திலும் கோப்பை ஏதும் வெல்லாமல் இதுநாள் வரை சபிக்கப்பட்டிருந்தது. நம் அணி ஒருமுறையேனும் ஏதாவது ஒரு கோப்பையை வெல்லாதா என்று மொத்த தேசமும் ஏங்கிக் கிடந்தது. அந்த மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் இத்தனை ஆண்டுகளாக தனி ஒருவனாய் தனது தோளில் சுமந்து வந்த ரொனால்டோவின் பாரம் இந்த வாரம் இறக்கப்பட்டு விட்டது.

பிரான்சில் நடந்த யூரோ 2016 கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வென்று, தங்கள் ஏக்கத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது போர்ச்சுகல் அணி. உலகமே எதிர்பார்த்த இந்த அதிசய சூரன் தன் முழு பலத்தையும் காட்டவில்லைதான்; ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகின் ஜாம்பவானாய், கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கிய அவரைத் தேடி அந்தக் கோப்பை தானாகவே வந்துள்ளது.

ரொனால்டோ, உசேன் போல்டும், மைக்கேல் ஜோர்டானும் கலந்த கலவை. எந்தவொரு தடுப்பாட்டக்காரரையும் மெர்சலாக்கிவிட்டு புயலாகப் பாயும் ரொனால்டோ, பந்தை தலையால் முட்ட 44 செ.மீ வரை காற்றில் பறப்பாராம். ஒரு சராசரி கூடைப்பந்தாட்ட வீரரால்கூட அவ்வளவு தூரம் குதிக்க முடியாது என்கின்றனர், மாடர்ன் டே ஐன்ஸ்டீன்கள்.

இடது பக்க விங்கரான ரொனால்டோ, இன்று கால்பந்தை உதைத்துக் கொண்டிருக்கும் பல கோடி கால்களின் ரோல் மாடல். இவரும் மெஸ்ஸியும்தான் கால்பந்தின் தல–தளபதி. ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் 31 வயதான ரொனால்டோ, இதுவரை 548 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தி உள்ளார்.

தனது ஸ்டைலான ஆட்டத்தால் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைல், சிக்ஸ் பேக் என்று ஒவ்வொரு தனித்திறமைக்கும் தனித்தனியாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு தடுப்பாட்டக்காரரும் வெறுக்கும் ஒரு கோல் மெஷின். தொடர்ந்து 6 சீசன்களில் 50க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்தவர் என்ற அசாத்திய சாதனையின் சொந்தக்காரனை எந்த எதிரணி வீரன்தான் விரும்புவான்!

ரொனால்டோவின் கால்களில் பந்து சிக்கினால், அதற்கே தலைசுற்றல் ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு சுழன்று, சுழற்றி ஆட்டம் காட்டுவார் ரொனால்டோ. பெனால்டி, ஃப்ரீ கிக், ஹெடிங், டிரிபிளிங் என கால்பந்தின் அனைத்து டிபார்ட்மென்டிலும் டிஸ்ட்ங்ஷன் அடித்தவர் சி.ஆர்.7. இவரது ஃப்ரீ கிக்குகள் எல்லாம் 130 கி.மீ வேகத்தில் பாய்ந்து கோல் கீப்பருக்கு அல்லு கிளப்பிவிடும்! கால்பந்து ஆட்டத்தின் 90 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த ஒரேயொரு வீரர் ரொனால்டோ தான்.

போர்ச்சுகலின் மதீரா நகரில் பிறந்த ரொனால்டோ தனது 15 வயதிலேயே சீரற்ற இதயத்துடிப்பால் பாதிக்கப்பட்டவர். எப்படிப்பட்ட விளையாட்டு வீரனையும் காலி செய்துவிடும் இப்பிரச்சனையை ரொனால்டோ வெல்லக் காரணம், அந்த இதயம் முழுவதையும் அவர் கால்பந்தால் நிரப்பியிருந்தார். 16 வயதிலேயே ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக அறிமுகமான ரொனால்டோ அடுத்த எட்டே வருடங்களில் ரியல் மாட்ரிட் அணியால் 132 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இன்றைய ரூபாய் பதிப்பில் சுமார் 885 கோடி!) வாங்கப்பட்டு உலகின் காஸ்ட்லி வீரர் எனும் அளப்பரிய சாதனை படைத்தார்.ஆனால் இடைப்பட்ட அந்தக்காலம் அவருக்கு மகிழ்ச்சி மட்டும் நிரம்பியதாக இல்லை. ஏகப்பட்ட சவால்கள் எத்தனையோ தூற்றல்கள், எண்ணற்ற பிரச்சனைகள். ஆனால் அனைத்தையும் தாண்டி தன்னை பலப்படுத்திக்கொண்டே இருந்தார் ரொனால்டோ. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் தூண்டுகோலாக பலரின் ஊக்கம் இருக்கும். ஆனால் ரொனால்டோவின் வெற்றிகள் தூற்றல்களால் தூண்டப்பட்டவை.

2006 உலகக்கோப்பை போட்டியின்போது தன்னோடு மான்செஸ்டர் யுனைடட் அணியில் விளையாடும் வெய்ன் ரூனியின் மீது குற்றம் சுமத்தி சிவப்பு அட்டை பெற்றுத் தந்தார் ரொனால்டோ. அதனால் அந்த ஆண்டு பிரீமியர் லீக் தொடர் முழுவதும் சொந்த அணி வீரர்களே ரொனால்டோவை வசைபாடினார்கள். அதுவரை ஒரு நல்ல விங்கராக மட்டுமே இருந்த ரொனால்டோ, அதன்பின்னர்தான் ஒரு கோல் மெஷினாக மாறினார். தன்னை இழிவுபடுத்தும் ரசிகர்களுக்குத் தன் கால்களால் பதில் சொல்ல நினைத்தார். செல்ஃபிஷ் பிளேயர் என அனைவராலும் கருதப்பட்ட ரொனால்டோ, தனது பயிற்சியாளருடன் ‘ஒன்-டூ-ஒன்’ பயிற்சியை அல்லும் பகலும் நேரமும் வலியும் பாராமல் மேற்கொண்டார். விளைவு அந்த சீசனில் ரொனால்டோ தான் டாப் ஸ்கோரர்.

ஒரு போட்டியில் அவரை எதிர்த்து விளையாடிய பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணி ரசிகர்களே ரொனால்டோவிற்கு ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுத்தார்கள். அதுதான் சி.ஆர்.7. பின்னர் மாட்ரிட் அணியில் இணைந்து ரொனால்டோ செய்த சாதனைகளை வரலாறு பேசும்!

அன்று முதல் இன்றுவரை தனது திறமையின் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு உடனடியாக தனது ஆட்டத்தால் பதிலளித்து வருகிறார் ரொனால்டோ. தனது கிளப் அணிகளுக்காக பல கோப்பைகளை வென்று தந்தாலும் “ரொனால்டோவால் தங்கள் தேசிய அணிக்கு கோப்பையை வென்றுத் தர முடியாது” என்று பலரும் ஆருடம் கூறினார்கள். சில வாரங்கள் முன்பு தோல்வியின் விரக்தியால் மெஸ்ஸி ஓய்வுபெற, “இந்த மாதம் ரொனால்டோவும் ஓவர்” என்று எதிர்பார்த்தார்கள் பலரும்.

இந்த யூரோ தொடரின் தொடக்கத்தில் சுமாரான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்த, அவரைப் பற்றித் தவறாய் பேசியவர்களுக்கெல்லாம் அது டானிக்காக அமைந்தது. ஆனால் அதற்கெல்லாம் சோடை போய்விடுவாரா ரொனால்டோ. ஆசிரியை ஒருவர் அவமதித்ததற்காக 14 வயதிலேயே பள்ளியைவிட்டு நின்றவர் அவர். உயிருக்கும் மேலான தனது கால்பந்து திறமையைச் சந்தேகித்தால்?.... அமைதியாய் இருந்த எரிமலை சீரியது. ஹங்கேரிக்கு எதிரான கடைசிப் போட்டியில் தோல்வியை நோக்கி போர்ச்சுகல் சென்றுகொண்டிருக்க, அடுத்தடுத்த 2 கோல்கள் அடித்து அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ரொனால்டோ.

அரையிறுதியில் சக வேல்ஸ் நாட்டவரான மாட்ரிட் வீரர் பேலேவிடம் ரொனால்டோ சரண்டர் ஆகிவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால் அப்பொழுதுதான் சிங்கம் முழு சீற்றத்துடன் கிளம்பியது. அணியின் 2 கோல்களிலும் பங்காற்றி இத்தொடரில் 90 நிமிட அவகாசத்தில் போர்ச்சுகல் பெற்ற ஒரே வெற்றியின் ஒரே காரணமாக விளங்கினார் ரொனால்டோ. 3 பாலன் டி ஓர் விருதுகள், 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 4 ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதுகள் என எண்ணற்ற விருதுகள் வாங்கிய மகத்தான அந்த வீரனின் கண்கள் யூரோ கோப்பையை ஏந்தியபோது முதன்முறையாக கலங்கின.

தனது நாட்டு மக்களுக்காக சாதிக்க வேண்டும் என்று இத்தனையாண்டு கால தனது போராட்டத்தின் இறுதியாட்டத்தில் காயத்தால் அவர் பாதியிலேயே கண்கலங்கி வெளியேறியபோது மெஸ்ஸியின் ரசிகன் கூட கண்கலங்கியிருப்பான்.

கால்பந்து மட்டுமல்ல, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொனால்டோ தூற்றல்களை சந்திக்காமல் இல்லை. தலைக்கனம் பிடித்தவர், ஆக்ரோஷக்காரர், கூத்தாடி என்றெல்லாம் கூட இவ்வுலகம் அவரைப் பழித்துள்ளது. ஆனால் ரொனால்டோவின் இதயத்திற்குள் இருக்கும் ஈரம் இவ்வுலகம் முழுமையாக அறியாது. தன் தந்தை குடியால் இறந்தவர் என்பதால் இதுநாள் வரை மதுவைத் தொடாதவர் ரொனால்டோ. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடலெல்லாம் பச்சை குத்திக்கொள்ள, ‘பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்த தானம் செய்ய முடியாது’ என்பதற்காகவே பச்சை குத்திக்கொள்ளாத ஒரு மகத்தான மனிதன் ரொனால்டோ.

தன் சொந்த ஊரில் புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று சத்தமில்லாமல் இவர் செய்துவருவது எல்லாம் விளையாட்டையும் தாண்டி ஒரு மனிதநேயம் மிக்கவராய் அவரை நிலைநிறுத்தியுள்ளது.

போர்ச்சுகல் ரசிகர்களின் ஆசை மட்டுமல்ல, 10வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற ரியல் மாட்ரிட் ரசிகர்களின் 12 ஆண்டு காலக் கனவை, 2014 ல் நனவாக்கியதும் ரொனால்டோதான். யாரும் செய்திடாத சாதனையான ஒரே தொடரில் 17 கோல்கள் அடித்து தன் அணியின் வெற்றிக்கு ஆணி வேராய் விளங்கினார் ரொனால்டோ. அத்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டாமென டாக்டர்கள் அறிவுறுத்தியும் “சில வெற்றிகளுக்காக சில தியாகங்கள் செய்துகொள்ள வேண்டும். சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று அணிக்காக ரிஸ்க் எடுத்தவர் ரொனால்டோ. எந்தத் தருணத்திலும் தன்னை நம்புபவர்களுக்காக எதையும் செய்ய வேண்டுமென நினைப்பவர்.

யூரோவின் இறுதிப் போட்டியில் முழங்கால் காயத்தால் வெளியேறியபோது, அவரது கண்ணீரில் “நம் நாட்டு மக்களின் கனவை நனவாக்க முடியவில்லையே” என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. ஆனால் கோப்பையை வென்ற பிறகு, அதைத் தனது தலைக்கு மேலாக ரொனால்டோ தூக்கியபோது, அவர் கண்களில் வழிந்த கண்ணீர் நமக்குக் காட்டியதெல்லாம் போர்ச்சுகல் என்னும் ஒரு தேசத்தின் மகிழ்ச்சி.

போர்ச்சுகல் எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் விளையாடியிருக்கட்டும். இப்போது கோப்பை அவர்களுடையது. ரொனால்டோவுடையது. தன் திறமையின் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு, அரையிறுதிப் போட்டியில் தான் வாங்கிய 'ஆட்ட நாயகன்' விருதின் மூலம் ரொனால்டோ சொல்வது இதுதான், “ வந்துட்டேன்னு சொல்லு. முதல் பாலன் டி ஓர் அவார்டு வாங்குறப்ப எப்படிப் போனாரோ அப்படியே சி.ஆர்.7 வந்துருக்கார்னு போய் சொல்லு!”

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

Save